சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வம். இவருக்கு 17 வயதில் மகன் உள்ளார். அவர், பிளஸ் -1 படித்து வருகிறார். பெற்றோருடன் சண்டைப்போட்ட மாணவன், வீட்டிலிருந்து 63,500 ரூபாயைக் எடுத்துக் கொண்டு பஸ் மூலம் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்தார். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து எங்குச் செல்வது எனத் தெரியாமல் மாணவன் விழிபிதுங்கினார்.
இந்தச் சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட கோயம்பேடு காவலர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக், தனியாக நின்றுக் கொண்டிருந்த மாணவனிடம் விசாரித்தனர். அப்போது மாணவன், வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்குத் தனியாக வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தார். அதைக்கேட்ட போலீஸார் மாணவனை வீட்டுக்கு திரும்பி செல்லும்படி அறிவுறுத்தினர். அப்போது, மாணவன் வீட்டுக்குச் செல்ல மறுத்திருக்கிறார். அதனால் போலீஸார் மாணவன் வைத்திலிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் காவலர்கள் மாணவனை எச்சரித்துவிட்டு சென்றுவிட்டனர்.
பணத்தைப் பறிக்கொடுத்ததால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மாணவன் தவித்தார். பின்னர் தந்தை அந்தோணி செல்வத்துக்கு போன் மூலம் மாணவன் தகவல் தெரிவித்தார். ஏற்கெனவே மகனைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த அந்தோணி செல்வம், உடனடியாக சென்னை புறப்பட்டு வந்தார். பின்னர் கோயம்பேடு காவல் நிலையத்தில் அந்தோணி செல்வம் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் மாணவனிடம் பணம் பறித்துச் சென்ற காவலர்கள் யாரென்று கோயம்பேடு போலீஸார் விசாரித்தனர்.
இதற்கிடையில் மாணவனின் தந்தையிடம் போனில் பேசிய காவலர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக், புகாரை வாபஸ் பெறுங்கள், பணத்தை திரும்ப தந்துவிடுகிறோம் என்று கூறியிருக்கின்றனர். அந்தத் தகவலையும் அந்தோணி செல்வம் உதவி கமிஷனர் ரமேஷ்பாபுவிடம் கூறினார். அதையடுத்து உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மாணவனிடம் பணம் பறித்த குற்றச்சாட்டின்பேரில் காவலர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். அதன்பேரில் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
மாணவனிடம் பணம் பறித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
நடிகை ஶ்ரீதேவி தொடங்கி ஸ்ருதிஹாசன் வரை நடிகைகள் பலரும் அழகு சிகிச்சைகள் எடுத்துக்கொள்கிறார்கள். முதல் படத்தில் நடித்த தோற்றம் பத்து படங்களுக்குப் பின் இருப்பதில்லை... காரணம் அழகு சிகிச்சைகளே. அழகு சிகிச்சையின் மூலம் எப்போதும் இளமையாக இருப்பது, முகவெட்டுத் தோற்றத்தை மாற்றிக்கொள்வது எனப் பலவகையான மேஜிக்குகளை நடத்திவிட முடிகிறது. ஆனால், அதே நேரம் அழகு சிகிச்சைகளில் நிறைய ஆபத்துகளும் இருக்கின்றன. சமீபத்தில்கூட நடிகை ரைசா வில்சன் பொருத்தமில்லாத அழகு சிகிச்சையை மருத்துவர் செய்துவிட்டதாக முகம் வீங்கிய நிலையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது சார்ந்த பிரச்னைகள் ஒரு புறம் இருந்தாலும், உண்மையில் அழகு சிகிச்சைகள் பாதுகாப்பானவையா? அழகு சிகிச்சைகள் செய்துகொள்ளும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது தொடர்பான தகவல்களைப் பகிர்கிறார் காஸ்மெட்டிக் சர்ஜன் சசிகுமார் முத்து...
``எதற்கெல்லாம் அழகு சிகிச்சைகள் இருக்கின்றன?"
``வழுக்கை விழுந்த இடத்தில் செயற்கையான முடி வளரச்செய்வது தொடங்கி, உடலில் உள்ள தேவையில்லாத சதைகளை நீக்குவது, குறிப்பிட்ட உடல் பாகத்தைப் பெரிதுபடுத்துவது, இளமையான தோற்றத்தைத் தக்க வைப்பதற்கான அழகு சிகிச்சைகள், விபத்து காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது, முகவெட்டுத் தோற்றத்தை மாற்றுவது என ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு வகையான அழகு சிகிச்சை இருக்கிறது."
``அழகு சிகிச்சை செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வா?"
``நிச்சயமாக இல்லை. அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர், கெமிக்கல், ஃபில்லர் போன்ற வகையில் தீர்வு காண்பது என இரண்டு வகையான அழகு சிகிச்சைகள் இருக்கின்றன. அழகு சிகிச்சை செய்துகொள்ள வருபவர்களின் தேவையைப் பொறுத்து சில வழிமுறைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் அதன் பின் சிகிச்சை வழங்கப்படும். சில பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை மட்டும்தான் தீர்வாக இருக்க முடியும். அதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டு தெளிவு அடைந்த பின், அவர்களின் ஒப்புதலுடன் கையொப்பம் பெற்ற பின்பே சிகிச்சைகள் வழங்கப்படும்."
``அழகு சிகிச்சை செய்துகொள்ளும் முன் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்?"
``அழகு சிகிச்சை என்பது தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே செய்துகொள்ளப்படுகிறது. இதில் எந்தவிதமான மெடிக்கல் எமர்ஜென்சியும் இல்லை. அதனால் உடனே மாற்றம் ஏற்பட்டுவிட வேண்டும் எனவும் ஒரே நாளில் அழகாகிவிட வேண்டும் என்றும் அவசரப்படக் கூடாது. சிலர், `நான் இன்று சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து வந்துவிட்டேன் இன்று சிகிச்சையை ஆரம்பித்து விடுங்கள்' என்றெல்லாம் மருத்துவர்களை வற்புறுத்துவார்கள். அழகு சிகிச்சையைப் பொறுத்தவரை அவசரம் ஆபத்தானது.
முதலில் உங்கள் பிரச்னை தொடர்பாக நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு உடனே ஓ.கே சொல்லாமல் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். என்ன மாதிரியான சிகிச்சை வலியுறுத்தப் பட்டதோ அந்தச் சிகிச்சை தொடர்பாக நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு அந்த மருத்துவரின் மீது நம்பிக்கை வர வேண்டும். இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனைகூட பெறலாம். சிகிச்சைக்குப் பின் உங்களால் எத்தனை நாள்கள் ஓய்வு எடுக்க முடியும் என்பதையெல்லாம் ஆராய்ந்து அதன் பின்னரே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சிகிச்சையில் மருத்துவர் அப்டேட்டுடன் இருக்கிறாரா என்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்."
``அழகு சிகிச்சைகள் செய்து கொண்டால் பக்க விளைவுகளைத் தவிர்க்கவே முடியாதா?"
``அழகு சிகிச்சைகள் செய்துகொள்ளும் எல்லாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. ஆனால், சிலருக்கு அப்படி ஏற்பட வாய்ப்பு உண்டு. அது குறித்த அனைத்து சந்தேகங்களையும் மருத்துவரிடம் தெளிவுபடுத்திக்கொண்டே சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போன்று சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னரும் கூட 24 மணி நேரத்துக்கு கடினமான உடற்பயிற்சிகள், ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது. மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறைகளையும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்."
``எந்த வயதிலிருந்து அழகு சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளலாம்?"
``எந்தச் சிகிச்சையாக இருந்தாலும் 16 வயதுக்கு மேல் எடுத்துக்கொள்வது நல்லது. மேல் அண்ணப் பிளவு போன்ற பிறவிக் குறைபாடுகளுக்கு குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலேயே சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன."
``அழகு சிகிச்சைகள் தவிர்த்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருள்களும் ஆபத்தானவையா?"
``இயற்கை அல்லாத அனைத்துப் பொருள்களுமே ஆபத்தானவைதான். ஆனால், அழகு சாதனப் பொருள்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. எனவே, விலை அதிகமாக இருந்தாலும் தரமான பொருள்களைத் தேர்வு செய்து வாங்குங்கள். சிலருக்கு சில கெமிக்கல்கள் அலர்ஜியை ஏற்படுத்தும். அதிக பணம் செலவழித்து வாங்கிவிட்டோமே என்று அலர்ஜியையும் பொருட்படுத்தாமல் அந்தப் பொருளைப் பயன்படுத்தாதீர்கள். அலர்ஜி, அரிப்பு, எரிச்சல் ஏற்படுகிறது எனில் அந்தப் பொருள் உங்களுக்குப் பொருந்தவில்லை என்பதே உண்மை. கூடுமானவரை தினமும் அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். விலை மலிவான லோக்கல் பிராண்டுகளைப் பயன்படுத்துவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூட வாய்ப்பு இருப்பதாக சில ஆய்வுகள் எச்சரிக்கின்றன. எனவே, கவனமாக இருப்பது அவசியம்."
``நடிகை ரைசா அழகு சிகிச்சை எடுத்துக் கொண்டதால்தான் முகம் வீங்கியதாகப் பதிவிட்டிருந்தாரே... அது எதனால் நடந்திருக்கும்? தெர்மல் ஃபில்லர் சிகிச்சை என்பது என்ன?"
``நடிகை ரைசாவுக்கு தெர்மல் ஃபில்லர் சிகிச்சை வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். சிலருக்கு கண்ணுக்கு அடியில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றம் போன்று இருக்கும் அல்லது கருவளையம் போன்று நிறம் மாறியிருக்கும். இதைச் சரி செய்யவே தெர்மல் ஃபில்லர் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதில் ஹைலோரோனிக் ஆசிட் (Hyaluronic acid) கண்களுக்கு அடியில் ஊசியின் மூலம் செலுத்தப்படும். இந்த ஆசிட் செலுத்தப்பட்ட பின் உடலில் உள்ள நீர்ச்சத்தை கண்களுக்கு அடியில் குவிக்கும் செயல்பாடு உடலில் நடந்து சருமம் இளமையாக, ஃப்ரெஷ்ஷாக இருப்பது போன்று இருக்கும். இது ஒரு முறை செய்துகொண்டால் ஒன்பது முதல் பத்து மாதங்களுகு அதே தோற்றத்தில் இருக்கலாம். தேவைப்பட்டால் குறிப்பிட்ட மாதங்களுக்குப் பின் மீண்டும் செய்துகொள்ளலாம்."
இந்தச் சிகிச்சையின்போது செலுத்தப்படும் ஊசி ரத்தநாளங்களில் பட்டிருந்தால் கண்களில் வீக்கம், ரத்தக்கசிவு இருக்கலாம். அல்லது சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் கடினமான உடற்பயிற்சிகள் செய்வது, மது அருந்துவது போன்ற செயல்களைச் செய்திருந்தாலும் இது நிகழலாம். ஆனால் ஐஸ்கட்டி ஒத்தடம் மூலம் இரண்டே நாள்களில் இது சரிசெய்து விடக்கூடிய ஒரு பிரச்னையே."
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பதை அங்குள்ள கள நிலவரங்களின் மூலமாக முன்பே ஓரளவுக்கு கணிக்க முடிந்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதை கணிப்பது சிரமமானதாகவே இருந்துவந்தது. 2016-ல் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 291 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க., வெறும் மூன்று தொகுதிகளில்தான் வெற்றிபெற்றது.
அதன் பிறகு, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க தன் செல்வாக்கை அதிகரிப்பதற்கான வேலைகளில் முனைப்புக் காட்டத் தொடங்கியது. அந்த நேரத்தில்தான், இடதுசாரிகளையும் காங்கிரஸ் கட்சியையும் தனது அதிகார பலத்தின் மூலம் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரம் காட்டியது. அதில் வெற்றியும் பெற்றது. முக்கிய எதிர்க் கட்சிகள் ஆளும் கட்சியினரின் அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் காலிசெய்யப்பட்ட நிலையில், காலியாக அந்த இடத்துக்கு பா.ஜ.க எளிதாக வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க வலுவாகக் காலூன்றிவிட்டது. மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருப்பதால், அதைப் பயன்படுத்தியும் தன் செல்வாக்கை பா.ஜ.க அங்கு அதிகரித்துக்கொண்டது. அது, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. அங்குள்ள 42 மக்களவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது.
அடுத்ததாக, 2021 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து பா.ஜ.க செயல்பட ஆரம்பித்தது. 2021-ல் மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பதை தனது மிக முக்கியமான அஜெண்டாவாக வைத்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கடி மேற்கு வங்கத்துக்குப் படையெடுத்தனர். அங்கு பா.ஜ.க அலை வீசுவதாக அந்தக் கட்சியினர் கூறிவந்தனர். சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றிபெறும் என்று மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கூறிவந்தார்கள். மே 2-க்குப் பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி முன்னாள் முதல்வராக ஆகிவிடுவார் என்றெல்லாம் அவர்கள் பேசிவந்தார்கள்.
பா.ஜ.க-வுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவந்த நிலையில், அங்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஒரு மாத காலம் நடைபெற்ற தேர்தல், ஏப்ரல் 29-ம் தேதி நிறைவடைந்தது. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்துள்ளன. வெளியாகியுள்ள ஒன்பது கருத்துக்கணிப்புகளில், திரிணமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று ஆறு கணிப்புகள் கூறியுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் 164-176 (42 சதவிகித வாக்குகள்) இடங்களையும், பா.ஜ.க 105-115 (39.1 சதவிகித வாக்குகள்) இடங்களையும் இடதுசாரி 10-15 இடங்களையும் பிடிக்கும் என்று ஈ.டி.ஜி ரிசர்ச் தெரிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் 158 இடங்களையும், பா.ஜ.க 115 இடங்களையும், இடதுசாரி 19 இடங்களையும் பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் சி ஓட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் 152 – 172 இடங்களையும் பா.ஜ.க 112 – 132 இடங்களையும் இடதுசாரி 10 – 15 இடங்களையும் பிடிக்கும் என்று பி மார்க் தெரிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் 142 . 152 இடங்களையும் பா.ஜ.க 125 – 135 இடங்களையும் இடதுசாரி 16 – 26 இடங்களையும் பிடிக்கும் என்று போல் ஸ்ட்ரீட் கருத்துக்கணிப் கருத்துக்கணிப்பு வெளியயிட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் 180 இடங்களையும் பா.ஜ.க 108 இடங்களையும் பிடிக்கும் என்று டுடேஸ் சாணக்கியாவின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க 134 – 160 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் 130 – 156 இடங்களையும் பிடிக்கும் என்று இந்தியா டுடே ஆக்சிஸ் கருத்துக்கணிப்பும், பா.ஜ.க 162 – 185 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் 104 - 121 இடங்களையும் இடதுசாரி 3 – 9 இடங்களையும் பிடிக்கும் என்று ஜான் கீ பாட் கருத்துக்கணிப்பும் தெரிவித்துள்ளன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் பெரும்பாலானவை திரிணாமுல் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் என்றும், மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமருவார் என்று தெரிவித்துள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். மம்தா பானர்ஜியின் பத்தாண்டு கால நல்லாட்சிக்கு மக்கள் பேரதரவு அளித்துள்ளார்கள் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பா.ஜ.க நிராகரித்துள்ளது. அசாமில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஏற்றுக்கொள்ளும் பா.ஜ.க தலைவர்கள், மேற்கு வங்கம் தொடர்பான கருத்துக்கணிப்புகளை மட்டும் ஏற்க மறுக்கிறார்கள். “மேற்கு வங்க அரசியலின் கள நிலவரம் தெரியாமல் இந்த கருத்துக்கணிப்புகளை எடுத்திருக்கிறார்கள். ஏராளமான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த வரலாறு அந்த மாநிலத்துக்கு உண்டு. எனவே, அங்குள்ள மக்கள் வெளிப்படையாக தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க மாட்டார்கள். எனவே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நிராகரிக்கிறோம். மேற்கு வங்கத்தில் அறுதிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியமைக்கும்” என்று பா.ஜ.க-வின் பொதுச்செயலாளரும் மேற்கு வங்க பா.ஜ.க-வின் பொறுப்பாளருமான கைலாஷ் விஜயவர்க்கியா கூறியிருக்கிறார்.
“2011-ல் இடது முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன. ஆனால், மம்தா பானர்ஜி வெற்றிபெற்றார். அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 18 இடங்களில் பா.ஜ.க வெற்றிபெறப்போகிறது என்பதைக் கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனங்கள் கணிக்கத் தவறிவிட்டன. இந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது” என்பது பா.ஜ.க-வினரின் கருத்தாக இருக்கிறது.
ஆனால், அறுதிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று அந்தக் கட்சியினர் உறுதியுடன் கூறிவருகிறார்கள். காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக சக்கர நாற்காலியில் பிரசாரம் செய்துவந்த மம்தா பானர்ஜி, மே 2-க்குப் பிறகு முதல்வர் நாற்காலியில் அமருவார் என்று திரிணாமுல் காங்கிரஸார் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இன்னும் ஒரு நாளில் எல்லாம் தெரிந்துவிடப்போகிறது...!
- என்றெல்லாம் சொல்லிப் பழகிய நமக்கு, உழைப்பை மறுத்தால்தான் உயர்வு வரும் என்று ஒருமுறை உலகமே போராடியிருக்கிறது என்பது புதிதாக இருக்கிறதல்லவா? ஆனால் உண்மையில் அதுதான் நடந்தது.
ஆம்... நீண்ட காலமாய் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அனைத்திலும், தினமும் பன்னிரண்டு மணிநேரம் முதல் பதினெட்டு மணிநேரம் வேலை செய்து கொண்டிருந்த மனிதர்கள் முதன்முதலாய் 18ம் நூற்றாண்டில் மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள்.
நிர்வாகங்களும், மேல்தட்டு மக்களும், அரசும், தமது பணியாளர்களை "வேலை செய், வேலை செய்" என்று வேலை வாங்குவதால் யாருக்குப் பலன் என்று யோசித்த மக்கள் 'தொடர் உழைப்பை மறுப்போம்... என்ன ஆகும்?' என்று கேள்வியெழுப்பத் தொடங்கினார்கள்.
மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் எழுதிய பொதுவுடைமை அறிக்கையைப் பின்பற்றி உலகெங்கும்... குறிப்பாக இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில், 1880களில் தங்களது 18 மணிநேர வேலை நேரத்தைக் குறைப்பதற்காகப் போராடத் தொடங்கிய தொழிலாளர்கள், ஒருகட்டத்தில் அதை 'எட்டு மணிநேர இயக்கமாகவே' மாற்றினார்கள்.
"எட்டு மணிநேர உழைப்பு...
எட்டு மணிநேர ஓய்வு...
எட்டு மணிநேர வாழ்க்கை..."
என்பது சட்டமயமாக்கப்பட வேண்டும், அது உலகம் முழுவதும் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரையும் சென்றடைய வேண்டும்..."
என்ற தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திய அமெரிக்கத் தொழிலாளர்கள், 1886ம் ஆண்டு, மே 1 அன்று சிகாகோ நகரின் ஹே மார்க்கெட் வளாகத்தில் பெருந்திரளாகக் கூடினர். அவர்களை அடக்க இலினாய்ஸ் தேசியப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு, அதைத் தொடர்ந்த வெடிகுண்டு தாக்குதல், அதில் உயிரிழந்த தொழிலாளர்கள் என மாறியது இந்த 'ஹே மார்க்கெட் அடக்குமுறை'. மே 1 அன்று பற்றிய தீ, பிற்பாடு உலகெங்கும் வேகமாகப் பரவியது.
அமெரிக்காவைத் தொடர்ந்து உலகெங்கும் வலிமையுடன் நடந்த தொழிலாளர்களின் போராட்டங்கள், அது வென்றெடுத்த வெற்றி என்று உண்மையில் ஒரு வலிமிகுந்த வரலாற்றின் இனிப்பான முடிவுதான் இந்த மே தினம். அத்தனை இழப்புக்குப் பிறகுதான் அவர்கள் அடிமை ஸ்தானத்தில் இருந்து உழைப்பாளிகள் ஆனார்கள்!
ஆக... தினமும் பதினெட்டு மணிநேரம் வரை உழைத்த உழைப்பாளிகள், 'எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யமாட்டோம்' என உழைப்பை மறுத்த தினம்தான் இந்த மே தினம் என்பதும், அந்த வெற்றிதான் இன்றைய மே தினக் கொண்டாட்டங்களும். நமது நாட்டில், முதன்முதலாக மே தினக் கொண்டாட்டம் 1923ல் சென்னையில் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் தலைமையில் நடந்தது என்பதும், அதனைத் தொடர்ந்துதான் கராச்சி, பாம்பே, மற்ற பிற இடங்களிலும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது..
அதீத உழைப்பை மறுத்த பின்னரே தங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்த உழைப்பாளர்கள், அந்த ஓய்வில் யோசிக்க ஆரம்பித்து, அதைச் செயல்படுத்தும்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையின் தரம் உயர்வதையும், தமது வாழ்வு அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதையும் உலகெங்கும் உணரத் தொடங்கினார்கள்.
"ஆயிரந் தொழில் செய்திடுவீரே...
பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன்..."
என்று மகாகவி போற்றும் உழைப்பாளிகள் அனைவரும் அடுத்த கட்டத்தை அடைய இந்த உழைப்பாளர் தினத்தில் வாழ்த்துகிறோம்.
புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த பெருந்தொற்றுச் சூழலில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. அதனடிப்படையில் ஏழை மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க அரசின் பாண்லே கடைகளில் 1 ரூபாய்க்கு முகக்கவசமும், 50 மி.லி கொண்ட கிருமிநாசினி பாட்டில் 10 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் பாண்லே பாலகத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஜிப்மர் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள நான்கு பாண்லே பாலகங்களில் இந்த 5 ரூபாய் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பை பொறுத்து அனைத்து பாண்லே பாலகங்களிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்றார்.
குஜராத் மாநிலம் பரூச் என்ற இடத்தில் அதிகாலை 1 மணிக்கு வெல்பேர் ஹாஸ்பிட்டலில் திடீரென தீ பிடித்துக்கொண்டது. தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து மீட்பு பணியிலும் தீயை அணைப்பதிலும் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்தில் தீ முற்றிலும் அனைக்கபட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 நோயாளிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் உறங்கிய நிலையிலேயே தீயில் கருகி பரிதாபகரமாக உயிரிழந்தனர் .
மேலும் மீட்கப்பட்டவர்களில் சிலரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்ததாக போலீஸார் தெரிவித்தனர். உயிரிழந்த அனைவரும் கொரோனா நோயாளிகள் ஆவர். மருத்துவமனை படுக்கையில் நோயாளிகள் தீயில் கருகி அப்படியே இறந்து கிடந்தது அனைவரது நெஞ்சையும் பரிதவிப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. 4 மாடிகள் கொண்ட இம்மருத்துவமனையில் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு போதிய அளவு படுக்கைகள், ஆக்ஸிஜன் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மற்றொருபுறம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் அடிக்கடி தீவிபத்துக்களும் நடந்து வருவது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது.
தமிழகத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப்போவது எந்தக் கட்சி என்கிற கேள்விக்கு, நாளை விடை கிடைத்துவிடும். ஆனால், யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பதற்கேற்ப, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி ஓரளவுக்கு முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துவிட்டன. தேர்தலுக்கு முன்பாகவே பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. அவற்றில் பெரும்பாலும் `தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்' என்றே சொல்லப்பட்டிருந்தது. அதே கருத்தைத்தான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் உறுதி செய்திருக்கின்றன. குறைந்தபட்சம், 130 தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 190 தொகுதிகள் வரை தி.மு.க கூட்டணி கைப்பற்றக்கூடும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
அதனைத் தொடர்ந்து தி.மு.க நிர்வாகிகள் மேலும் உற்சாகமடைந்திருக்கின்றனர். அதே சூட்டோடு பதவி ஏற்புக்கான வேலைகளையும் தி,மு.க தலைமை, முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்போதும் போல, சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்திலேயே , தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்க இருப்பதாக தி.மு.க வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அதேபோல, கடந்த சில நாள்களுக்கு முன்பாகவே, அமைச்சரவைப் பட்டியலும் தயாராகிவிட்டது, இந்தமுறை சீனியர்களில் மூன்று பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படவுள்ளது, இளைஞர்கள் நிரம்பிய ஒரு கேபினட்டாகத்தான் வரும் அமைச்சரவை இருக்கும் என்றும் செய்திகள் சுற்றி வருகின்றன. தவிர, கடந்தமுறை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு உள்ளிட்ட சிலருக்கு இந்தமுறை அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படமாட்டாது, மாற்றுப் பதவிகள் வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் தீயாக உலாவும் மேற்கண்ட செய்திகள் குறித்து தி.மு.க வட்டாரத்தில் பேசினோம், ''நாங்கள்தான் அடுத்து ஆட்சி அமைக்கப்போகிறோம். அதில் 100 சதவிகிதம் உறுதியாக இருக்கிறோம். புதிய அரசு சட்டப்படி மே 22-ம் தேதிக்குள் பதவி ஏற்றுவிடவேண்டும். மே 2-ம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், மே 10-ம் தேதிக்குள் பதவியேற்றுவிடவேண்டும் எனத் தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் சாய்ஸாக, மே 6-ம் தேதி காலை 11 மணிக்கு என நாள் குறித்துக்கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தேதிக்குள் ஏற்பாடுகளைச் செய்ய முடியாவிட்டால் ஒன்பதாம் தேதி பதவியேற்றுவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, சீனியர்களில் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு தவிர யாருக்கும் அமைச்சரவையில் இடம் இல்லை என்று ஒரு தகவல் சுற்றிவருகிறது. அது முற்றிலும் தவறு. முதல்வராக முதன்முறையாகப் பதவியேற்கும்போது எங்கள் தலைவர் அப்படியொரு முடிவை எடுக்க வாய்ப்பே இல்லை. வேட்பாளர் தேர்வு எப்படி இருந்ததோ அதேபோல்தான் அமைச்சரவைப் பட்டியலும் இருக்கும். சீனியர்கள் நிச்சயமாக இடம் பெறுவார்கள். அனைத்து சமூகங்களையும் பிரதிநித்துவப் படுத்தும் வகையில் அமைச்சரவை இருக்கும். குறிப்பிட்ட, முக்கியமான சில துறைகள் இளைஞர்கள் வசம் ஒப்படைக்கப்படும். ஆனால், ஒரு வருடத்தில் அமைச்சரவை மாற்றம் என்பது நிச்சயமாக இருக்கும். கலைஞரின் அமைச்சரவையைப் போல, ஒருவரே ஐந்தாண்டுகளுக்கு முழுமையாக நீடிக்க முடியாது. அமைச்சர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு யார் உதவியாளர்களாக இருக்கவேண்டும் என்கிற லிஸ்ட்டும் தயாராகிவிட்டது. தலைவரின் குடும்பத்தில் இருந்து அதற்கான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன'' என்றவர்கள் தொடர்ந்து அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தவர், இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசினர்,
"வடக்கில் வன்னியர், பறையர், தெற்கில் முக்குலத்தோர், பள்ளர், மேற்கில் கவுண்டர், அருந்ததியர் என சமூக வாக்குகள் நிலத்துக்கு ஏற்றார் போல சிதறிக் கிடக்கிறது. அதுவே இஸ்லாமிய சமூக வாக்குகள் மாநிலம் தழுவிய அளவில் உள்ளது. இந்தத் தேர்தலில் இஸ்லாமிய வாக்காளர்களில் அதிகமானோர் தி.மு.க-வுக்கு வாக்களித்து இருப்பதாக தகவல் வருகிறது. தி.மு.க சார்பில் போட்டியிட்ட 173 வேட்பாளர்களில் ஆவடி நாசர், செஞ்சி மஸ்தான் மற்றும் பாளையங்கோட்டை அப்துல் வஹாப் ஆகிய மூவர்தான் இஸ்லாமிய வேட்பாளர்கள். இவர்களில் நாசருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெருவாரியாக வாங்கிக் கொண்டு ஒருவருக்கு மட்டுமே கேபினட் கொடுப்பது சரிவராது என சீனியர்கள் நாங்கள் ஸ்டாலினிடம் சொல்லி இருக்கிறோம். அதிலும், ஓவைசி அ.ம.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போதும் உருது முஸ்லீம்களும் தி.மு.க-வுக்குத்தான் வாக்களித்துள்ளனர். அதனால், இந்த முறை உருது முஸ்லீம் ஒருவருக்கும் கேபினட்டில் இடம் கொடுக்க வேண்டும். இதற்காக ஆளைத் தேட வேண்டியது இல்லை. நாசரும், அப்துல் வஹாபும் தமிழ் இஸ்லாமியர்கள் என்றால் செஞ்சி மஸ்தான் உருது இஸ்லாமியர். அதனால், ஒரு தமிழ் இஸ்லாமியருக்கும், ஒரு உருது இஸ்லாமியருக்கும் கேபினட்டில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற குரல் கேட்கிறது. அதேபோல பட்டியல் சமூகத்தவரில் தேவேந்திரகுல வேளாளர், பறையர், அருந்ததியர் என முன்று சமூகங்களிலும் தலா ஒருவருக்கு அமைச்சரவை அல்லது துணை சபாநாயகர் பதவி கொடுக்கப்படும் என்றும் தெரிகிறது" என்கிறார்கள்.
உலகின் எல்லா நாடுகளையும் இன்றைய தேதியில் நடுநடுங்க வைக்கும் ஒற்றைச் சொல் கொரோனா... மனிதன் மீது இயற்கை தொடுத்திருக்கும் போர் கொரோனா... இந்த நூற்றாண்டின் பெருந்துயரம் கொரோனா...
சரி, இந்தக் கொரோனாவை நாம் கட்டுப்படுத்தியிருக்கவே முடியாதா? தமிழில் ஒரு சொல்லாடல் உண்டு. 'களையை முளையிலே கிள்ளியெறிய வேண்டும்' என்று. ஆம், சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா என்ற களை முளைக்கத் தொடங்கும்போதே கிள்ளியெறிந்திருக்க வேண்டும். அப்படியொரு செயலைத் தான், செய்ய முற்பட்டது ஒரு நாடு. அப்படியா! எந்த நாடு? ஏன் அதைச் செய்யவில்லை? என்ற கேள்விகள் எழலாம்.
அந்த நாடு, தைவான்!
2019 டிசம்பர் மாதம் கொரோனாவின் தாக்கம் ஆரம்பிக்கும் போதே உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) ஒரு புதிய வைரஸ் பரவுகிறது என எச்சரித்தது தைவான். ஆனால், WHO அதைக் கண்டுகொள்ளவில்லை. 'ஏன்' என்று நீங்கள் கேட்பதற்கு முன்னால் ஒன்றைச் சொல்கிறேன்...
ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் என எல்லா சர்வதேச அமைப்புகளும் தைவானை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க மறுக்கின்றன. சீனா இன்றளவும் தன் நாட்டின் ஒரு மாகாணம்தான் தைவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனால், சிறப்பு அந்தஸ்து கொடுத்து பல உலக அமைப்புகளில் தைவானை ஒதுக்கியே வைத்திருக்கின்றன.
சரி, 'நல்லதை யார் சொன்னால் என்ன? WHO நடவடிக்கை எடுத்திருக்கலாமே' என்று தோன்றுகிறதா?! அனைத்திற்கும் காரணம் சீனாவின் சர்வதேச பலம். WHO சீனாவின் வர்த்தக நலனைக் கருத்தில் கொண்டு இதை கண்டுகொள்ளாமல் விட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
வரலாறுகள் நமக்கு பல்வேறு பாடங்களைப் புகட்டினாலும், காலம் கடந்த செயல் பயனற்றதுதான். அந்த வகையில், கொரோனா இப்போது உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவையும்தான்!
அப்படியென்ன கோபம் தைவான் மீது சீனாவிற்கு?! வரலாற்றின் பக்கங்களைத் திருப்புவோம்
சீனாவின் கடற்கரையிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவு நாடுதான் தைவான். 36 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்நாட்டின் தலைநகரம் தைபே. இந்தத் தீவிற்கு ஃபர்மோசா (Formosa) என்ற பெயரும் உண்டு. அப்படியென்றால் 'அழகிய தீவு' என்று அர்த்தம். குயிங் (Qing) அரச வம்சத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது தைவான். 17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்களின் காலனி நாடாக ஆனது தைவான். அந்த நேரத்தில் சீனாவிலிருந்து தைவானுக்குப் பெருமளவில் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது.
ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே நடைபெற்ற போரில் சீனா தோல்வியடைந்ததும் 1895ல் இந்தத் தீவு ஜப்பானின் கைவசம் சென்றது. சீனாவில் நடைபெற்ற ராணுவ மற்றும் குடியரசு ஆட்சிக்கு எதிராக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாவோ தலைமையில் புரட்சியை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக 1949-ம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி (Communist party of China- CPC)யின் கட்டுப்பாட்டில் சீனா வந்தது. போரில் தோற்றுப் பின்வாங்கி தைவானுக்குச் சென்ற சீனாவின் ஆட்சியாளர் சியாங் கே சேக், தைவானில் சீன மக்கள் குடியரசை (People's Republic of China) நிறுவினார். க்யூமிண்டாங் கட்சியின் தலைவராக இருந்த அவர், தைவான் மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளை ஆட்சி செய்தார். 'உண்மையான சீனா இதுதான்' என பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.
அமெரிக்காவின் ஆதரவும் தைவான் பக்கம் இருந்தது. அதனால் ஐ.நா சபை உள்ளிட்ட அமைப்புகளில் தைவானே நிஜமான சீனாவாக கருதப்பட்டு இடம்பிடித்து வந்தது. ஆனால், உலகின் 'அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டைப் புறக்கணிப்பது சரியல்ல' என உலக நாடுகள் நினைத்தன. இதைத் தொடர்ந்து, 1971-ம் ஆண்டு ஐ.நா சபை தைவானின் இடத்தை சீனாவிற்கு வழங்கியது. அதன்பின் தைவான் தனிநாடு என்ற அங்கீகாரத்தை இழந்தது. 1975ல் சியாங் கே சேக்கும் மரணமடைய, கொஞ்சம்கொஞ்சமாக க்யூமிண்டாங் ஆட்சி முடிவுக்கு வந்தது. ராணுவ ஆட்சியின் இறுக்கம் தளர்ந்து, அங்கு ஜனநாயகம் மலர்ந்தது.
ஆனால், சீனாவுடனான சண்டை மட்டும் இன்றுவரை தொடர்கிறது. தைவான் தான், தனி நாடு என்கிறது. சீனாவோ அது தன் நாட்டின் ஒரு பகுதி என்கிறது. சீனாவில் சென்று தைவான் ஒரு தனி நாடு என்று நீங்கள் வாய்திறந்து சொல்லிவிடக் கூடாது. உடனே கைதுதான். அவ்வளவு உச்சப் பிரச்னையாகிக் கொண்டிருக்கிறது.
சீனாவிற்கு ஆதரவான சில சர்வதேச அமைப்புகள் தைவானுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லையென்றாலும், அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் தைவான் பக்கம் இருக்கிறது. தன் எதிரியின் எதிரி தனக்கு நண்பன் என்ற கதைதான்! தைவானும், சீனாவை எதிர்க்க தயாராகவே இருக்கிறது.
தைவான் பிரச்னை, சீனாவில், உய்குர் இன முஸ்லிம்கள் விவகாரம் என சீனப் பிரச்னையில் அமெரிக்கா தலையிட 'நெருப்புடன் விளையாட வேண்டாம்' என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தைவானை இந்தியா ஆதரிக்க வேண்டுமா?!
இந்தியா தைவானை ஆதரிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு முன், தைவான் இந்தியாவை எவ்வளவு ஆதரிக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். தைவான் நாட்டின் பிரதமராக இருக்கும் சாய் இங் வென் 'நல்ல மனம் படைத்த இந்தியர்களையும், இந்திய உணவுகளையும் எப்போதும் மறக்க முடியாது' என்று சமீபத்தில் கூறியிருந்தார். கூறியது போன்றே இந்த கொரோனா மாறுபட்ட அலையில் இந்தியா கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது இந்தியாவிற்கு உதவத் தயார் என ஆதரவுக்கரமும் நீட்டியிருக்கிறார். சீனாவும் இந்தியாவின் எல்லைப் பகுதி விஷயத்தில் தலையிட்டுக் கொண்டிருப்பதால், தைவானை இந்தியா ஆதரிக்கத்தான் வேண்டும். (உங்கள் கருத்தையும் கமென்ட்டில் சொல்லுங்கள்)
குட்டி நாடுதானே?!
2.36 கோடி மக்கள் தைவானில் வசிக்கிறார்கள். குட்டி நாடுதானே என யோசிப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். உலகத்தின் முக்கியமான ஒரு கம்பெனி தைவானில்தான் இருக்கிறது. அப்படி என்ன முக்கியம்?! அந்த கம்பெனிதான் தைவானை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்திருக்கிறது. அந்தக் கம்பெனியின் பெயர் TSMC (Taiwan Semiconductor Manufacturing Company, Limited).
ஒரு நாடு அதன் வளத்தின் அளவைக் கொண்டே உயர்ந்ததா, இல்லையா எனத் தீர்மானிக்கப்படுகிறது. முன்பு, தங்கம், எண்ணெய் போன்றவை பெரிய வளமாக கருதப்பட்டன. ஆனால் இந்த டிஜிட்டல் உலகில் மைக்ரோ சிப்கள்தான். அதைத் தயாரிக்கும் உலகின் பெரிய, முன்னணி கம்பெனி டி.எஸ்.எம்.சி (TSMC) தான். உலகின் பல நிறுவனங்களும், கம்பெனிகளும் இங்கு முதலீடு செய்திருக்கின்றனர். வருவாய் மட்டும் 1.07 ட்ரில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் பல லட்சம் கோடிகள். ஆப்பிள் கம்பெனியின் எல்லா சிப்களும் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.
தைவானில் 35% அதிகமான மக்கள் புத்த மதத்தையே பின்பற்றுகிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து வீதிகளும், முக்கிய இடங்களும் புத்த மத அடையாளத்துடன் அழகான காட்சியை வெளிப்படுத்தும்.
16 அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பழங்குடியின மக்களின் தாயகம் தைவான் ஆகும். இப்போதும் அங்கு பழங்குடியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றன. நாட்டின் அதிபர் சாய் இங்வென் பழங்குடியின வம்சாவளிப் பின்னணியை கொண்டவர்தான்.
சாய் இங்வென் தீவிர முயற்சியால் கொரோனாவை மிகவும் திறம்பட கையாண்ட நாடாக தைவான் மாறியது. கொரோனா தாக்கம் ஆரம்பித்த அடுத்த ஒரு மாதத்தில் கடுமையான நடவடிக்கை, அனைவருக்கும் முகக்கவசம் என அதிரடி காட்டத் தொடங்கினார் சாய் இங்வென். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தி சீனாவிற்கு அருகிலிருக்கும், சீனாவுடைய பகுதி எனச் சொல்லப்படும் நாடு கொரோனாவை வென்றதே ஆச்சர்யத்தில் ஆச்சர்யம்.
இப்படிப்பட்ட நாட்டையா, தலைப்பில் மிக அபாயகரமான நாடு எனக் குறிப்பிட்டீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. The Economist செய்தி நிறுவனம் 'The Most Dangerous Place in the Earth' என இந்நாட்டைச் சொல்லியிருக்கிறது. காரணம் முன்பு கூறியது போன்றே அமெரிக்கா, சீனா பிரச்னைக்கு முக்கிய காரணமாக தைவான் இருப்பது போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறது. ஜப்பானுக்கு அடுத்து தைவான்தான் இரண்டாவது பாதுகாப்பான நாடு என்று சிலர் கருத்துப்பதிவிட்டு வருகிறார்கள்.
தைவானை தனி நாடு இல்லை என்று சொல்பவர்களுக்கும், சீனாவின் அங்கம்தான் என்று சொல்பவர்களுக்கும் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன்.
”போர் பற்றியது அல்ல சோறு பற்றியது.”
உணவுப்பிரியர்களுக்கு தைவான் ஒரு சிறந்த இடம். தைவானின் தெருவோர உணவு வகைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. முட்டை, மாவில் செய்யும் பல வித்தியாசமான உணவுகள் தனித்துவமானவை. சீனர்கள் போல ஊர்வன, பறப்பன என இல்லாவிட்டாலும், ஆக்டோபஸ், பாம்பு, நண்டு, பன்றி போன்ற உணவுகளை மக்கள் விரும்பி உண்கிறார்கள். சரி, தைவான் சென்றால் அங்குள்ள உணவை ருசி பார்த்துச் சொல்லுங்கள்!
`கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது' என்றொரு பழமொழி உண்டு. கோவிட்-19 தொற்றுநோயின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தடுப்பூசிதான் கலங்கரை விளக்கமாகக் கண்ணுக்குத் தெரிகிறது. கோவிட்-19 மட்டுமல்ல உலகில் பல்வேறு நோய்களைத் தடுப்பதற்கும் தடுப்பூசிதான் ஒற்றை ஆயுதமாக உள்ளது.
தற்போது தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கு வரும் நிலையில், தமிழகத்தில் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி உற்பத்தி மையம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக ஒரு தடுப்பூசியைக்கூடத் தயாரிக்காமல் வெறும் கட்டடமாக நின்றுகொண்டிருக்கிறது. சென்னையை அடுத்த செங்கல்பட்டில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம். 2012-ம் ஆண்டு மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தபோது, மத்திய அரசின் 100 சதவிகித மானியத்துடன் இந்த மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின.
தமிழக அரசின் சார்பில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் ரூ.594 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் கட்டுமானப் பணிகள், மெஷின்கள் நிறுவுவது என அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. இந்த நிறுவனமானது மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் ஹெச்.எல்.எல் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
இந்த நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு மத்திய அரசு முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அதற்காக நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
``தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்தும் அவசர அவசியம் உள்ளது. செங்கல்பட்டில் இருக்கும் இந்துஸ்தான் பயோடெக் என்ற அரசு நிறுவனத்தை இதற்காகப் பயன்படுத்த மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், மத்திய அரசு இது உட்பட 4 பொதுத்துறை நிறுவனங்கள் எதையுமே பயன்படுத்தவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
அந்நிறுவனத்தின் நிலை தற்போது எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் விநாயக மூர்த்தியிடம் பேசினோம்.
``இந்த மையத்தில் 215 பேர் பணியில் இருந்தனர். தற்போது வெறும் 95 பேர்தான் பணியாற்றுகின்றனர். பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. பத்தாயிரம் ரூபாய் ஸ்டைஃபன்ட் மட்டுமே வழங்கப்படுகிறது.
அங்கிருக்கும் உபகரணங்கள், கருவிகள் அனைத்தும் செயலிழந்து, துருப்பிடித்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு ஷிஃப்ட்டுக்கு நான்கு முறை அதையெல்லாம் இயக்கிப் பார்க்கிறோம். தினமும் இந்த வேலை மட்டும்தான் நடைபெறுகிறது. நிச்சயம் நிதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையிலும் அதைக் கைவிட்டுவிட்டால் மீண்டும் இதைப் போன்று உருவாக்குவது சிரமம் என்பதாலும் அதை இயக்கிக் கொண்டே இருக்கிறோம்.
2017-ம் ஆண்டிலிருந்து தடுப்பூசி உற்பத்திக்கு நிதி கேட்டு மத்திய அரசைத் தொடர்புகொண்டு நிதி கேட்டு வருகிறோம். கடைசியாக ரூ.219 கோடி நிதி வேண்டும் என்று கேட்டபோது மத்திய அரசு ஒதுக்க முன்வரவில்லை. இந்நிலையில் இந்த நிறுவனத்தை 15 ஆண்டுகளுக்கு ஏற்று நடத்தலாம் என்று தனியாருக்கு மத்திய அரசு டெண்டர் அறிவித்துள்ளது. அதை எடுப்பதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
ரேபிஸ், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், ஹெபடைட்டிஸ் பி உள்ளிட்ட 12 நோய்களுக்கான தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான வசதி உள்ளது. கோவிட்-19 தடுப்பூசியையும் உற்பத்தி செய்ய முடியும். இன்று நாங்கள் வேலையைத் தொடங்கினால்கூட அடுத்த இரண்டு மாதங்களில் தடுப்பூசிகள் வெளியே வந்துவிடும்" என்கிறார்.
இந்தத் தடுப்பூசி உற்பத்தி மையத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று போராடி வரும் மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணத்திடம் பேசினோம்:
``ரூ.500 கோடிக்கும் மேல் முதலீடு போட்டு தொடங்கப்பட்ட இந்த உற்பத்தி மையத்தில் ஒரு தடுப்பூசிகூட இதுவரை உற்பத்தி செய்யப்படவில்லை என்பது கவலையளிக்கிறது. எந்தச் சூழலிலும் இந்த மையத்தைத் தனியார்மயமாக்கவோ மூடவோ அரசு முயலக்கூடாது. பி.எம் கேருக்கு பல கோடி நிதி வருவதாகக் கூறுகின்றனர். அதிலிருந்து ரூ.200 கோடியை ஒதுக்கினால்கூட இந்த மையம் செயல்படத் தொடங்கிவிடும்.
கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுபோன்ற கடினமான சூழலில் 585 மில்லியன் டோஸ் தயாரிக்கும் திறன் வாய்ந்த உற்பத்தி மையத்தை செயல்படுத்தாமல் வைத்திருப்பது வேதனையளிக்கிறது" என்றார்.
தடுப்பூசி தட்டுப்பாடு, அதிகரிக்கும் மரணங்கள், பொருளாதார மந்தநிலை எனப் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் கையில் வெண்ணெய் அல்ல நெய்யே இருக்கிறது. அதைப் பயன்படுத்தாமல் வீணடிப்பது நியாயமல்ல.
அஜித்தின் ‘விவேகம்’ படம் ரிலீசான அன்று அஜித் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் செம ஹேப்பி. காரணம், முதல் ஷோ முடிந்தவுடனே படம் கொஞ்சம் சுமார்தான் என்ற டாக் பரவ ஆரம்பித்திருந்தது. போதாக்குறைக்கு படத்தில் பல மீம் மெட்டீரியல்கள் நிரம்பியிருந்தது. 'புலி' படத்திற்கு அஜித் ரசிகர்கள் அடித்த அடியில் நொந்து நூடுல்ஸாகியிருந்தவர்கள், ஒட்டுமொத்த பகையையும் ‘விவேகம்’ படத்தின் மீது இறக்கினார்கள். அப்படி விவேகத்தை மீம் போட்டு ஓட்டிய வெறித்தனமான விஜய் ரசிகர்களில் நானும் ஒருவன்.
‘துப்பாக்கி’ பட க்ளைமாக்ஸில் சத்யன், ஆர்மி குறித்து விஜய்யிடம் எமோஷனலாக பேசும் டெம்ப்ளேட்டை எடுத்து அதில்,
‘’2 வருஷம் கழிச்சு ரிலீஸ் ஆன விவேகமும் ஃப்ளாப்பு...
இன்னும் 2 வருசத்துக்கு எந்த படமும், ஏன் ஒரு அப்டேட் கூட வர போறதில்ல..
அடுத்த படம் வர வரைக்கும் இந்த விவேகத்தை நினைச்சுக்கிட்டே வாழணும்ல… உண்மையிலேயே அஜித் ரசிகர்கள் கிரேட்தான்...''
இப்படியொரு மீம் போட்டு அஜித் ரசிகர்களை கலாய்த்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. ஆனால் ஒரு நான்கு நாள்கள் கழித்து அதே ‘விவேகம்’ படத்தை தியேட்டரில் பார்த்தபோது பெரிய ஏமாற்றமெல்லாம் இல்லை. ஓவர் எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்களுக்கும், ஓவர் லாஜிக் பார்க்கும் உலக சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்காமல் இருந்ததில் தவறில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் ‘’நாம கலாய்ச்ச அளவுக்கு படம் ஒன்னும் மோசமா இல்லையே’’ என ஒரு வித கில்ட்டி ஃபீலிங்கை கொடுத்த படம் ‘விவேகம்’.
அது ஸ்கூல் முடித்து காலேஜ் செல்லும் பருவம் என்பதால் ஓரளவுக்கு மெச்சூர்ட் ஆக தொடங்கியிருந்த நேரம். அந்த நேரத்தில் இந்த ‘விவேகம்’ குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டதால் அஜித் படங்களை கலாய்க்கும் மனோபாவத்திற்கு அத்தோடு டாட். ஒரு சினிமா விரும்பியாக இப்போது அஜித் படங்களையும் ஒரு பொதுப்படையான ரசிகனாக பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். ‘விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ இரண்டுமே முதல் நாளே அஜித் ரசிகர்கள் நிரம்பிய ஹவுஸ்ஃபுல் தியேட்டரில் பார்த்த படங்கள்.
‘நேர்கொண்ட பார்வை’யில் பரத் சுப்ரமணியம் என்ற வக்கீல் கேரக்டரில் அஜித்தை பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. விஜய்யை ‘நண்பன்’ படத்தில் வித்தியாசமாகப் பார்த்தபோது வந்த ஒரு வாவ் ஃபீல அஜித்தை வக்கீலாக பார்த்தபோதும் வந்தது. 2019 -ம் ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனான ‘விஸ்வாசம்’ போன்றதொரு மாஸ் படத்தை கொடுத்துவிட்டு அடுத்த படமே இவ்வளவு சட்டிலாக அண்டர்ப்ளே செய்யும் கேரக்டருக்கு அஜித் ஒப்புக்கொண்டதே ஆச்சர்யம்தான். ‘நேர்கொண்ட பார்வை’ மட்டுமல்ல அஜித்தின் ஒட்டுமொத்த சினிமா கரியரை ஒரு பார்வை பார்த்தாலும் பல ஆச்சர்யங்கள் நிறைந்திருக்கும்.
படத்துக்கு சரியான ப்ரோமஷன், ஆடியோ லான்ச், பிரஸ் மீட், ரசிகர்களுடன் மீட் அப் என எதுவும் இல்லாமல் கல்லா கட்டும் அஜித் படங்கள் எல்லாமே ஒரு ஆச்சர்யம்தான். இப்போதைய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டியை தவிர இளம் நடிகர்கள் மத்தியில் பெரிய போட்டி கிடையாது. காரணம், இப்போதைய தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் சொற்பம்தான். ஆனால் அஜித்-விஜய் அறிமுகமான காலத்தில் ரஜினி-கமல்-விஜயகாந்த் என டாப் லிஸ்ட்டில் ஒரு போட்டி இருந்தால் அடுத்து கார்த்திக்-சரத்குமார்-பிரபு என அடுத்தகட்டத்தில் ஒரு போட்டி இருக்கும். இவர்களைத் தாண்டியும் பல இரண்டாம் கட்ட ஹீரோக்கள். அவர்களுக்கும் அடுத்த லெவலில் ப்ரஷாந்த்-அருண்விஜய்-அரவிந்த் சாமி என இன்னும் பல பேர்.
அப்போது மக்களுக்கு சாய்ஸ் அதிகம் இருந்தது. மக்களுக்கான இந்த சாய்ஸ்தான் இன்றைய தமிழ் சினிமாவுக்கும் 90-களின் தமிழ் சினிமாவுக்கும் இடையிலான வித்தியாசம். கொஞ்சம் சறுக்கினாலும் அடுத்தவாரம் ரிலீஸ் ஆகும் ஹிட் படத்தின் ஹீரோவிடம் தன்னுடைய இடத்தை பறிகொடுக்க வேண்டியிருக்கும். இப்படியான சூழலில் திரை பின்னணி எதுவும் இல்லாமல் 90-களின் தொடக்கத்தில் அஜித் ஹீரோவாகி நிலைத்து நின்றதே ஆச்சர்யம்தான்.
இந்த ஆச்சர்யத்துக்கு பின்னால் பல வலிகளும் நெவர் எவர் கிவ் அப் எமோஷன்களும் ஒளிந்திருக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் ஒருமுறை படங்கள் எதுவும் இல்லாமல் அஜித் நின்றபோது அவருடைய நண்பர் ஒருவர், ‘’அஜித் நீங்க சின்னத்திரைக்கு வந்திடுங்க… அங்க உங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கு… சம்பளமும் நல்ல முறையில் இருக்கும்’’ என ஒரு ஆஃபர் கொடுத்திருக்கிறார். அதற்கு 'ஐ வில் மேக் இட் ஒன் டே. டோன்ட் வொர்ரி' என சிம்பிளாக அதேநேரத்தில் வலிமையான நம்பிக்கையுடன் அந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் அஜித்.
விஜய்யிடம் எப்போது அவருடைய 'நண்பர்' அஜித் குறித்து கேட்டாலும், 'தன்னம்பிக்கை' என ஒற்றை வார்த்தையில் யோசிக்காமல் சொல்வார். விஜய் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நம்பிக்கையும்-தன்னம்பிக்கையும்தான் அஜித்தின் வின்னிங் ஃபார்முலா.
‘வாலி’யின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மீதும், ‘மங்காத்தா’வின் இயக்குநர் வெங்கட் பிரபுவின் மீதும் அஜித் வைத்தது நம்பிக்கையின் உச்சபட்சம். ‘வாலி’யெல்லாம் கத்தி மீது நடப்பது போன்ற சப்ஜெக்ட். அதை ஏற்றுக்கொள்வதற்கே தனி நம்பிக்கையும் தைரியமும் வேண்டும். அந்த இரண்டு படங்களுமே கொஞ்சம் எசகுபிசகாக போயிருந்தாலும் அது படத்தின் வெற்றி தோல்வியை தாண்டி அஜித்தின் இமேஜிற்கே பெரிய நெகட்டிவாக மாறியிருக்கும். ‘மங்காத்தா’ 50-வது படம் வேறு. ஆனால், அஜித் இயக்குநர்கள் மீது வைத்த அந்த நம்பிக்கை ஜெயித்தது. அஜித் ரசிகர்களுக்கு ‘துப்பாக்கி’ எப்படியோ அப்படித்தான் விஜய் ரசிகர்களுக்கு ‘மங்காத்தா’. இந்தப்படத்தின் அந்த இன்டர்வெல் சீன் எல்லாம் வேற லெவல் கூஸ்பம்ப் மொமன்ட்.
தமிழ் சினிமாவில் எப்போதுமே இந்த இரு துருவ ஹீரோ மோதல்கள் இருக்கவே செய்துள்ளது. எம்.ஜி.ஆர் வெகுஜனத்திற்காக படம் நடித்தால் சிவாஜி நடிப்புக்காகவே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். அடுத்து வந்த சூப்பர்ஸ்டார் ரஜினி அப்படியே எம்.ஜி.ஆர் ஸ்டைல். கமல் அப்படியே சிவாஜி ஸ்டைல். அடுத்தத்தலைமுறையில் விஜய் அப்படியே எம்.ஜி.ஆர் - ரஜினி ஸ்டைல்களின் நீட்சியில் தன்னுடைய பாணியை சேர்த்து தனி ரூட் பிடித்தார். ஆனால், அஜித்தை கமலின் நீட்சியென்றோ ரஜினியின் நீட்சியென்றோ சொல்லிவிட முடியாது.
ரஜினி ஸ்டைல் ஹீரோவாக இருந்திருந்தால் ‘மங்காத்தா’வும் - ‘நேர்கொண்ட பார்வை’யும் சாத்தியமில்லாமல் போயிருக்கும். அதே கமலை பின்பற்றியிருந்தால் இந்த டிகேடில் வெளியான அஜித்தின் 'வீ' சீரிஸ் படங்கள் எல்லாம் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. ‘’அஜித்துக்குள்ள ஒரு ரஜினியும் இருக்காரு, கமலும் இருக்காரு. ஒரு எம்.ஜி.ஆர் - சிவாஜியும் இருக்காரு’’ இது விமர்சகர் யூகி சேது சொன்னது. இதுதான் ’வில்லன்’ கதை உருவாவதற்கு மூலமாக இருந்த ஒன்லைன். அஜித்தால் கோட் சூட் போட்டு ‘பில்லா’வாக தன்னை ஒரு வேர்ல்ட் க்ளாஸ் நடிகராகவும், வேட்டி சட்டையில் நம்மூர் தூக்குத்துரையாக மாஸ் காட்டவும் முடியும்.
‘நான் கடவுள்’, ‘நந்தா’, ‘கஜினி’ மாதிரியான படங்கள் அஜித்தின் கையைவிட்டு சென்ற படங்கள். இதில் எல்லாம் நடித்திருந்தால் அஜித்குமார் என்னும் நடிகர் இன்னும் அழுத்தமாக அடையாளப்பட்டிருப்பார். வெளியே இருந்து பார்ப்பதற்கு நமக்கு இப்படி தோன்றினாலும் ‘’நாம சாப்புடுற அரிசில நம்ம பெயர் எழுதியிருக்கும்’’ என்பதை நம்பும் அஜித்துக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கே.
நடிகர்கள் அரசியல் சர்ச்சைகளில் அதிகம் சிக்கும் சீசன் என்பதால் அஜித்தின் அரசியல் குறித்து பேசாமல் விட்டால் தப்பாகிவிடும். தன்னுடைய அதிகபட்ச அரசியல் பங்களிப்பே சாமானியனாக வரிசையில் நின்று ஓட்டுப்போடுவதுதான் என்பதை அஜித் தெள்ளத்தெளிவாக்கி விட்டாலும் இன்றைக்கும் அதிமுக-வில் அம்மாவுக்குப் பிறகு அஜித்தான், கருப்பு சிவப்பு மாஸ்க் போட்டு திமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறார் போன்ற ஏலியன் லெவல் மீம்கள் இணையத்தை வட்டமடித்து கொண்டுதான் இருக்கின்றன.
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பாகவே தன்னுடைய அரசியல் குறித்து ஒரு பேட்டியில் இப்படி கூறியிருந்தார் அஜித். ‘’சினிமா என் தொழில். அதுதான் எனக்கு நல்லா தெரியும். அரசியல் எனக்கு தெரியாது. தெரியாத விஷயத்துல இறங்கி நானும் குழம்பி என்னை நம்பியிருக்குறவங்களையும் குழப்ப விரும்பல.’’ இந்த நெத்தியடி பதிலும் நேர்மையான பக்குவமும்தான் அஜித் மீது பெரிய மரியாதையை உண்டாக்குகிறது. அரசியல் விஷயத்தில் இன்றைக்கு வரைக்கும் இதுதான் அஜித்தின் நிலைப்பாடு. 'வாழு வாழ விடு' இதுதான் அவரின் அரசியல் ரூட்.
இந்த கட்டுரையை விஜய் ரசிகராக எழுத ஆரம்பித்து ‘விவேகம்’ பட விவேக் ஓபராய் ஆவி உடம்புக்குள் புகுந்தது போல அஜித்தை புகழ்ந்து பேசியிருப்பேன். விஜய் ரசிகன் அஜித்தை புகழ்ந்து பேசக்கூடாதா? விஜய் இல்லையேல் அஜித்தின் மீது இவ்வளவு அன்பும், அஜித் இல்லையேல் விஜய்யின் மீது இவ்வளவு பற்றும் உண்டாகியிருக்காது. இருவரின் வெற்றிக்குப பின்னாலும் மற்றொருவர் கொடுத்த ஆரோக்கியமான போட்டி காரணமாக இருந்திருக்கிறது. விஜய்யின் வெற்றிக்கு உதவிய அஜித்தை விஜய் ரசிகனுக்கும், அஜித்தின் வெற்றிக்கு உதவிய விஜய்யை அஜித் ரசிகனுக்கும் பிடிக்காமல் இருக்குமா என்ன?
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்... என்ற கேள்விக்கு விடைதெரியும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் 'தி.மு.க-வே பெரும்பான்மையான இடங்களை வெல்லும்' என ஊடகம் சொல்லிக்கொண்டிருந்தாலும், அ.தி.மு.க தலைவர்களோ 'ஹாட்ரிக் சாதனையாக அ.தி.மு.க ஆட்சிக் கட்டிலில் அமரும்' என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து அரசியல் பேசினேன்....
''உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச்சொல்லி, தி.மு.க. கூட்டணியில் வற்புறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதே?''
''வற்புறுத்தல் என்று சொல்லமுடியாது... அது ஓர் ஆலோசனை மட்டும்தான். 10 நாட்களுக்குள் புதிய சின்னத்தை மக்களிடம் அறிமுகம் செய்து, வெற்றி பெறுவதென்பது சிரமமான விஷயம். அடுத்து நாம் புதிய சின்னத்தில் போட்டியிடும்போது, 'நம்மை எளிதில் வென்றுவிடலாம்' என்ற கருத்து - நம்பிக்கை நமக்கு எதிராகப் போட்டியிடுபவர்களுக்கு ஏற்படும். அதுவேகூட நமக்கு ஒரு பலவீனமாகவும் அமையும். எனவே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், எளிதாக மக்களை சென்றடையலாம் என்பதையெல்லாம் ஓர் ஆலோசனையாக சொன்னார்கள்!
அதேசமயம் 1999-ல் சைக்கிள் சின்னத்தில்தான் போட்டியிட்டது வி.சி.க. அதன்பிறகு 2001-ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். 2004-ல் அம்பு சின்னம். அதன்பிறகு தொடர்ந்து தனிச்சினத்திலேயே போட்டியிட்டு வருகிறோம். எனவேதான் இந்த முறையும் 'பானை' சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம்!''
''கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே ஒருவித அச்ச உணர்வை எதிர்க்கட்சிகள் விதைத்துவிட்டதாக பா.ஜ.க தலைவர்கள் தொடர்ச்சியாக கூறிவருகிறார்களே...?''
''தடுப்பூசி பற்றிய மக்கள் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கத்தை கொடுக்கத் தவறியது ஆளுங்கட்சி. 'தடுப்பூசி போட்டுக்கொண்டதால் எனக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுவிட்டது' என்று ஒரு மருத்துவர் சொல்வதான வீடியோகூட சமூக ஊடகம் வழியே பரவின. இது பொய்யான செய்தியாகக்கூட இருக்கலாம். ஆனாலும் இதுபோன்ற செய்திகள் ஏற்கெனவே மக்களிடையே பரவியிருக்கிறது.
எனவே மக்களிடம் அப்படியொரு வெறுப்பு - கிளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதை அப்படியே கடந்துபோய்விடாமல், அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக பதில் சொல்லியாகவேண்டும். இதைத்தான் நானும் எடுத்துச்சொன்னேன்.
ஏனெனில், விவேக் மரணம் மக்களுக்கு கோபத்தை - சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தான் நான் தெளிவாக எடுத்துச் சொல்லிவருகிறேன். ஆனால், இப்போதும்கூட ஆளும் கட்சியினர் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்துகொள்ளாமல், அதற்கு வெளியே நின்றுகொண்டு பேசிவருவது அவர்களது இயலாமையைத்தான் எடுத்துக்காட்டுகிறது.''
''அரக்கோணம் இரட்டைப் படுகொலையில் சாதியப் பின்புலம் இல்லை என்று சொல்லப்படுகிறதே...?''
''அது சாதியப் படுகொலை இல்லை என்றால், என்ன காரணத்துக்காக அந்தப் படுகொலை நடந்தது? சாதியின் பெயரில்தானே அடித்திருக்கிறார்கள். 'ஏலேய்' என்று கூப்பிட்டதற்காகவா 2 பேரைக் கொலை செய்வார்கள்?''
''வி.சி.க-வுக்கு வாக்கு சேகரித்ததற்காக நடைபெற்ற கொலை என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், சிவகாமி ஐ.ஏ.எஸ் உங்களுக்கு எதிரான கருத்தை சொல்கிறாரே?''
''எனக்கு எதிராகவெல்லாம் அவர் கருத்து சொல்லவில்லை... சொல்லத்தெரியாமல் சொல்லியிருக்கிறார். 'எல்லா ஊர்களிலும்தான் பானை சின்னத்தில் ஓட்டு கேட்டார்கள். அங்கேயெல்லாம் தாக்குதல் நடந்ததா' என்று அபத்தமான ஒரு கேள்வியை சிவகாமி கேட்டிருக்கிறார். என்.ஜி.ஓ டீம் சார்பில் அவர் போயிருந்திருக்கிறார். அந்த என்.ஜி.ஓ டீம் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்... அவ்வளவுதான்!''
''தமிழக அளவில், ஒடுக்கப்பட்டோருக்கு இணையாக பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதிப்புகளை யாரும் பேசுவதில்லை என்ற குரல்கள் அண்மைக்காலமாக கேட்க ஆரம்பித்திருக்கிறதே...?''
''சில இடங்களில், பெண்களும் ஆண்களை அடிக்கிறார்கள்தான். அப்போதெல்லாம் 'ஆண்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள்' என்று யாராவது பேசுகிறார்களா? எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பலவீனமான சக்திகள் அல்லது பாதிக்கப்படக்கூடியவர்கள் என்ற ஒரு பிரிவு சட்டத்திலேயே இருக்கிறது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
அதாவது, ஒரு வன்முறை சம்பவத்தின்போது, 'ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் இவர்' என்ற விவரம் தெரியாமலேயேகூட எதிரி தாக்கியிருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மை விசாரணையின்போது தெரியவந்தால், உடனே அந்த வழக்கானது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று சட்டமே சொல்கிறது.
காரணம்.... ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே பட்டியல் சாதியினர் பாதிக்கப்படக்கூடிய பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்; அவர்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சமுதாயத்தில் மிக மோசமாக நடத்தப்படக்கூடிய நிலையே தொடர்கிறது. எனவே, இவர்களைப் பாதுகாப்பதற்கு இதுபோன்ற சட்டங்கள் தேவையாக இருக்கின்றன என்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுத்தான் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
உதாரணமாக, தமிழ்நாட்டளவில் நடைபெறுகிற சம்பவங்களையே எடுத்துக்கொள்ளுங்களேன்... கலவரங்களின்போது கொல்லப்படுகிறவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்த மக்களாகத்தானே இருக்கிறார்கள். ஆக, ஆதிக்க சாதியினரால், எப்போதும் பாதிக்கப்படக்கூடிய மக்களாகவே பட்டியல் சாதியினர் இருந்துவருகிறார்கள். எனவே, தலித்துகள் பாதிக்கப்பட்டால், அதன் பின்னணியில் இருப்பது சாதியம் மட்டுமே... இதுதான் அடிப்படை உண்மை!''
''வாக்குப்பதிவுக்குப் பிந்தைய சூழலில், மீண்டும் அ.தி.மு.க-வே 125 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெறும் என்று அ.தி.மு.க-வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனரே..?''
''இதெல்லாம் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிற கருத்து... வதந்தி! நான் எந்தக் கருத்துக் கணிப்பையும் நம்புவதில்லை. அதேசமயம் களத்தில் நேரடியாக மக்களை சந்தித்தவகையில், தி.மு.க கூட்டணி அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.''
''அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு அறிவிப்புக்கும், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பின்மைக்கும் இடையே சம்பந்தம் இருப்பதாக நினைக்கிறீர்களா?''
''இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலுமே கொரோனா தொற்றுப் பாதிப்பு இருந்துவருகிறது. இப்போது டெல்லியில் தேர்தல் கிடையாது. ஆனால், அங்கேயும் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. எனவே, ஊரடங்கு அறிவிப்பை, வாக்குப்பெட்டியின் பாதுகாப்போடு பொருத்திப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா விஷயமாக அரசு எந்தவொரு நடவடிக்கையை எடுத்தாலும் அதற்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்பதுதான் வி.சி.க-வின் நிலைப்பாடு!''
''சமூக அளவில் நிறைய விவாதங்களை கிளப்பிய 'கர்ணன்' படம் குறித்து நீங்கள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லையே?''
''அடிப்படையில், அரச வன்கொடுமைக்கு எதிராக மக்கள் போராடக்கூடிய கதையாக அந்தப் படம் இருக்கிறது. அப்படி அதிகார வர்க்கத்தை எதிர்த்து மக்கள் திருப்பித் தாக்குவது என்பது எதார்த்தத்தில் ரொம்பவும் அபூர்வம். அப்படி நிகழ்ந்தால், என்னவாகும் என்ற கருத்தை படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
கொடியன்குளம் சம்பவத்தின் அடிப்படை என்பது சாதியப் பிரச்னைதான். ஆனால், அது அரச பயங்கரவாதத்தில் போய் முடிகிறது. எப்போதும் கொதிநிலையிலேயே இருந்துவரக்கூடிய அந்த வட்டாரம், ஒரு சின்ன பிரச்னை என்றாலும்கூட 'தலித், தலித் அல்லாதோர்' என இரண்டாகப் பிரிந்துவிடும். அதாவது ஆதிக்க சாதியைச் சேர்ந்த அனைவருமே தலித்துகளுக்கு எதிராக ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள்.
படத்தில், ஒரு தனிநபர் அந்த எஸ்.பி-யைப் பழிவாங்குவது மாதிரியாக கதையை வடிவமைத்திருக்கின்றனர். இது சினிமாவுக்காக சொல்லப்படக் கூடியது. எதார்த்தத்தில் இது சாத்தியம் இல்லை.
பொதுவாக சாதிய வன்கொடுமைகளே அரச பயங்கரவாதத்தால்தான் பாதுகாக்கப்படுகிறது, தக்கவைக்கப்படுகிறது. தொடர்ந்து நீடித்து வருவதற்கும்கூட அரச பயங்கரவாதமே காரணம். காவல்துறையும் வருவாய் துறையும் கைகோத்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்குவதையும், அவர்களை ஒரு சக்தியாக திரளவிடாமல் தடுப்பதையும் தொடர்ந்து செய்துவருகிறது. பரமக்குடியில் நடைபெற்ற சம்பவம், ஜான் தாமஸ் - ஏழுமலையை சுட்டுக்கொன்றது என கொடியன்குளம் போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிறைய கிராமங்களில் நடந்தேறியுள்ளன.''
''அண்மையில் பிரிக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களும் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி 'தமிழ்நாட்டையும் மூன்றாகப் பிரிக்கவேண்டும்' என்கிறார்களே...?''
''அவர்கள் உதாரணம் காட்டுகிற மாநிலங்களைவிடவும் முன்னேறிய மாநிலமாகத்தான் ஏற்கெனவே தமிழ்நாடு இருந்துவருகிறது. வட மாநிலங்களின் கல்வி, பொருளாதாரத்தோடு ஒப்பிடும்போது பன்மடங்கு வளர்ச்சியடைந்த மாநிலம் தமிழ்நாடு.
தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பகுதி தனித் தேசமாக இருந்தால், நாம் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தமுடியும்; ஆட்சிக்கு வரமுடியும் என்ற சாதியக் கண்ணோட்டத்திலேயே இப்படியொரு கோரிக்கை பா.ம.க தரப்பில் வைக்கப்படுகிறது. ஏனெனில், பா.ம.க-வின் தலைமையை குறிப்பிட்ட சாதியைத் தவிர வேறெந்த சாதியும் ஏற்றுக்கொள்ளவில்லை; அங்கீகரிக்கவில்லை. ஆறேழு மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பா.ம.க-வுக்கு பெரும்பான்மையாக வாக்களிக்கின்றனர். எனவேதான் இப்படியொரு கனவுடன் பா.ம.க கோரிக்கை வைக்கிறது. இதை மக்கள் இலகுவாக தூக்கியெறிந்துவிடுவார்கள்.''
''திருமாவளவன் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொள்வதில், இன்னமும் என்ன தயக்கம் நீடிக்கிறது?''
''ஒரு தயக்கமும் கிடையாது... இதையெல்லாம் மக்கள்தான் சொல்லவேண்டும். ஒருவரது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து, 'ஏன் இவரை முதல்வராக்கக்கூடாது...' என்று மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். மாறாக, நானே என்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு, சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நானும் செய்யவேண்டும் என்பது இல்லை. அதேசமயம் அப்படியொரு தேவையிருந்தால், காலம் கனிந்தால்... உரிய நேரத்தில் அந்த அறிவிப்பையும் நாங்கள் செய்வோம்!''