Ad

செவ்வாய், 16 ஜனவரி, 2024

மும்மொழிக் கொள்கையை முன்வைத்து திமுக அரசை சீண்டும் அண்ணாமலை! - பின்னணி என்ன?!

மும்மொழிக் கொள்கை அண்ணாமலை பேச்சு!

தமிழக அரசு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கும் விதமாக `மைக்ரோசாஃப்ட் TEALS' திட்டத்தைச் சமீபத்தில் கொண்டுவந்துள்ளது. அரசின் இந்த முயற்சிக்குக் கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர். இந்த திட்டத்தை வரவேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

அண்ணாமலை

அதில், "வரும் கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக உத்தரப்பிரதேச மாநில அரசு, கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசும் தற்போது பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. பிரதமர் மோடி கொண்டுவந்த, புதிய கல்விக் கொள்கையை படிப்படியாகத் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழ்நாட்டில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

தமிழக அரசு பதிலடி!

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் தமிழக அரசு, "ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக மைக்ரோசாஃப்ட் TEALS திட்டம் என்னும் திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாகத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கிறது. இது குறித்து அண்ணாமலை கூறுகையில், இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும் வெகு விரைவில் மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக் கூடாது. தமிழ்நாடு அரசு அவரின் கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கென்று வரலாறும் பாரம்பரியமும் உண்டு. 1997-லேயே அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி, தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து தமிழ்நாட்டுக்கென தனியே தகவல் தொழில்நுட்பத்துக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி, தனியாக ஒரு துறையை உருவாக்கி அதற்கென ஒரு அமைச்சரை நியமித்தார்.

தமிழக அரசு

டைடல் பார்க் போன்ற கட்டமைப்புகளை மாநிலத்தில் உருவாக்கி உலக நிறுவனங்களின் முதலீட்டு மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிக் காட்டினார். இதன் மூலம் சென்னை ஒரு ஐ.டி ஹப்-ஆக மாறியது இன்றைக்குப் பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் காணப்படும் ஐ.டி நிறுவனங்கள் அனைத்துக்கும் அன்றே வித்திட்டது, கலைஞர் உருவாக்கிய தனி கொள்கைதான். தமிழ்நாடு அரசு செய்ததை, செய்துகொண்டிருப்பதைத் தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு, தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது. பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பதுபோல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை. இருமொழிக் கொள்கையே தொடரும்" என்ற ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தது.

பதில் சொன்ன அண்ணாமலை!

தமிழக அரசின் இந்த பதிலைத் தொடர்ந்து தொடர்ந்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ``செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து 2018-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டுக்கான தேசிய கல்விக் கொள்கை மாதிரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர் 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான். தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்பாக தமிழகத்தில் இதற்கான கொள்கை உருவாக்கினோம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பது இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது.

அண்ணாமலை

கிண்டி பொறியியல் கல்லூரிக்கு ஐ.பி.எம் 1620 கணிப்பொறி வாங்கப்பட்ட ஆண்டு 1963. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1970 ஆம் ஆண்டு, பெரியார் செல்லும்வரை, அந்தக் கணிப்பொறி புதியதாக இருந்து என்று திமுக கூறுகிறதா... பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17, 1879 அன்று புதன்கிழமை ஆகும். அவர் பிறந்த நாள் சனிக்கிழமை என்று கணிப்பொறி கூறியதாக மற்றுமொரு பிழை அறிக்கையில் இருக்கிறது. 1967-ம் ஆண்டு, அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990-களின் பிற்பகுதியில், பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சியடையத் தொடங்கின. திறமை வாய்ந்த தமிழக இளைஞர்கள் மூலம், தமிழகம் இந்தத் துறையில் முன்னேறி வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரியாது என்ற ரீதியில் தி.மு.க அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது" என்று பதிவு செய்திருந்தார்.

வருத்தம் தெரிவிக்க வேண்டும்!

இதுகுறித்து பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "இந்த அறிக்கையைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகக் கொடுத்திருந்தால் அது சட்டவிரோதமானது. திமுக எனும் அரசியல் கட்சியின் அறிக்கையை விடுப்பதற்கு எந்தவிதமான அதிகாரமோ, உரிமையோ கிடையாது என்பதைத் தமிழக அரசு உணர வேண்டும். கடவுள் மறுப்பு என்பது ஈ.வெ.ராவின் கொள்கையாக இருந்தது. அதனால் இந்த அரசு கடவுள் மறுப்பு கொள்கையைப் பின்பற்றுகிறது என்று கூறுமா... அப்படியானால் இந்து அறநிலையத்துறையைக் கலைத்துவிட்டு ஆலயங்களை விட்டு அரசு வெளியேறுமா... ஈ.வெ.ராவுக்கும் அரசுக்கும் என்ன தொடர்பு... கட்சி வேறு, ஆட்சி வேறு என்று உணராமல் தமிழக அரசின் பெயரில் அறிக்கைகளை விடுப்பது திமுகவின், தமிழக அரசின் அராஜக செயல்பாடே.

நாராயணன் திருப்பதி

ஈ.வெ.ரா-வின் கொள்கை முற்போக்கு கொள்கை என்று அரசு சொல்வதற்கோ, பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்வதற்கோ எந்த அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை. அரசுக்கு ஆலோசனைகளை, கருத்துக்களை, எண்ணங்களைச் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்கிற நிலையில், தொழில்நுட்பம் சார்ந்து தமிழகத்துக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை என்ற ஆணவ மொழியில் இந்த செய்தி அறிக்கையில் அரசு குறிப்பிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் உருவாகும். அந்தநாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை இந்த அறிக்கையை வெளியிட்ட திமுகவின் இடைத்தரகு அரசு அதிகாரி உணரவேண்டும். செய்திக்குறிப்பை அரசு திரும்பப் பெறுவதோடு, பாஜக தலைவர் அண்ணாமலை மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு வருத்தமும் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

கிஞ்சிற்றும் வாய்ப்பில்லை!

இது குறித்து திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம், "தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளாது என்று பலமுறை சொல்லியிருக்கிறோம். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறது. இதுபோன்ற நிலையில் பாஜக தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. எதுவுமே இல்லாத சூழலில் அண்ணாமலை வழக்கம்போல பொய்யைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். அனைத்து கல்வி முறைகளிலும் வரலாறு, இலக்கியம், ஒழுக்கமும், மொழிக்கான முக்கியத்துவம், நீதி நெறிமுறைகளும் இருக்கும். இது பொதுவானதுதான். தேசிய கல்விக் கொள்கையில் இருப்பதால் அதனை நாம் பின்பற்றுகிறோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. நம்மை பார்த்துத்தான் தேசிய கல்விக் கொள்கை பின்பற்றுகிறது என்று சொல்லமுடியுமா.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தொழில்நுட்பத்தில் தமிழகம் பெரும் வளர்ச்சி அடைந்த மாநிலம். 1996-ம் ஆண்டு தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப கொள்கையைக் கொண்டுவந்தது திமுக. அதற்கான விதையைப் போட்டார் கலைஞர் கருணாநிதி. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்குப் பாடம் எடுக்க பாஜகவுக்கு எந்த அருகதையும் இல்லை. எப்படியாவது எந்த ரூபத்திலாவது இந்தியைத் திணித்துவிட வேண்டும் எனும் அவர்களின் ஆசை தமிழகத்தில் ஒருபோதும் நிறைவேறாது. அதிலும் குறிப்பாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் அதற்கு கிஞ்சிற்றும் வாய்ப்பில்லை. தேசிய கல்விக்கொள்கை நாங்கள் முழுவதுமாக நிராகரித்துவிட்டோம், தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அது பிறகும் இப்படிப் பேசுவது அர்த்தமற்றது. பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள் பேசுவதை நாங்கள் கண்டுகொள்ளப்போவதில்லை. அதனைக் கண்டுகொள்ளத் தேவையில்லை" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



source https://www.vikatan.com/government-and-politics/bjp-annamalai-targetting-dmk-government-with-tri-lingual-policy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக