Ad

புதன், 10 ஜனவரி, 2024

மதம் பற்றி சர்ச்சையான கேள்வி; வெட்டப்பட்ட பேராசிரியரின் கை - 13 ஆண்டுகளுக்கு பின்பு குற்றவாளி கைது!

கேரள மாநிலம், தொடுபுழா நியூமேன் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றியவர் டி.ஜெ.ஜோசப். நியூமேன் கல்லூரியில் பி.காம் மலையாளம் இன்ட்டர்னல் தேர்வில், மதம் குறித்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது. சர்ச்சைக்குரிய அந்த கேள்வியை பேராசிரியர் டி.ஜெ.ஜோசப் தயாரித்ததாகக் கூறி, 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி ஒரு கும்பல் அவரது கையை வெட்டியது. மூவாற்றுபுழா நிர்மலமாதா சர்ச்சில் பிரார்த்தனை முடிந்து மனைவி மற்றும் சகோதரியுடன் வெளியே வந்த பேராசிரியர் டி.ஜெ.ஜோசப் மீது வேனில் வந்த ஆறுபேர் கும்பல் தாக்குதல் நடத்தியது. பேராசிரியர் டி.ஜெ.ஜோசப்பின் கையை 2 பேர் பிடித்து வைத்த நிலையில், ஸவாத் என்பவர் கோடரியால் கையை வெட்டினார். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. பேராசிரியரின் கையை வெட்டிவிட்டு ஆலுவா-வில் இருந்து பெங்களூருக்குச் சென்ற ஸவாத், பின்னர் அங்கிருந்து நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றதாக தகவல் கூறப்பட்டது. எர்ணாகுளம் ஓடக்காலி பகுதியை சேர்ந்த ஸவாத், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகியாக இருந்துள்ளார். பேராசிரியர் கை வெட்டப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார் ஸவாத். இந்த வழக்கில் மற்றவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஸவாத் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாகவே இருந்தார். ஸவாத் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், அவர் குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில் எர்ணாகுளம் மாவட்டம், மட்டனூரில் தலைமறைவாக இருந்த ஸவாத்தை கொச்சி என்.ஐ.ஏ டீம் இன்று கைதுசெய்தது.

கைதுசெய்யப்பட்ட ஸவாத்

கொச்சி என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஸவாத்தை வரும் 24-ம் தேதிவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸவாத் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மட்டனூரில் வாடகை வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளார். தனது பெயரை ஷாஜகான் என மாற்றிக்கொண்ட அவர், அங்கு மர வேலை செய்து வந்துள்ளர். ஸவாத்-க்கு இரண்டாவது குழந்தை மட்டனூரில் உள்ள வீட்டில் வசித்தபோதுதான் பிறந்துள்ளது. மர வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு செல்லும் அவர், அப்பகுதியில் யாருடனும் சகஜமாக பழகுவது இல்லை என கூறப்படுகிறது. ஸ்வாத்துக்கு ரியாஸ் என்பவர் மர வேலைக்கான ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறார். காசர்கோடு கதீஜா என அவரது மனைவி பெயரில் வீடு வாடகைக்கு எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. ஸவாத்துக்கு உதவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.

ஸவாத் வசித்த வாடகை வீடு

ஸவாத் கைதுசெய்யப்பட்டது பற்றி பேராசிரியர் டி.ஜெ.ஜோசப் கூறுகையில், ``அன்று என்னை கைதுசெய்ய கேரள போலீஸ் காட்டிய வேகத்தை, இந்த வழக்கில் குற்றவளிகளை கைதுசெய்யும் நடவடிக்கையில் காட்டவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட இழப்புக்கு இது ஈடு ஆகாது. ஆனாலும், இது நீதி, நியாயத்துக்கு கிடைத்த வெற்றியாகும். பாதிக்கப்பட்டவன் என்ற நிலையில் எனக்கு எந்தவித ஆச்சர்யமும் இல்லை" என்றார். இது குறித்து கேரளா மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், "தொடுபுழா நியூமேன் கல்லூரி பேராசிரியர் ஜோசப் கை வெட்டப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளி கண்ணூர் மாவட்டம், மட்டனூரில் 13 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். மட்டனூர் சி.பி.எம் சக்திகேந்திரமாகும். அங்கிருந்துதான் பயங்கரவாதியை என்.ஐ.ஏ கைதுசெய்துள்ளது.

கை வெட்டப்பட்ட நிலையில் பேராசிரியர் டி.ஜெ.ஜோசப்

ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் காஷ்மீரில் தலைமறைவாக இருப்பார்கள். ஆனால், இப்போது காஷ்மீரில் பாதுகாப்பு இல்லை என அவர்கள் புரிந்து கொண்டார்கள். இந்தியாவில் பயங்கரவாதிகளின் மையமாக கேரளா மாறிவிட்டது. பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் நிலைபாட்டை மாநில அரசு எடுத்துள்ளது. இதற்கு முன்பு கனகமலையில் வைத்து பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ கைதுசெய்திருந்தது. பயங்கரவாதிகளுக்கு போலீஸின் உதவி வழங்கப்படுகிறது என்பது உறுதியாகி உள்ளது. 13 வருடங்கள் தலைமறைவாக வாழ்ந்தவரை போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறுவது அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கேரளா அரசுக்கு இது அவமானம் ஆகும். பயங்கரவாதிக்கு சிறப்பு உதவிகள் கிடைத்துள்ளது என என்.ஐ.ஏ கூறுகிறது. அப்படியானால் கண்ணூரில் பயங்கரவாதிகளுக்கு எல்லா வசதிகளும் வழங்கப்படுவது குறித்து விசாரிக்க வேண்டும். ஐ.எஸ் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு அதிகமாக நடந்தது கண்ணுரில்தான். ஓட்டுக்காக மத பயங்கரவாதிகளை சி.பி.எம் ஆதரிக்கிறது" என்றார்.



source https://www.vikatan.com/crime/kerala-professors-hand-cut-off-13-years-ago-main-accused-arrested-today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக