Ad

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

`எனது அரசியல் வாரிசு..!’ - சகோதரன் மகன் ஆகாஷ் ஆனந்த்தை அறிவித்த மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சிக்கு வடமாநிலங்களில் கணிசமாக வாக்கு வங்கி இருக்கிறது. தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாவிட்டாலும், வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய கட்சியாக திகழ்கிறது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக இருந்த மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக மாயாவதி நேற்று லக்னோவில் தனது கட்சியின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் மாயாவதி தனது அரசியல் வாரிசு யார் என்ற விவரத்தை அறிவித்திருக்கிறார். 28 வயதான ஆகாஷ் ஆனந்த் என்பவரை மாயாவதி தனது அரசியல் வாரிசாக அறிவித்திருக்கிறார்.

ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தின் போது மாயாவதியுடன் இருந்து தேர்தல் பிரசாரத்தை கவனித்துக்கொண்ட ஆகாஷ் ஆனந்த், இங்கிலாந்தில் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார். தனது கட்சிக்கு எதிர்கால அரசியல் தலைமை தேவை என்பதை கவனத்தில் கொண்டு மாயாவதி இந்த முடிவை அறிவித்து இருக்கிறார். மாயாவதியின் இளைய சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் தான் ஆகாஷ் ஆனந்த்.

2017-ம் ஆண்டு அரசியலில் நுழைந்த ஆகாஷ் ஆனந்த், 2019-ம் ஆண்டு கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் மாயாவதிக்கு நெருக்கமான பகுஜன் சமாஜ் தலைவர் ஒருவரின் மகளான பிரக்‌யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆகாஷிடம் மாயாவதி ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலை ஒப்படைத்திருந்தார். அதிகம் பேசாத ஆகாஷ் ஆனந்த் வரும் மக்களவை தேர்தலுக்கான பணியை இப்பொதே தொடங்கி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் கடைசியாக 2007-ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டு வரை மாயாவதி முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/mayawati-appointed-her-brothers-son-akash-anand-as-her-political-successor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக