Ad

செவ்வாய், 19 டிசம்பர், 2023

இந்தியா கூட்டணியில் வலுக்கும் தொகுதிப் பங்கீடு பிரச்னை - காங்கிரஸுக்கு பாதகமா?!

டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா‘ கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு பற்றிய விவாதம் பிரதானமாக இருக்கிறது. இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீட்டை விரைவாக இறுதிசெய்யுங்கள் என்று காங்கிரஸ் கட்சியை மாநிலக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.

‘இந்தியா’ அணி

மத்தியில் பா.ஜ.க அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட ‘இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றன. மொத்தம் 28 கட்சிகள் கலந்துகொண்ட மும்பை கூட்டத்தில், 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.

மும்பை கூட்டத்துக்குப் பிறகு, இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடைபெறவே இல்லை. மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, இப்போதுதான் கூட்டம் நடைபெறுகிறது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியதுதான் கூட்டம் நடைபெறாததற்கு முக்கியக் காரணம்.

இந்தியா கூட்டணி தலைவர்கள்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸுடன் தொகுதிப்பங்கீடு செய்துகொள்ள விரும்பின. ஆனால், தொகுதிப் பங்கீட்டுக்கு காங்கிரஸ் முன்வரவில்லை.

அதனால், காங்கிரஸ் கட்சி மீது நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். ஆகையால்தான், இந்தக் கூட்டத்தில் தொகுதிப்பங்கீட்டை விரைவாக இறுதிசெய்துவிட வேண்டும் என்று காங்கிரஸை கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தான் பெரிய கட்சி. ஆகவே, ஐந்து மாநிலத் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தம்முடைய கை தான் ஓங்கும் என்று காங்கிரஸ் கருதியது.

அகிலேஷ் யாதவ்

ஆனால், நடந்ததோ வேறு. தெலங்கானாவில் வெற்றிபெற்றாலும், ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸிடம் இருந்த அதிகாரம் கைநழுவிப்போனது. இந்தத் தோல்வியின் மூலம் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்திருக்கிறது. அதாவது, காங்கிரஸ் கட்சிக்கு பேர வலிமை குறைந்துவிட்டது. அதனால்தான், தொகுதிப் பங்கீடு பற்றி முதலில் பேசுங்கள் என்று கூட்டணி கட்சிகள் காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.

‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கின்றன. இதற்குள் நாங்கள் வேட்பாளர்களைத் தேர்வுசெய்து இறுதிப்படுத்தியாக வேண்டும். கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு, முதலில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட வேண்டும்’ என்கிறது சமாஜ்வாடி கட்சி.

ஸ்டாலின், ராகுல் காந்தி

அந்தந்த மாநிலங்களில் பலமாக இருக்கும் கட்சிகள்தான் கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்பதையும் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன. அதாவது, தமிழ்நாட்டில் தி.மு.க., மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் என்று மாநிலக் கட்சிகள் கூறுகின்றன.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கூட்டணிக் கட்சிகள் முன்வைக்கும் இத்தகைய நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் என ‘மூன்று வழி கூட்டணி’க்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி

மூன்று மாநிலத் தோல்விக்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகளின் இழுவைக்குப் போக வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தாலும், இன்னும் பழைய நினைப்பிலேயே சில காங்கிரஸ் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்திலுள்ள 13 மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்கிறார் காங்கிரஸின் பஞ்சாப் மாநிலத் தலைவரான அம்ரிந்தர் சிங் ராஜா. ‘பஞ்சாப் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கின்றன. அப்படியிருக்கும்போது, அங்கு அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று சொன்னால் எப்படி?’ என்ற கேள்வி கூட்டணிக் கட்சிகள் வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது. தொகுதி பங்கீடு என்னும் விஷயம் தான் இந்தியா கூட்டணியில் மிக மிக முக்கியமான கட்டம். இதனை முறையாக கையாளவேண்டியது அவசியம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/seat-sharing-is-prominent-in-india-bloc-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக