Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

IND v NZ: பேரழிவிற்குக் காரணமான அந்த ஒரு முடிவு... இந்திய அணியின் தோல்விக்கு யார் பொறுப்பு?!

மீண்டும் ஒரு மோசமான தோல்வி. நியூசிலாந்துக்கு எதிராக ஐ.சி.சி தொடரில் இந்திய அணி மீண்டும் சொதப்பியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இது மூன்றாவது முறை. 2019 உலகக்கோப்பையை போல, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை போல, இந்த டி20 உலகக்கோப்பையிலும் வென்றே ஆக வேண்டிய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தோற்றிருக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 110 ரன்களை மட்டுமே எடுத்தது. 111 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 15 ஓவரிலேயே போட்டியை முடித்துவிட்டது. இந்திய அணி போட்டியே அளிக்கவில்லை. இந்த மோசமான தோல்விக்கான காரணம் என்ன?

டாஸிலேயே இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனே டாஸை வென்று சேஸிங்கைத் தேர்வு செய்திருந்தார்.

இந்த டி20 உலகக்கோப்பையில் துபாய் மைதானத்தில் இந்த போட்டிக்கு முன்பு வரை 6 போட்டிகள் நடந்திருக்கின்றன. அந்த 6 போட்டிகளிலும் ஸ்கோரை சேஸ் செய்த அணியே வென்றிருக்கிறது.

6 போட்டிகளில் 5 போட்டிகளில் டாஸை வென்ற கேப்டன்கள் சேஸிங்கைத் தேர்வு செய்து போட்டியை வென்றிருக்கின்றனர். ஒரே ஒரு போட்டியில் டாஸை வென்றும் ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பேட்டிங்கைத் தேர்வு செய்திருப்பார். பாகிஸ்தானுக்கு எதிராக அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோற்றிருக்கும். ஆக, துபாய் மைதானத்தில் சேஸ் செய்யும் அணிகளுக்கு 100% வாய்ப்பு இருந்தது. டாஸில் இந்தியா தோற்று முதல் பேட்டிங்கை செய்ய வேண்டும் என்ற போதே இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியிலும் கோலி டாஸை தோற்றிருந்தார். இந்தியா முதலில் பேட் செய்திருந்தது. போட்டியை தோற்றிருந்தது. டாஸ் இங்கே ரொம்பவே முக்கியம். ஆனால், டாஸ் தோல்விக்கு கோலியையோ இந்திய அணியையோ துளி கூட குறை சொல்ல முடியாது. இங்கே சில முடிவுகளும், போராட்டமே இல்லாமல் தோற்கும் இந்திய அணியின் அணுகுமுறையும்தான் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

நேற்றைய போட்டியில் ப்ளேயிங் லெவனில் இந்திய அணி இரண்டு மாற்றங்கள் செய்திருந்தது.

Ishan Kishan
காயமுற்ற சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக இஷன் கிஷன் உள்ளே வந்திருந்தார். ஃபார்ம் அவுட்டில் இருக்கும் புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்கூர் உள்ளே வந்திருந்தார். இந்த இரண்டு மாற்றங்களுமே எதிர்பார்த்ததுதான். பல முன்னாள் வீரர்களும் இந்திய அணி இந்த மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியிருந்தனர்.

ஆனால், இந்த மாற்றத்திற்காக பேட்டிங் ஆர்டரில் நிகழ்த்தப்பட்ட குழப்பத்தைத்தான் சகித்துக் கொள்ளவே முடியாது.

இஷன் கிஷன் அணிக்குள் வருகிறார் என்றவுடன் அவரை ஓப்பனராக இறக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். இதற்கு வலுவான பின்னணியும் இருக்கிறது. நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் இஷன் கிஷன் மிடில் ஆர்டரில் இறங்கி வரிசையாக பல போட்டிகளிலும் சொதப்பியிருந்தார். அப்போது அவருக்கு ஒரு இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் போது இஷன் கிஷனை ரோஹித் ஓப்பனராக்கியிருப்பார். ஓப்பனரானவுடன் இஷன் கிஷன் அடித்து வெளுத்து நல்ல ஃபார்மிற்குத் திரும்பியிருப்பார். ஆக, இஷன் கிஷனுக்கு ஓப்பனிங் இறங்குவதில் ஒரு சௌகரியம் இருந்தது. மேலும், ஐ.பி.எல் நடைபெறும் போதே உன்னை ஓப்பனிங் ஆப்சனாகவே பார்க்கிறோம் என கோலியும் இஷன் கிஷனுக்கு நம்பிக்கை ஊட்டியிருந்தார். இதுபோக, இஷன் கிஷன் இடக்கை பேட்ஸ்மேன் என்பதால் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்டை சமாளிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்ற கணக்குகளும் ஓடியிருக்கும். இரண்டு பேரும் ஒரே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதெல்லாம் சரிதான், ஆனால்...

இஷன் கிஷனை ஓப்பனிங் இறக்குவதற்காக டாப் ஆர்டரில் நடந்த குளறுபடி இருக்கிறதே அதுதான் இங்கே பிரச்னை.
ரோஹித் சர்மா

இஷன் கிஷனுக்காக ஓப்பனரான ரோஹித் நம்பர் 3 இல் இறக்கப்பட்டார். கோலி தனது இடத்தை விட்டுக் கொடுத்து நம்பர் 4 க்கு சென்றார். ஓப்பனிங்கில் புதிய கூட்டணியாக ராகுல்-இஷன் கிஷன் கூட்டணி களமிறங்கியது. இந்த மூன்று முடிவுகளுமே இதற்கு முன் நிரூபிக்கப்படாதவை அல்லது தவறென நிரூபிக்கப்பட்டவை. ராகுல் - இஷன் கிஷன் கூட்டணி பெரிதாக முயன்று பார்க்காத கூட்டணி.

இதற்கு முன் இங்கிலாந்து சீரிஸில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே ராகுல்-இஷன் கிஷன் கூட்டணி ஓப்பனிங் இறங்கியிருந்தது. அந்தப் போட்டியில் ராகுல் டக் அவுட் ஆகியிருப்பார்.

ராகுல்-இஷன் கிஷன் கூட்டணி என்ன மாதிரியான ரிசல்ட்டை கொடுக்கும் என்பதற்கு தரவுகளே இல்லை. ரோஹித் சர்மா ஓப்பனிங் இல்லாமல் ஆர்டரை இறக்கிக் கொண்டு நம்பர் 3&4 இல் கடைசியாக எப்போது வந்தார் என்றே ஞாபகம் இல்லை. இந்திய அணிக்காக 100 க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் ஆடியிருக்கும் ரோஹித் சர்மா மூன்றே மூன்று போட்டிகளில் மட்டுமே நம்பர் 3 இல் இறங்கியிருக்கிறார். 7 போட்டிகளில் மட்டுமே நம்பர் 4 இல் இறங்கியிருக்கிறார். அதுவும் வெகு சமீபத்தில் இல்லை.

டி20 போட்டிகளை பொறுத்தவரைக்கும் ஓப்பனிங் அல்லது நம்பர் 3 இதுதான் கோலியின் ஆஸ்தான இடம். அதைவிட்டு கோலி நம்பர் 4 இல் இறங்கியிருந்தார். கடந்த போட்டியில் ஒட்டுமொத்த அணியும் சொதப்பியபோது நம்பர் 3 இல் இறங்கியிருந்த கோலி மட்டுமே நின்று ஆடியிருந்தார். மற்ற வீரர்களுக்காக கோலி தனது ஆர்டரை மாற்றிக்கொள்ளும் போது பெரும்பாலான சமயங்களில் சொதபியிருக்கவே செய்கிறார். நேற்றும் சொதப்பினார். வென்றே ஆக வேண்டிய போட்டியில் அதுவும் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக இப்படி அதிகம் நிரூபிக்கப்படாத ஆப்சன்களோடு களமிறங்கியது பெரும் பின்னடைவாகிப் போனது.

ராகுல் - இஷன் கிஷன் கூட்டணி மூன்று ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. ட்ரென்ட் போல்டை சாமர்த்தியமாக எதிர்கொள்வார் என அனுப்பப்பட்ட இஷன் கிஷன் அவரின் பந்திலேயே அவுட் ஆகியிருந்தார். ரோஹித் சர்மா ட்ரென்ட் போல்டின் ஒரே ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்டார். அந்த ஒரு பந்திலும் மில்னே கேட்ச் ட்ராப் செய்திருந்தார். ட்ரென்ட் போல்டுக்காக ரோஹித்தை கோலி நம்பர் 3 ஆக்கியிருந்தால் கோலியின் அடிப்படை போர்க்குணத்தின் மீதே கேள்வி எழுகிறது.

போல்ட் - கோலி

என ட்ரென்ட் போல்ட் போட்டிக்கு முன்பான ப்ரஸ் மீட்டில் பேசியிருப்பார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கோலி,

என பேசியிருந்தார். ரோஹித்தை நம்பர் 3 க்கு இறக்கியதில் என்ன அட்டாக்கிங் மனோபாவத்தை இந்திய அணி வெளிக்காட்டியது? போல்டுக்கு எதிராக சீனியர் பேட்ஸ்மேனை பதுக்கி வைத்து இந்திய அணி டிஃபன்ஸிவ்வாக மட்டுமே யோசித்திருந்தது. இது கோலியின் குணாதிசயமே கிடையாதே! மேலும், அவருக்கு சரி வராத ஒரு இடத்தில் இறக்கி சொதப்பவும் வைத்திருந்தது.

கோலி 5.5 வது ஓவரில் க்ரீஸுக்குள் வந்திரிந்தார். 10.1 வது ஓவரில் அவுட் ஆகியிருந்தார். மொத்தம் 26 பந்துகள். இந்த 26 பந்துகளில் கோலி மட்டுமே 17 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். வெறும் 9 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகியிருந்தார். காரணம், ஸ்பின்னர்கள். பவர்ப்ளே முடிந்தவுடன் இரண்டு எண்ட்டில் இருந்துமே இஷ் சோதி, சாண்ட்னர் என ஸ்பின்னர்களை வைத்து வில்லியம்சன் அட்டாக் செய்தார். ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலியின் அணுகுமுறை சமீபமாக சுமாராகவே இருக்கிறது.

Also Read: "காரியம் துணை" எனக் களத்தில் பேசும் கேமியோ நாயகன்... பினிஷர் ஆசிஃப் அலியின் சக்சஸ் ஸ்டோரி!

விராட் கோலி

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்த பேட்ஸ்மேன்களில் கோலியும் ஒருவர். இப்படியான நிலையில் இரண்டு எண்ட்டில் இருந்தும் ஸ்பின்னர்களை எதிர்கொண்டதாலயே கோலியால் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் கூட ஆடியிருக்க முடியவில்லை. கடைசியில் லெக் ஸ்பின்னரான இஷ் சோதியிடமே வீழ்ந்திருந்தார். ஒருவேளை கோலி நம்பர் 3 இல் இறங்கியிருந்தால் இரண்டு எண்ட்டில் இருந்தும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்காது.

இஷன் கிஷனுக்காக பேட்டிங் ஆர்டரில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்களே இந்திய அணிக்கு பேரழிவாக அமைந்தது. உலகக்கோப்பையில் முக்கியமான போட்டியில் இப்படியான ஏற்கெனவே நிரூபிக்கப்படாத மாற்றங்களைச் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. Do or die போட்டியில் இப்படி மாற்றங்கள் செய்வதே பாவம். ஆனாலும், அந்த மாற்றங்கள் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட மாற்றங்களாக இருந்திருந்தால் பாதிப்பையாவது கொஞ்சமேனும் குறைத்திருக்கலாம். ரோஹித் சர்மா-இஷன் கிஷன் ஓப்பனிங், நம்பர் 3 இல் கோலி, நம்பர் 4 இல் ராகுல் என இறக்கப்பட்டிருந்தால் சேதாரம் குறைந்திருக்கக்கூடும். ஏனெனில் மூன்றுமே ஏற்கனவே நிரூபிக்கப்பட்டவை. ரோஹித் - இஷன் கிஷன் கூட்டணி ஐ.பி.எல் இல் ஓப்பனிங் இறங்கிய அனுபவம் இருக்கிறது. நம்பர் 3 கோலி ஆட்சி செய்யும் இடம். இந்திய அணிக்காக நம்பர் 4 இல் ராகுல் ஏற்கெனவே கலக்கியிருக்கிறார்.

உலகக்கோப்பை தொடர்களில் வெற்றிகரமாக கேப்டன்சி செய்திருக்கும் தோனியின் அனுபவத்திற்காகவே அவர் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இப்படியான முக்கியமான போட்டிகளில் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அணிக்கு உதவுவதற்காகவே தோனி வரவழைக்கப்பட்டார். ஆனால்,

ரவி சாஸ்திரி - கோலி - தோனி - ரோஹித்
ஆலோசகர் தோனி, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி என மூவரும் இணைந்து செய்த மாற்றங்கள் எதுவுமே இந்திய அணிக்கு நல்ல பலனை தரவில்லை என்பதே உண்மை.

பேட்டிங்கில் இவ்வளவு குழப்பமும் சொதப்பலும் அரங்கேறிய பிறகு பந்துவீச்சை பற்றி பேசி பலனில்லை. ஆனாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு துளி கூட தடுமாற்றத்தை கொடுக்கவே இல்லை. நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்கள். இரண்டையுமே பும்ரா மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

Also Read: IND v NZ: ஏறக்குறைய `நாக் அவுட்'... இந்தியா அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசமாக்க என்ன செய்யவேண்டும்?

கோலி-வில்லியம்சன்

நியுசிலாந்து அணி ரொம்பவே எளிதாக 15 வது ஓவரிலேயே டார்கெட்டை சேஸ் செய்துவிட்டது. இந்தியாவின் ரன்ரேட்டும் பயங்கரமாக அடி வாங்கியிருக்கிறது. இந்தியாவிற்கான அரையிறுதி வாய்ப்பு முழுவதுமாக சாத்தியமில்லை என சொல்ல முடியாது. இந்தியா அடுத்து வரும் போட்டிகளில் பெரிதாக வெல்ல வேண்டும். ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை அப்செட் செய்ய வேண்டும்... அதன்பிறகு இந்தியா நமீபியாவை... என எக்கச்சக்க சிக்கலான கணக்குகள் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே இந்தியாவிற்கு ஒரு வாய்ப்புண்டு.



source https://sports.vikatan.com/cricket/indias-semi-final-chances-are-bleak-after-their-defeat-against-newzealand

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை: ``அன்று நாங்கள் தலையிடவில்லை என்றால்..!" - திருமாவளவன் காட்டம்

கடலூர் மாவட்டம், கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 13 பேர் குற்றவாளிகள் என்று எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி தீர்ப்பளித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, முருகேசனின் பெற்றோர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கூட்டியிருந்தது. இந்நிலையில், 'சாதிய ஆணவ படுகொலைகளுக்கு எதிரான பொது உரையாடல் நிகழ்ச்சி' 30.10.2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், "இந்த அமர்வின் முக்கிய நோக்கம், ஆணவப்படுகொலை தடுப்பதற்கு என ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும். மாநில அரசே அந்த சட்டத்தை இயற்ற வேண்டும்.

Also Read: கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை: 13 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு; 2003-ல் நடந்தது என்ன?

அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. இந்திய ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இப்படிப்பட்ட சட்டங்களை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. தமிழக உயர் நீதிமன்றமும் அப்படிப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கின்றது. ஆனாலும், ராஜஸ்தான் மாநிலத்தை தவிர்த்து வேறு எங்கும் இதுவரையில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு என்று சட்டங்கள் இயற்றப்படவில்லை. ஒன்றிய அரசு அப்படி சட்டத்தை இயற்ற போவதாக கூறி கொண்டு நாடகத்தை நடத்திக் கொண்டுள்ளது.

கண்ணகி - முருகேசன்

ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, தற்போது ஆளும் பி.ஜே.பி தலைமையிலான அரசாக இருந்தாலும் சரி... சாதி, மதங்களின் பெயரால் கொடூரமான முறையில் அரங்கேற்றப்படுகின்ற சாதிய படுகொலைகளை தடுப்பதற்கான சட்டங்களை கொண்டு வருவதற்கு எவ்வித முனைப்பும் காட்டவில்லை. அதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒன்றிய அரசு விரும்பினால், அவசர சட்டங்களை கொண்டுவந்து நாடாளுமன்ற அவைகளில் ஒப்புதல் பெற்றுக்கொள்வார்கள். எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்தாலும் தங்களின் பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்வார்கள். சிஏஏ திருத்தச்சட்டம், முத்தலாக் போன்ற பல சட்டங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் நடைபெறும் ஆணவப் படுகொலைகள் குறித்த விவரங்களை தரவேண்டும் என்று கேட்டபோது உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் சொன்ன பதில், "தமிழகத்தில் அப்படி எந்த ஆணவ கொலைகளும் நடக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சாதி அல்லது மத மறுப்புத் திருமணங்கள் நடக்கும் போது தற்கொலைகள் தான் நிகழ்கின்றன அல்லது சந்தேகத்திற்கு இடமான வழக்கு பதிவு செய்யும் வகையிலான மரணங்கள் மட்டுமே தான் நிகழ்கின்றன" என்று அன்றைய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை தந்ததை அறிவோம். தமிழகத்தில் நடக்கும் கொடூரமான ஆணவ படுகொலைகளை மூடி மறைப்பதற்கு ஏன் இவர்கள் முயற்சிக்கிறார்கள்? ஏன் அதை தடுப்பதற்கு சட்டங்களை கொண்டு வரவில்லை? யார் தடுக்கிறார்கள்? ஏன் இவர்கள் தயங்குகிறார்கள்? என்பது தான் கேள்வி. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், சாதியவாதிகளின் வாக்கு வங்கிக்கு அச்சப்பட்டு, தங்களுக்கு எதிராக போய்விடுமோ என்ற பயத்திற்கு உள்ளாகி இந்த ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு என்று சட்டங்களை கொண்டுவர தயங்குகிறார்கள்.

Also Read: கண்ணகி முருகேசன் கொலை வழக்கு: `உங்க கதையை முடிச்சிடறோம்!’ - முருகேசனின் பெற்றோர் மீது தாக்குதல்

இப்படி ஒரு சூழலில் தான் கண்ணகி - முருகேசன் ஆணவ படுகொலை தொடர்பாக தீர்ப்பு வெளியாகியது. ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் வேண்டும் என்று அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும், மனித உரிமை ஆர்வலர்களும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்.

கூட்ட அரங்கு

'தமிழக அரசே அதை நிறைவேற்று' என்று உரக்கச் சொல்லவேண்டிய நேரம் இது. 'மோடி அரசே அதற்கான சட்டத்தை கொண்டுவா..! சாதி, மத மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கும் அந்த வழக்குகளை நடத்தும் காவல்துறை, நீதிமன்ற ஊழியர்கள், சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு வழங்கு' என்ற கோரிக்கைகள் அடங்கிய விவாதங்கள் தான் தற்போது தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இங்கு ஒரு சிலரின் தனிப்பட்ட அணுகுமுறையின் காரணமாக கண்ணகி - முருகேசன் வழக்கின் தீர்ப்பை பற்றி யாரும் பேசவே முடியாத ஒரு நிலை, ஒரு தேக்கம், ஒரு தயக்கம் ஏற்பட்டுவிட்டது.

மக்கள் கண்காணிப்பகம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையமும் இணைந்து, அந்த தேக்கத்தை உடைத்து பேசுவோம் என்று அழைப்பு விடுத்ததன் பேரில் தான் இன்று இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த ஆணவ கொலைகள்... உண்மையாகவே அறியாமையால், மூடத்தனத்தால் வந்தவைதான். 'சாதி விட்டு சாதி திருமணம் செய்வதை தடுக்க வேண்டும். அவர்களை படுகொலை செய்ய வேண்டும். தர்மபுரியை எரித்தது போல எரிக்க வேண்டும். என்பதெல்லாம் சாதி மீதுள்ள பாசத்தால் நடப்பதல்ல... தலித் Vs தலித் அல்லாதவர் என பிரிக்க வேண்டும் என்ற யுக்திதான் இது'. அதன் மூலமாக அவர்களால் ஓட்டுக்களை பிரித்துக் கொள்ள முடியும்.

தலித் சமூகத்திற்கு எதிரான வெறுப்பை விதைத்து, பிற சாதி மக்களை சாதி அடிப்படையிலேயே ஒருங்கிணைத்து அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்ற சுயநலம். அது தான் சோசியல் இன்ஜினியரிங்.

Also Read: உசுரை கையில பிடிச்சுக்கிட்டிருக்கோம்! - முருகேசன் பெற்றோரைத் தாக்கியது வி.சி.க-வினரா?

தர்மபுரி தொகுதியில் தன் பிள்ளையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றால், தன் சமூக வாக்குகளுடன் சேர்த்து பிற சமூகத்தின் ஓட்டுகளும் வேண்டும் என்பதற்காக இப்படியான ஒரு அரசியல் செய்து அன்று ஓட்டை வாங்கினார்கள், அதுதான் சோசியல் இன்ஜினியரிங். அடுத்த தேர்தலில் அது எடுபடவில்லை. 'திவ்யா-இளவரசன் திருமணத்தில் இந்த வன்முறை நடக்கவில்லை, நம்மால் ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள்' என்று மக்கள் புரிந்து கொண்டார்கள்.

கூட்ட அரங்கம்

நான் அரசியலுக்கு வந்த காலம் முதல் பார்க்கிறேன், பாஜக தமிழகத்தில் காலூன்ற படாத பாடுபடுகிறது. சமூகநீதி சிந்தனையாளர்கள் இங்கு அதிகம் உள்ளனர். அதனால்தான் இங்கு பாஜக-வின் திட்டம் எடுபடவில்லை. அதிமுகவை வைத்து 4 இடங்களை பிடித்துவிட்டார்கள். அதிமுக-வையே அழிக்க பார்த்தார்கள். பாம்பின் வாயில் தவளையை போல இன்றும் பாஜக பிடியிலே அதிமுக சிக்கியிருக்கிறது. பாமக-விலிருந்து பிரிந்து பலர் பாஜக நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளை 'சுவாகா' செய்வதுதான் பாஜகவின் தந்திரம். விசிக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பாஜக இங்கு கூடுதலாக கொட்டமடித்து இருக்கும். சாதிக் கலப்பு ஏற்படக்கூடாது என்பது சனாதனத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று. அதன்படி நடப்பதுதான் ஆணவக்கொலை. இந்த 21ம் நூற்றாண்டிலும் அது காட்டுமிராண்டித்தனமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

கண்ணகி- முருகேசன் ஆணவ படுகொலை நடந்த சமயத்தில், அதை தற்கொலை என்று பூசி முழுக பார்த்தார்கள். ஆனால், இவ்வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி சென்னையிலேயே பத்திரிகையாளர்கள் முன்பு போட்டுடைத்த இயக்கம் தான் விசிக. அவர்களை சமரசமாக விடாமல் தடுத்த இயக்கம் விசிக. அன்று நாங்கள் தலையிடவில்லை என்றால்... அதனை தற்கொலை வழக்காக மாற்றி, ஒன்றுமில்லாமல் செய்திருப்பார்கள். 2000-மாவது ஆண்டுகளில் அன்புமணி என்ற நபர் எங்கிருந்தார் என்றே தெரியாது. அவரிடம் நான் பேசியதாகவும், "அவர் பெரிய தொகையை தருவார் அதை வாங்கிக்கோங்க" என்று நான் சொன்னதாகவும் கூறி எதிராக திருப்பப்பார்த்தார்கள்.

Also Read: ``இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது வரவேற்க வேண்டிய விஷயம்"- பாஜக தலைவர் அண்ணாமலை!

போலிகளை அம்பலப்படுத்தும் இயக்கமாகவும், சமூகநீதி பாதுகாப்பு அரணாகவும் விசிக இருக்கிறது. அதனால் விசிக குறிவைக்கப்பட்டிருக்கிறது. பல வழிகளில் பலர் ஊடுருவல் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற இணைந்து குரல் கொடுப்போம். கூட்டணி கட்சி என்ற முறையில் தமிழக முதல்வரிடம் கவனத்திற்கு கொண்டு செல்வோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/thirumavalavans-speech-at-villupuram-regarding-caste-killings

Tamil News Today: 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு! - தொடர் கனமழையால் 6 மாவட்டங்களில் விடுமுறை!

தொடரும் கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாநிலத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் சில தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம்

தமிழ்நாட்டில், கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கனமழை காரணமாக, வேலூர், நெல்லை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-01-11-2021-just-in-live-updates

டாஸ்மாக்: ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டது எப்படி?! - அதிர்ச்சிப் பின்னணி

தமிழகத்தில் மட்டும் 5,300-க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. தமிழகத்தின் வார நாள்களில் மட்டும் 65-70 கோடி ரூபாய் மதிப்புக்கு மது விற்பனை நடைபெறுகிறது. இதுவே வார இறுதி நாள்களில் 90-100 கோடி அளவுக்கு மது விற்பனை அதிகரிக்கிறது. மேலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் மட்டும் மது விற்பனை 120-150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். கடந்த 2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் கொரோனா பேரிடர் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய மூன்று தினங்களில் மட்டும் 626 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடந்தது.

டாஸ்மாக் கடை

கடந்த அதிமுக தலைமையிலான ஆட்சியிலும் சரி, தற்போது நடைபெறும் திமுக தலைமையிலான ஆட்சியிலும் சரி, கொரோனா பரவல் குறையத் தொடங்கியதும் டாஸ்மாக் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றது. அதற்கு வருமானம்தான் காரணம் என்று பேச்சு. உண்மையில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசு கஜானாவுக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்பதுதான் பொதுப் பார்வையாகவும் இருக்கிறது.

டாஸ்மாக் மது விற்பனை மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது, செலவு எவ்வளவு, லாபம், நஷ்டம் எவ்வளவு... போன்ற விவரங்களை 2009-10 முதல் 2018-19 நிதியாண்டுவரை ஒவ்வோர் ஆண்டுக்கும் தனித்தனியாகத் தெரிந்துகொள்ள விகடன் ஆர்.டி.ஐ குழு மூலம் தகவல்களைச் சேகரித்தோம். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அலுவலகத்திலிருந்து, நமக்குக் கிடைத்த தகவல் நம் எண்ணத்துக்குத் தலைகீழான ஒன்றாகத்தான் இருந்தது. கிடைக்கப்பெற்ற ஆர்.டி.ஐ தகவலைக் கீழே உள்ள படத்தில் காணலாம்...

டாஸ்மாக் மது விற்பனை RTI தகவல்

நமக்கு வந்திருந்த விவரங்களில் 2009-10 முதல் 2018-19 நிதியாண்டுவரை, 10 வருடங்களில் கிடைத்த வருமானம் 2,65,225.71 கோடி ரூபாய், செலவு 2,65,336.54 ‬ கோடி ரூபாய் என்ற தகவல் கிடைத்திருந்தது. இதில், 2012-13 நிதியாண்டில் மட்டும் 103.64 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018-19 நிதியாண்டில் 37,026.48 கோடி ரூபாய் வருமானமும், 37,010.41 கோடி ரூபாய் செலவும் ஏற்பட்டிருந்ததாகவும். அந்த ஆண்டில் 16.07 கோடி ரூபாய் லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.

சமீபத்தில், பழநியைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டாஸ்மாக் நஷ்ட விவரங்களைக் கேட்டிருந்தார். அந்தத் தகவலில் 2019-20 நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் மது விற்பனையில் 71.93 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே 2009-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மொத்தமாக 312.43 கோடி ரூபாய் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சிவஞானம் RTI தகவல்

ஆண்டுக்கு 35,000 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெறும் ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்பது பலருக்கும் அதிர்ச்சியான தகவலாகத்தான் இருக்கும். இந்த நஷ்டத்துக்குக் காரணம், மது உற்பத்தி ஆலைகளிடம் கொள்முதல் செய்வது, டாஸ்மாக் பணியாளர்களின் சம்பளம், கடை வாடகை, பராமரிப்பு, போக்குவரத்து, விநியோகம் போன்ற காரணங்கள் போக, முக்கியமாக மது விற்பனையில் அரசுக்கு ஒரு பெரும் தொகை வரியாகவும் செலுத்தப்படுகிறதாம். இது போன்ற காரணங்களால்தான், டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறப்படுகிறது.

Also Read: டாஸ்மாக்: ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5, ரூ.10 விலை - என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்?

வரியாகச் செலுத்தும் பெரும் தொகை அரசுக்குத்தான் வந்தடைகிறது என்பதால், டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினாலும், மது விற்பனையில் அரசு பல்லாயிரம் கோடிகளுக்கு அதிகமாக வருவாய் ஈட்டிவருகிறதாம்.

டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவது தொடர்பாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி) மாநிலத் தலைவர் நா.பெரியசாமியிடம் பேசினோம். `` மது விற்பனையில் வரும் லாபத்தில் இரண்டு சதவிகிதம் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்துக்குக் கிடைக்கும். விற்பனை வரி, கலால் வரி போன்ற வரிகளெல்லாம் சேர்த்து மீதமுள்ள 98 சதவிகித லாபமும் அரசுக்குத்தான் செல்கிறது. இந்த காரணத்தாதான், ஒரு சில ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

நா.பெரியசாமி

மேலும், ``மது விற்பனை தனியாரிடம் இருந்த நேரத்தில், தனியார் மது விற்பனையாளர்களுக்கு 34 சதவிகிதம் வரை லாபம் கிடைத்தது. அந்த லாபத்திலிருந்து அவர்கள் விற்பனை வரி, வருமான வரி போன்றவற்றைச் செலுத்துவார்கள். டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனை ஆரம்பித்தது முதல் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் கிடைக்கும் லாபத்தில் இரண்டு சதவிகித லாபம் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்துக்குக் கிடைக்கிறது" என்று கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tasmac-liquor-sell-in-rs31243-crore-loss-what-is-the-reason

`தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி உருவான வரலாறு' - சிறப்புப் பகிர்வு!

``தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வேண்டும்" என்ற கோரிக்கை தீவிரமாக வலுப்பெற்று வருகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை, மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடகாவைப் போல, தமிழ்நாட்டுக்கும் தனிக்கொடி ஒன்றை அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வைத்துவருகின்றனர். இந்த நேரத்தில், தமிழ்நாட்டுக் கொடி பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமாகப் பரிணமித்து வந்த வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும்!

மூவேந்தர்களின் கொடி

தமிழ்நாட்டுக்கென தனிக்கொடிகள் உருவான காலமும், அவை கடந்து வந்த வரலாற்றுப்பாதையும்:

* அகண்ட தமிழ்நாடானது மூவேந்தர்களின் ஆட்சிக்காலத்தில் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என மூன்று நாடுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அவற்றுள் சேரநாட்டின் கொடியாக வில் அம்பும், சோழநாட்டின் கொடியாகப் பாயும் புலியும், பாண்டிய நாட்டின் கொடியாக இரட்டை மீன்களும் தனித்தனியே தமிழர் கொடிகளாகப் பறந்தன. அதன்பின்னர், களப்பிரர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், வெள்ளையர்கள் உள்ளிட்ட அந்நிய நாட்டு மன்னர்களின் ஆட்சிகளால், தமிழ் மன்னர்களான மூவேந்தர்களின் கொடிகள் பல நூற்றாண்டுகளாகத் தனது இடைக்கால வரலாற்றை இழந்தது. ஆனால், மீண்டும் 20-ம் நூற்றாண்டில் தனது வரலாற்றை எழுதத்தொடங்கியது.

* 1938-ம் ஆண்டு, சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, பள்ளிகளில் இந்திமொழியைக் கட்டாயமாக்கினார். அதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள், நீதிக்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிரமான இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர். அந்தப் போராட்டத்தில், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களின் கொடிச்சின்னங்களான வில், புலி, மீன் கொடிகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட, ஒற்றைக்கொடியே `தமிழ்க்கொடி'யாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1938- மொழிப்போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்க்கொடி

குறிப்பாக, 1939-ம் ஆண்டிலும் தொடர்ந்த அந்தப் போராட்டத்தில், 14 வயது சிறுவனாகக் கலந்துகொண்ட கருணாநிதி, இந்தத் தமிழ்க்கொடியைத்தான் கையில் ஏந்திச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சி.பா. ஆதித்தனார்

* 1942-ம் ஆண்டில் `தமிழ் ராச்சியக் கட்சி'யைத் தொடங்கிய சி.பா. ஆதித்தனார் `தமிழப்பேரரசு' என்ற நூலை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டு இலச்சினையாக மூவேந்தர்களின் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார். பின்னர் 1957-ம் ஆண்டு தனது கட்சியை `நாம் தமிழர்' இயக்கமாகப் பெயர்மாற்றி 1958-ல் `சுதந்தரத் தமிழ்நாடு' மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டிலும் மூவேந்தர்கள் கொடி பயன்படுத்தப்பட்டதாக மூத்த அரசியல் ஆர்வலர்கள் பலராலும் கூறப்படுகிறது.

* 1946-ம் ஆண்டில் `தமிழரசுக் கழகம்' என்ற இயக்கத்தை ம.பொ.சி தொடங்கினார். தனது இயக்கத்தின் கொடியாக ஒன்றிணைந்த மூவேந்தர்களின் கொடியையே பயன்படுத்தியிருக்கிறார். அதேபோல, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கடல், கப்பல், மூன்று சிங்கங்கள், இரண்டு மீன்கள் என்றிருந்த சென்னை மாநகராட்சிக் கொடியை மாற்றியமைத்து, மூவேந்தர்களின் 'வில், புலி, மீன்' சின்னங்கள் அடங்கிய கொடியை, சென்னை மாநகராட்சியின் புதிய கொடியாக ம.பொ.சி பறக்கவிட்டார்.

ம.பொ.சி. வடிவமைத்த சென்னை மாநகராட்சிக் கொடி

* 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில், கோவை விவசாயக் கல்லூரி மாணவர் ராமசாமி தலைமையில் அதிக அளவில் மாணவர்கள் அணிதிரண்டனர். பேரணியாகக் கோவை வ.உ.சி. மைதானத்துக்குச்சென்ற அவர்கள், தங்கள் கைகளில் வைத்திருந்த, தமிழ்நாடு வரைபடம் அடங்கிய ஒரு கொடியை, `தமிழ்நாட்டுக் கொடியாக' மைதானத்தில் ஏற்றினார்கள். பின்னர், `தமிழ்நாடு வாழ்க' எனக் கோஷமிட்டு தங்களின் தமிழ் உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

1970-களில் கருணாநிதி அறிமுகப்படுத்தியக் கொடி

* 1970-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, `மத்தியில் கூட்டாட்சி...மாநிலத்தில் சுயாட்சி' என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக்கொடி வேண்டும் எனப் பிரதமர் இந்திராகாந்தியைச் சந்தித்து கோரிக்கை முன்வைத்தார். அப்போது, டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தான் வடிவமைத்து வைத்திருந்த தமிழ்நாட்டின் கொடியை அறிமுகப்படுத்தினார்.

Also Read: ``ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்; விரைவில் அரசாணை!’’ - முதல்வர் ஸ்டாலின்

கொடியுடன் கருணாநிதி

அந்தக்கொடியின் வலது மேற்புறத்தில் இந்தியத்தேசியக் கொடியும், இடது கீழ்ப்பகுதியில் தமிழகத்தின் இலச்சினையான கோபுர முத்திரையும் இடம்பெற்றிருந்தது. பின்னர், இந்த கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

* 1980-களில் `சாதி ஒழிப்பே...தமிழ்நாடு விடுதலை' எனக்கூறி ஆயுத வழியில் போராடிய தமிழரசனின் `தமிழ்நாடு விடுதலைப் படை' அமைப்பு சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் ஐந்து நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு கொடியைத் தமிழ்நாட்டுக் கொடியாகப் பறக்கவிட்டது.

தமிழ்நாடு விடுதலைப்படை கொடி

* 1990-களின் பிற்பகுதியில், தமிழ்நாடு விடுதலைப் படை பயன்படுத்திவந்த தமிழ்நாட்டுக் கொடியில், ஏறுதழுவுதல் இலச்சினையையும் சேர்த்து, தமிழ்நாட்டுக்கொடியாக வீரப்பனால் காட்டுக்குள் பறக்கவிடப்பட்டது.

கொடியுடன் வீரப்பன்

* 2010-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் `தமிழர் இறையாண்மை மாநாட்டை' நடத்தினார். அந்த மாநாட்டில் சிவப்பும், மஞ்சளும், நீலமும், நட்சத்திரமும் கொண்டு வடிவமைக்கப்பட்ட கொடியை, `தமிழ்நாட்டுக் கொடியாக' அறிவித்து, திராவிட கழகத்தலைவர் கி.வீரமணியின் கைகளால் வெளியிட்டார்.

தொல்.திருமாவளவனால் `தமிழர் இறையாண்மை மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்க்கொடி

* 2016-ம் ஆண்டு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உருவாக்கிய `நாம் தமிழர் கட்சி செயற்பாட்டு வரைவு' ஏட்டில் மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் அடங்கியகொடி தமிழ்நாட்டின் கொடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நீலநிறம் கொண்ட அந்தக் கொடியில் `வெல்க தமிழ்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. அதன்பின்னர், ஜல்லிக்கட்டுப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட போராட்டங்களில் இந்தக்கொடி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

* 2018-ம் ஆண்டு `தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' என்ற அமைப்பின் சார்பில், சிவப்புநிறக்கொடியின் நடுவே மஞ்சள் நிறப் பின்புலத்தில் மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் பொறித்த கொடி `தமிழ்நாட்டுக் கொடியாக' வெளியிடப்பட்டது.

சீமானின் நாம் தமிழர் கட்சியால் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டுக்கொடி

* 2019-ம் ஆண்டு, தமிழ் உணர்வாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு, நவம்பர் 1-ம் தேதியை `தமிழ்நாடு' நாளாக அறிவித்தது. மேலும், அந்த நாளை அரசு விழாவாகவும் அறிவித்து அரசாணையும் வெளியிட்டது.

தமிழ்நாடு நாள் விழா அழைப்பிதழ்

* அதனைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டு `பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' சார்பில் `வெள்ளைக்கொடியில் சிவப்பு தமிழ்நாடு வரைபடம்' அடங்கிய கொடி ஒன்று தமிழ்நாட்டுக்கொடியாக வடிவமைக்கப்பட்டது. அதை, பொழிலன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர். பின்னர், நவம்பர் 1-ம் நாள் அந்தக்கொடி ஏற்றப்பட்டு தமிழ்நாடு நாளும் கொண்டாடப்பட்டது. அதேபோல், நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ்த்தேசிய அமைப்புகள் மூவேந்தர் கொடியைத் தமிழ்நாட்டுக் கொடியாக அந்த நாளில் ஏற்றிக் கொண்டாடினர்.

தமிழ்நாடு நாள் விழா - நாம் தமிழர் கட்சி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், அரசுகள் தங்களுக்கென தனித்தனியே கொடிகளை அடையாளப்படுத்தி, ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அதேபோல, ``தமிழ்நாட்டுக்கும் கட்சி சார்பற்ற நிலையில் ஒரு பொதுவான கொடியை அரசே வடிவமைத்து, வெளியிடவேண்டும்" என பெரியாரிய உணர்வாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்திவருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-the-discussion-on-tamilnadu-flag

Online Workshop on Automotive Design and Development



source https://www.vikatan.com/events/announcements/online-workshop-on-automotive-design-and-development

1/11/2021 | இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan



source https://www.vikatan.com/spiritual/astrology/01112021-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan