Ad

புதன், 6 டிசம்பர், 2023

`கோமூத்திர மாநிலங்கள்' : திமுக எம்பி-யின் சர்ச்சைப் பேச்சால் `INDIA' கூட்டணிக்குள் புகைச்சலா?!

`நாங்கள் கோமூத்திர மாநிலங்கள் என்று அழைக்கும் இந்தி பேசும் வடமாநிலங்களில்தான் பா.ஜ.க பலத்துடன் வெற்றிபெறுகிறது' என மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தருமபுரி தி.மு.க எம்.பி. செந்தில்குமார் பேசிய பேச்சு பா.ஜ.க மட்டுமல்லாமல் `இந்தியா’ கூட்டணிக்குள்ளாகவும் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக எம்.பி செந்தில்குமார்

நடந்த முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் அமோக வெற்றிபெற்றிருக்கிறது பா.ஜ.க. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி வசமிருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டாமாகக் கருதப்படும் இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் பின்னடைவாக இருக்கும் என பேச்சுகள் அடிபடுகின்றன. இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசிய தி.மு.க எம்.பி. செந்தில்குமார், ``நாம் பொதுவாக கோமூத்திர மாநிலங்கள் (Gaumutra' states) மாநிலங்கள் என்று அழைக்கும் இந்தி மொழி பேசும் வட மாநிலங்களின் தேர்தல்களில் வெற்றி பெறுவதுதான் இந்த பா.ஜ.க-வின் பலம் என்பதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்!" என விமர்சித்திருந்தார். அப்போது இதற்கு பா.ஜ.க எம்பிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, தி.மு.க அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் செந்தில்குமாரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றினர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ``இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். அவர் பேசிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும்!" என்றார். அதேபோல மற்றொரு காங்கிரஸ் எம்.பியான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ``நாடாளுமன்றத்தில் அவர் பேசியதற்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது அவரது சொந்தக் கருத்து" என்று விலகிக்கொண்டார். மேலும், காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சுக்லாவும், ``திமுக-வின் அரசியல் வேறு. காங்கிரஸின் அரசியல் வேறு. இந்த அரசியலில் காங்கிரஸுக்கு உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கோமாதாவையும் நம்புகிறது. நாங்களும் நம்புகிறோம். அனைத்து மதத்தினரையும் இணைத்து முன்னேறுவோம்” எனத் தெரிவித்தார். அதேநேரம் ம.தி.மு.க பொதுச்செயலாளரும், எம்பியுமான வைகோ, ``அவர் சொல்வது சரிதான், அவர் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்" எனக்கூறி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

I.N.D.I.A கூட்டணி

இந்த நிலையில், பா.ஜ.கவினர் இந்த விவகாரத்தை பெரும் விவாதப் பொருளாக கொண்டுசென்று, காங்கிரஸ்-திமுகவுக்கு எதிரான பிரசாரத்தைக் கையாண்டனர். இதையடுத்து தி.மு.க அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, ``தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தியிருந்தார். இதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில், அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். அகில இந்தியப் பிரச்னைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!" என வேண்டுகோள் விடுத்தார்.

ஆர்.எஸ்.பாரதி

அதேபோல தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தனது எக்ஸ் தளத்தில் ``நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!" என மன்னிப்பு கேட்டார். மேலும், இன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்திலும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு சர்ச்சையை முடித்துவைத்தார். ஆனால், தி.மு.க அமைச்சர் உதயநிதியின் `சனாதன ஒழிப்பு' பேச்சு போலவே, எம்.பி. செந்தில்குமாரின் `கோமூத்திர மாநிலங்கள்' பேச்சையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து பா.ஜ.கவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கெனவே உதயநிதியின் சனாதன பேச்சுதான் ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடவை ஏற்படுத்தின என்று பலரும் விமர்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்போதைய செந்தில்குமாரின் பேச்சையும் கன்டென்டாக எடுத்து காங்கிரஸ்-இந்தியா கூட்டணிக்கு எதிரான ஆயுதமாக எடுத்திருக்கிறது பா.ஜ.க. அதற்கேற்றபடி, `தி.மு.கவும் நாங்களும் வேறு வேறு, அவர்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றல்ல' என தொடர்ந்து பின் வாங்கி வருகிறது காங்கிரஸ்.

மேலும், திமுக மாநில அரசியலில் வரவேற்பை பெறும் விஷயங்களை பேசும்போது, அது தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பின்னடைவாக போகிறது எனவும் கூட்டணியில் வலுவான கட்சியாக உள்ள திமுக-வின் கருத்துக்களை எதிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் உள்ளதை பாஜகவினர் பயன்படுத்துக்கொள்கிறார்கள் எனவும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில், தி.மு.க எம்.பி. செந்தில்குமாரின் பேச்சு, கூட்டணியில் விரிசலை ஏற்படுத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்திருக்கிறது. இதுகுறித்து அறிவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணாவிடம் பேசினோம். ``முதலில் மதசார்பற்ற கொள்கையில் நம்பிக்கை உடையவர்கள் கருத்துகூறும்போது, நம்பிக்கை உடையவர்களின் மத உணர்வைப் புண்படுத்தாத வகையில் கருத்து தெரிவிக்க வேண்டும். அதேபோல, இந்தியாவை வடக்கு - தெற்கு என்று வித்தியாசப் படுத்தி பார்க்கக்கூடாது. வடமாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்தாலும் வாக்கு சதவீதத்தை அப்படியே தக்க வைத்திருக்கிறது. எனவே வட மாநிலங்கள் குறித்து இப்படியெல்லாம் பேசக்கூடாது.

கோபண்ணா

தி.மு.க எம்.பி. செந்தில்குமாரின் பேச்சை முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக கண்டித்திருக்கிறார். அதேபோல, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இதேபோலத்தான் அமைச்சர் உதயநிதியின் சனாதனக் கருத்தையும் பா.ஜ.கவினர் திரித்துக்கூறி வடமாநிலங்களில் பொய்ப்பிரசாரம் செய்தனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. இந்த கருத்துகளால் இந்தியா கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் ஏற்படாது! அதேபோல, இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று விளக்கமளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/gaumutra-states-dmk-mps-controversial-speech-splits-cong-india-alliance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக