Ad

செவ்வாய், 16 ஜனவரி, 2024

`தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் பிரதமர் மோடிக்காகத்தான் வந்திருக்கின்றன' என்ற அண்ணாமலையின் கருத்து?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க

“அரைவேக்காட்டு அண்ணாமலை, வழக்கம்போலவே தரவுகள் எதுவுமின்றிப் புளுகியிருக்கிறார். தமிழகத்துக்கு வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எவராவது பிரதமர் மோடி குறித்துப் பேசினார்களா... அல்லது அவரின் ஆத்ம நண்பர் அதானி, ‘மோடிக்காகவே தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்தோம்’ என்று சொன்னாரா... வெள்ளத்தால் எண்ணற்ற உயிர்களையும், உடைமையையும் இழந்த தமிழ்நாட்டுக்கு நிவாரணம் கொடுக்கக்கூட மனமில்லாத மோடி, பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விட்டுவிட்டு தமிழகத்துக்கு முதலீடுகளைக் கொண்டுவருகிறார் என்று சொல்வதை பைத்தியக்காரன்கூட நம்ப மாட்டான். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஒன்றிய அமைச்சரே, ‘தமிழ்நாடு முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாகத் திகழ்கிறது’ என்று பாராட்டிப் பேசியதை மறந்துவிடக் கூடாது. இங்கு இளையோர் அனைவரும் படித்தவர்களாக, திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் இங்கு ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம் என்றால் இங்கு சட்டம்-ஒழுங்கு தொடங்கி தொழில் கட்டமைப்புகள் வரை அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன என்று அர்த்தம். இது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்துக்கான பெருமை. அதையும் மோடி தலையில் எழுதத் துடியாய்த் துடிக்கிறார் தமிழ் மண்மீது விசுவாசமற்ற அண்ணாமலை. அவரது பேச்சை தமிழக மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்!”

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ஆர்.ஆனந்த பிரியா

ஆர்.ஆனந்த பிரியா, மாநிலச் செயலாளர், பா.ஜ.க

“எங்கள் தலைவர் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்திருந்தது. பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகுதான் உலக அரங்கில் பாரதத்தின் பெருமை மேலோங்கியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் வல்லரசு நாடுகள் அனைத்தும் கொரோனா பேரிடரால் பெரும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டபோது, பாரதத்தின் பொருளாதாரம் முன்னோக்கிச் சென்றதை யாரும் மறந்துவிட முடியாது. சுதந்திர இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களால் உலகளாவிய முதலீட்டாளர்களின் பார்வை இந்தியாவை நோக்கித் திரும்பியது. இவை அனைத்துக்கும் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பே காரணம். பிரதமர் மோடியின் பத்தாண்டுக்கால மத்திய அரசின் மீதான ஒற்றை நம்பிக்கையால்தான் உத்தரப்பிரதேசத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.33.5 லட்சம் கோடி முதலீடுகளும், தற்போது தமிழகத்தில் ரூ.6.6 லட்சம் கோடி முதலீடுகளும் கிடைத்திருக்கின்றன. இதை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. பாரதத்தின் வளர்ச்சிக்கு மோடி ஜி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதே இந்த தேசத்தின் குரலாக இருக்கிறது!”



source https://www.vikatan.com/government-and-politics/discussion-about-annamalai-comments-about-tamil-nadu-investments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக