Ad

செவ்வாய், 5 டிசம்பர், 2023

`கோமூத்திர மாநிலங்கள்' - திமுக எம்.பி-யின் சர்ச்சை பேச்சு; கண்டித்த முதல்வர்... நடந்தது என்ன?!

தற்போது நடந்துமுடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்த பா.ஜ.க, காங்கிரஸ் வசமிருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தது. இதில், தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸும், மிசோராமில் ஜோரம் மக்கள் இயக்கமும் (ZPM) வெற்றி பெற்றது. தென்னிந்தியாவில் பா.ஜ.க காலூன்ற முடியாவிட்டாலும், வட மாநிலங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது என்பதை, இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

மோடி, அமித் ஷா

இந்த நிலையில், `மாட்டுக் கோமிய மாநிலங்களில் வெற்றி பெறுவதுதான் பா.ஜ.க-வின் பலம்' என்று மக்களவையில் தி.மு.க எம்.பி செந்தில்குமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பா.ஜ.க-வின் சமீபத்திய தேர்தல் வெற்றி குறித்து மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி செந்தில்குமார், ``இந்தி பேசப்படும் மாநிலங்களின் தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே பா.ஜ.க-வின் பலம் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். அதாவது, நாங்கள் மாட்டுக் கோமிய மாநிலங்கள் என அழைக்கும் மாநிலங்களில்... உங்களால் (பா.ஜ.க) தென்னிந்தியாவுக்குள் நுழைய முடியாது.

திமுக எம்.பி செந்தில்குமார்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை நீங்களே பாருங்கள். இங்கு நாங்கள் பலமாக இருக்கிறோம். இந்த மாநிலங்களையெல்லாம் நீங்கள் யூனியன் பிரதேசங்களாக மாற்றினால்கூட அதில் பெரிய ஆச்சர்யமிருக்காது எங்களுக்கு. இந்த வார்த்தைகளைக்கூட பதிவேடுகளிலிருந்து அவர்கள் நீக்கிவிடலாம்... அடுத்தமுறை இதுபோன்ற வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்துவேன்" என்றார். செந்தில்குமாரின் இத்தகையப் பேச்சுக்கு, பா.ஜ.க எம்.பி-க்கள் சிலர் அவையிலே எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``தி.மு.க-வின் தவறான ஆட்சியால் சென்னை மூழ்கிக்கொண்டிருக்கிறது. அதுபோலவே நாடாளுமன்றத்தில் அவர்களது எம்.பி-க்களின் பேச்சுக்களின் நிலையும். நம் வட இந்திய நண்பர்களை பானிபூரி விற்பவர்கள், கழிவறை கட்டுபவர்கள் என்று விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியிலிருக்கும் தி.மு.க எம்.பி தற்போது கோமியம் என்று விமர்சனம் செய்கிறார். தி.மு.க-வின் ஆணவமே அவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்" என்று சாடியிருந்தார். இன்னொருபக்கம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், செந்தில்குமார் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு, தனது வார்த்தைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று ட்வீட் செய்திருக்கிறார்.

பாஜக மட்டுமல்ல, காங்கிரஸ் தரப்பிலும் செந்தில் குமார் பேச்சை தலைவர்கள் ரசிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. எம்.பி. செந்தில்குமார் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ``கோ மூத்திர மாநிலங்கள் தொடர்பாக, மக்களவையில் அவர் பேசியதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவரது சொந்த கருத்து. ஆனால், கௌமுத்ராவை நாங்கள் மதிக்கிறோம்” எனப் பேசினார்.

மேலும் காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சுக்லா, ``திமுகவின் அரசியல் வேறு. காங்கிரஸின் அரசியல் வேறு. இந்த அரசியலில் காங்கிரஸுக்கு உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கோமாதாவையும் நம்புகிறது. நாங்களும் நம்புகிறோம். அனைத்து மதத்தினரையும் இணைத்து முன்னேறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரமும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரிக்கையும் வைத்தார். அதே நேரம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ``செந்தில் குமார் கருத்தில் தவறு இல்லை. அவரின் கருத்து சரி தான்.. அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்” எனப் பேசி உள்ளார்.

செந்தில்குமார் எம்.பி

இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஆனதை தொடர்ந்து, செந்தில்குமார் எம்.பி தனது எக்ஸ் பதிவில், ``முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில், அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன.

முதல்வர் ஸ்டாலின்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா சுட்டிக்காட்டிய கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றையும், அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்னைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/dmk-mp-senthilkumar-jibes-bjp-over-their-ruling-states-to-call-by-gaumutra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக