Ad

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

'தெலங்கானாவில் தெறிக்கவிட்ட காங்கிரஸ்' - கே.சி.ஆர் சறுக்கியது எங்கே?!

தெலங்கானா என்ற தனி மாநிலம் உருவாவதற்கு தானே தான் காரணம் எனக்கூறி கடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார், சந்திரசேகரராவ். ஆனால் மூன்றாவது முறையாக முதல்வராகும் அவரது கனவை தகர்த்திருக்கிறது, காங்கிரஸ். இதை எப்படி அந்த கட்சி சாத்தியமாக்கியது என்ற கேள்வியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், தெலங்கானா காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான ஜி.கே.முரளிதரனிடம் எழுப்பினோம், "தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர், ரேவந்த் ரெட்டி.

ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி - காங்கிரஸ்

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் செய்த குளறுபடிகளை நன்கு அறிந்தவர். எனவே அதுபோன்ற பிரச்சனை தெலங்கானாவில் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதால், தலைமைக்கு தெரியாமல் எதையும் செய்யவில்லை. ராகுல், சோனியா காந்தியின் அனுமதி கிடைத்த பிறகே பணிகளை தொடங்குவார். அவர் செய்த பிரசாரங்களில் மிகவும் முக்கியமானது ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் தான். அதற்காக சோனியா காந்தி செய்ததையும், சந்திரசேகர ராவுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை பொட்டில் அடித்தது போல் மக்களிடத்தில் தெரிவித்தார்.

அதாவது தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என பலரும் போராடினார்கள். அதில் முக்கியமானவர் சந்திரசேகர ராவ். அவர் தனது போராட்டத்தை காங்கிரஸில் இருந்து கொண்டுதான் மேற்கொண்டார். அப்போது 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இதையெல்லாம் பார்த்த சோனியா காந்தி, ஆந்திராவில் இருந்து தெலங்கானாவை பிரித்துக்கொடுக்க முடிவு செய்தார். அப்போது சந்திரசேகர ராவ், 'நான் தெலங்கானாவுக்காக இயக்கம் நடத்தினாலும் தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு எனது இயக்கத்தை காங்கிரஸூடன் இணைத்து விடுகிறேன்' என கூறிக்கொண்டு மத்திய அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். இதையடுத்து தனி மாநிலம் பிரித்து கொடுக்கப்பட்டது.

தெலங்கான முதல்வர் கேசிஆர்

ஆனால் தனி மாநிலம் கிடைத்தவுடன் தனி கட்சியை ஆரம்பித்தார், சந்திரசேகர ராவ். தானே இதற்கு முக்கிய காரணம் என குறிக்கொண்டு சோனியா காந்தியை எதிர்த்து அரசியல் செய்ய தொடங்கினார். பிரசாரத்துக்காக தெலுங்கு தேசத்தின் தந்தை என்ற பெயரையும் வைத்துக்கொண்டார். முழுக்க, முழுக்க தன்னை மட்டுமே ஒரு ஹீரோவாக அடையாளப்படுத்திக்கொண்டு, 2 தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் இந்த முறை அவரது பிரசாரம் எடுபடவில்லை. அதற்கு தெலங்கான பிரிக்கப்பட்டதற்கும் சோனியா காந்தி தான் காரணம் என்ற உண்மையை மக்களிடத்தில் ரேவந்த் ரெட்டி கொண்டு சென்றுவிட்டார். தெலங்கானா உருவானது கே.சி.ஆருக்கு தான் நன்மையை கொடுத்தது. மக்களுக்கு இல்லை என்பதை தெரிவித்தார். அவரின் குடும்ப அரசியல், ஊழல் புகார்கள், வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றாதது போன்றவற்றை பட்டியலிட்டார்.

இதேபோல் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு பலர் விருப்பம் தெரிவித்தார்கள் என்றால், அனைவரையும் ஒன்றாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார். அப்போது சமாதானம் ஏற்பட்டு ஒருவரை அவர்களே முன்மொழிந்து விடுவார்கள். எனவே போட்டி வேட்பாளர்கள் எந்த தொகுதியிலும் நிற்கவில்லை. எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாகிவிட்டார்கள். இதுவே தெலங்கானா வெற்றிக்கு வித்திட்டது. இதேபோல் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் என்னை மீறி யாரும் இல்லை என்றார். அதனால்தான் அங்கு காங்கிரஸுக்கு தோல்வி ஏற்பட்டது.

ஜி.கே.முரளிதரன்

ராஜஸ்தானில் அசோக் கெலாட் இளைஞர்களுக்கு வழிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அந்த அதிருப்தியின் காரணமாக மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்துவிட்டார்கள். சத்தீஸ்கரில் பழங்குடியின பெண்களுக்கு உதவித்தொகை பிரதமர் மோடி மூலமாக வழங்கியது, பா.ஜ.க.வின் வெற்றிக்கு வித்திட்டது. அதை தாமதமாகத்தான் பூபேஷ் பாகல் புரிந்துகொண்டார். எனவேதான் காங்கிரஸ் கையில் இருந்து சத்தீஸ்கர் நழுவியது. எனவே வரும் காலங்களில் தெலங்கானா போல காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றினால் அனைத்து இடங்களிலும் வெற்றி கிடைக்கும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/where-did-kcr-slip-how-congress-won-in-telangana

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக