ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவர் விருதுநகர் மாவட்ட ஊராட்சி 3வது வார்டு கவுன்சிலராக உள்ளார். தனது வார்டில் அடிப்படை பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மாவட்ட கவுன்சிலர் கூட்டத்தில் கேள்வி எழுப்பியதால், இவருக்கும் விருதுநகர் மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர் வசந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக வசந்தியின் கணவரும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மான்ராஜ், கணேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து கொலை மிரட்டல் குறித்து, கடந்த மாதம் 25-ம் தேதி மாவட்ட கவுன்சிலர் கணேசன், வன்னியம்பட்டி போலீஸில் மான்ராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அவரின் மனைவி வசந்தி மீது புகார் அளித்தார்.
அதனடிப்படையில் வன்னியம்பட்டி போலீஸார், கொலைமிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலர் கணேசனுக்கு இடையேயான பிரச்னையில் சமாதானம் ஏற்படுத்த நடந்த முயற்சியாக விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த 5-ம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலில் மாவட்ட கவுன்சிலர் கணேசனுக்கு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், மான்ராஜ் எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலர் கணேசனுக்கு இடையேயான பிரச்னை முடிவுக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் விருதுநகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் மாவட்ட கவுன்சிலர் கணேசன் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கணேசன் தெரிவிக்கையில், 'எனது வார்டில் அடிப்படை பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்க கூறினால், கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெற நிர்பந்திக்கின்றனர். இதனால் எனக்கு வாக்களித்த மக்களின் நலனுக்காக வருவாய்த்துறை அமைச்சர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து உள்ளேன்' சுருக்கமாக கூறிச்சென்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/srivilliputhur-admk-district-councillor-join-dmk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக