கடந்த ஆண்டு மதுரையில் நடந்த அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், முதலமைச்சரையும் அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மீது அவதுாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கில் நேரில் ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதால் இன்று செல்லூர் ராஜூ ஆஜரானார். அப்போது வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 21 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "நான் அந்த ஆர்ப்பாட்டத்தில் உண்மையைத்தான் கூறினேன். ஆனால், என்மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். நான் பொதுவாழ்க்கைக்கு வரும்போது தி.மு.க தொடர்ந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அந்த வழக்கில் குற்றமற்றவன் என நிரூபித்து விடுதலையானவன். அவதூறு வழக்கெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, வழக்குகள் எல்லாம் எனக்கு ஜூஜூபி.
பொதுவாழ்க்கைக்கு வந்தபின்பு வழக்குகளை கண்டு அ.தி.மு.க.காரர்கள் பயப்பட மாட்டார்கள். தேர்தல் வாக்குறுதியில் கூறிய எதையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை என்பதைத்தான் அன்று பேசினேன். நான் அன்று ஆர்ப்பாட்டத்தில் பேசியதைத்தான் தமிழக மக்கள் நாள்தோறும் பேசிக்கொண்டுள்ளனர். நான் மேடையில் பேசியதால் அவதூறு வழக்கு போட்டார்கள்.
குறைகளை களைவதை விட்டுவிட்டு பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையைத்தான் தி.மு.க செய்கிறது. இந்த வழக்கு போட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறேன். காரணம், அதனால்தான் இன்று எங்கள் கட்சியிலுள்ள இவ்வளவு வழக்கறிஞர்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. எங்கள் கட்சியில் இளைஞர்கள் மட்டுமல்ல, வழக்கறிஞர்களும் அதிகம் உள்ளனர்" என்றவரிடம்,
"அ.தி.மு.க சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பி.எஸ்-க்கு நீதிமன்றம் மீண்டும் தடை விதித்துள்ளதே...?" என்ற கேள்விக்கு,
"நாங்கள் புலிவேட்டைக்கு செல்கிறோம். எலியைப் பற்றி பேசாதீர்கள்" என்று சிரித்தபடி கூறிவிட்டு கிளம்பினார்.
source https://www.vikatan.com/government-and-politics/sellur-raju-press-meet-at-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக