"போரை நிறுத்தி விடுகிறோம். அமைதி ஒப்பந்தத்துக்கு நாங்கள் தயார்" என்ற தகவலை ஜெர்மனியின் தலைமை அமெரிக்க ஜனாதிபதிக்குத்தான் அனுப்பியது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி உட்ரோ வில்சன் (Woodrow Wilson) அறிவித்திருந்த 14 அம்ச திட்டம்.
1918 ஜனவரி அன்று அவர் 14 முனை திட்ட அறிக்கை ஒன்றை (Fourteen Points) வெளியிட்டார். அது போர்ச் சூழலைத் தவிர்க்க வருங்காலத்தில் நாடுகள் என்னவெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முன்வைத்தது. அவற்றை எளிமையாக இப்படிக் கூறலாம்.
-
நாடுகளிடையே வெளிப்படைத்தன்மை தேவை.
-
அமைதிக்காலத்தில் எந்தத் தடையும் இல்லாமல் கடல் போக்குவரத்து நடைபெற வேண்டும்.
-
வணிகத் தடைகள் நீக்கப்பட்டு அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற வேண்டும்.
-
நாட்டு மக்களின் கருத்தின்படி ஆட்சி நடத்த வேண்டும்.
-
நாடுகள் ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்வது அவசியம்.
-
ஐரோப்பியச் சக்திகள் தங்கள் கீழ் உள்ள காலனிகளைச் சமமாக நடத்த வேண்டும்.
-
போர் முடிந்தவுடன் போருக்கு முன்னால் இருந்த நிலப்பரப்புகள் போலவே மாற்றியமைக்கப்பட வேண்டும்.
-
நியாய உணர்வோடு நாட்டு எல்லைகள் அமைக்கப்பட வேண்டும்.
-
ரஷ்யாவின் ஜனநாயக அரசை ஊக்குவிக்கும் வகையில், ரஷ்யாவுக்குத் தண்டனை அளிக்கப்படக் கூடாது.
-
ஜெர்மனியின் ஆக்கிரமிப்பால் அத்துமீறப்பட்ட பெல்ஜியத்துக்கு முழுமையான சுதந்திரம் அளிக்க வகை செய்ய வேண்டும்.
-
பிரான்ஸ் நாட்டுக்குப் போரினால் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடு அளிக்கப்பட வேண்டும்.
-
ஆஸ்திரியா ஹங்கேரி சாம்ராஜ்யம் சிறிய சுதந்திரமான நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.
-
சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பு மற்றும் அமைதி ஏற்படும் வகையில் லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
உட்ரோ வில்சனின் இந்த அறிக்கை வருங்காலத்தில் நாடுகளுக்கிடையே போர் நடப்பதைத் தவிர்ப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. அமெரிக்கா பின்னர் எதிரி நாடாகி விட்டது என்றாலும் பல ஜெர்மானியர்கள் உட்ரோ வில்சனின் இந்தக் கருத்துகளோடு ஒத்துப் போனார்கள். அதுதான் அமைதிக்கு வழிவகுக்கும் எனத் தீர்மானித்தார்கள்.
தொடக்கத்தில் வில்சனின் இந்த பிரகடனத்தை நேச நாடுகள் பாராட்டின. ஆனால் போர் முடிய இருக்கிறது, அமைதி ஒப்பந்தங்கள் தொடர உள்ளன என்ற நிலையில் வில்சனின் பிரகடனத்தை ‘தெளிவற்ற கொள்கைகள்’ கொண்டதாகக் கருதின. அவற்றை அப்படியே அமல்படுத்தினால் நேச நாடுகளுக்குப் பாதகம் என்றும் கருதின.
இத்தனை நிகழ்வுகள் ஒருசேரப் பாதிக்க, மைய அணியால் இனியும் போரில் வெல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டது. 1918 நவம்பர் 9 அன்று ஜெர்மனியை அதுவரை ஆட்சி செய்த கைசர் வில்ஹெம் பதவியிலிருந்து இறங்கினார். ஜெர்மன் ராணுவம் போதும் இந்தப் போர் என்று அரசுக்குக் கட்டளையிட்டது.
பிரான்ஸ் நாட்டில் பாரீஸிலிருந்து சுமார் 19 கிலோமீட்டர் தூரத்திலிருந்த வெர்செயிலெஸ் என்ற இடத்திலிருந்த மன்னர் பதினான்காம் லூயி அரண்மனையில்தான் அமைதி ஒப்பந்தம் உருவானது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமே கலந்துகொண்டு அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தன. எதிர் அணியிலிருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா, அங்கேரி ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆக, உண்மையான பேச்சு வார்த்தைகள் நடத்தப்படவில்லை. நேச நாடுகள் தங்கள் முடிவை அமைதி ஒப்பந்தமாக அறிவித்தன. ஐரோப்பாவின் புதிய வரைபடத்தை அவை தீர்மானித்தன. தான் கைப்பற்றிய அத்தனை பகுதிகளையும் ஜெர்மனி இழக்க வேண்டி வந்தது. முதலாம் உலகப் போரில் தான் கைப்பற்றிய பகுதிகள் மட்டுமல்ல, அதற்கு முன்பாக 1871ல் நடைபெற்ற ஃபிராங்கோ ப்ரஷ்யன் போரில் ஃபிரான்ஸிடமிருந்து கைப்பற்றிய பகுதியையும் அது திருப்பித் தர வேண்டியிருந்தது.
ஆஸ்திரியா ஹங்கேரி தனித்தனியாகப் பிரிந்துவிட்டன. அதில் மேலும் பல பிளவுகள். அவரவரின் உள்நாட்டுக் கலகங்களைச் சரி செய்வதே அவற்றின் முக்கிய காரியமாகிவிட்டது.
ஜெர்மனிதான் பேரதிர்ச்சி அடைந்தது. உலகப்போர் தொடங்கியதற்கான முழுப் பழியும் அவர்கள் மீது போடப்பட்டது. தங்கள் வசம் உள்ள அத்தனை நேச நாடுகளின் ராணுவத்தினரையும் உடனடியாக அது விடுவிக்க வேண்டும். (அதேசமயம் கைது செய்யப்பட்ட ஜெர்மானிய வீரர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட மாட்டார்கள்!). ஜெர்மனி மீது விதிக்கப்பட்டிருந்த கடல் வழித் தடை அப்போதைக்கு நீக்கப்பட மாட்டாது.
ஐ.நா.வின் முன்னோடியான 'லீக் ஆஃப் நேஷன்ஸ்' என்ற உலக அமைதி அமைப்பில் ஜெர்மனி சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமில்லை. ஜெர்மனியில் ராணுவம் இனி பத்தாயிரம் வீரர்களை விட அதிகமான எண்ணிக்கையில் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அவர்களது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் எதற்காகவும் இயங்கக் கூடாது என்ற கூடுதல் நிபந்தனையும் விதிக்கப்பட்ட, ஜெர்மனி தளர்ந்து போனது.
மேற்படி ஒப்பந்தத்தில் நேச நாடுகள் சார்பில் கையெழுத்திட்டது பிரான்ஸ் ராணுவ தளபதி ஃபெர்டினாண்ட் ஃபோச். பிரிட்டிஷ் கடற்படை அதிகாரியான கேப்டன் ஜாக் மேரியட் என்பவரும் கையெழுத்திட்டார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்திய பின் ஒருவழியாக அதிகாரபூர்வமாக ஜெர்மனி அந்த அமைதி ஒப்பந்தத்தில் 1919 ஜூன் 8 அன்று கையெழுத்திட்டது.
ஜெர்மானிய மக்கள் கொதித்துப் போனார்கள். தங்களைத் தனிமைப்படுத்தி தங்களுக்கு எதிராக அநீதிகள் நடைபெறுவதாக நினைத்தார்கள். ஆனால் பரிதாபப்படத்தான் ஆட்கள் இல்லை. இதெல்லாம் போதாது என்று போரில் தங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஜெர்மனி 132 பில்லியன் தங்க மார்க்குகளை (மார்க் என்பதுதான் அப்போது ஜெர்மனியின் நாணயமாக இருந்தது) நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பெர்லின் உட்பட ஆங்காங்கே ஜெர்மனி நிறுத்தி வைத்திருந்த பீரங்கிகள் போன்ற போர் தளவாடங்களை திரும்பப்பெற்றன. ஜெர்மனி தாங்கள் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்தது.
- அதிர்வுகள் அடுத்த வாரம் முடியும்...
source https://www.vikatan.com/features/posts/first-world-war-history-how-germany-was-cornered-after-the-end-of-the-war
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக