Ad

வெள்ளி, 15 டிசம்பர், 2023

`ஒன்றிய அரசின் நிதியைப் பெற்றுத் தந்துவிட்டு அண்ணாமலை பேசட்டும்' என்ற அமைச்சரின் விமர்சனம்?

சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“அமைச்சர் பேசியிருப்பது உண்மைதான். சும்மா வாய்கிழியப் பேசும் அண்ணாமலை, இந்தப் பேரிடரில் செய்தது என்ன... ‘ஒன்றிய அரசு 450 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது’ என்று வழக்கம்போல் அரைவேக்காட்டுத் தனமாக அடித்துவிட்டிருக்கிறார். அந்த நிதி, இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் ஒன்றிய அரசு நமக்குக் கொடுக்கவேண்டிய தொகைதான். தலைநகர் சென்னை பெரும் பாதிப்பைச் சந்தித்தும், இரக்கமில்லாத ஒன்றிய அரசு எந்தவொரு தனிப்பட்ட நிதியையும் ஒதுக்கவில்லை. ஆனால், இதே பாசிச மோடி அரசுதான் குஜராத்துக்கு மட்டும் அவசர அவசரமாக 1,000 கோடி ரூபாயைக் கொடுத்தது. தங்களுக்கு வாக்களிக்காத தமிழக மக்களை வஞ்சிப்பதற்காகவே ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிட்டுச் செய்யும் நம்பிக்கை துரோகம் இது. அண்ணாமலைக்கு உண்மையில் தமிழக மக்கள்மீது அக்கறை இருந்தால், இந்நேரம் ஒன்றிய அரசிடம் பேசி, கூடுதல் சிறப்பு நிதியைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், சுற்றி அத்தனை பேர் நிற்க, ஏதோ ஆளே இல்லாததுபோல அரிசி மூட்டையைத் தூக்கிச் சுமந்து வீடியோ எடுத்துப் போட்டு ஷோ காண்பிக்கிறார். மத்திய அரசுக் குழுவே இந்தப் பேரிடரில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்று சான்றிதழ் கொடுத்துவிட்டது. ஆனால், அண்ணாமலை உட்பட எதிர்க்கட்சியினர் அரசுமீது காழ்ப்புணர்ச்சியில் அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை மக்கள் ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை!”

சிவ.ஜெயராஜ், கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“அமைச்சர் பேசியது வேடிக்கையாக இருக்கிறது. சென்னை பேரிடர் குறித்து முதல்வர் கடிதம் எழுதினார். அடுத்த 24 மணி நேரத்தில் மூத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னைக்கு வருகிறார். அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வருகிறார். அடுத்த 24 மணி நேரத்தில் பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்தியக் குழு தமிழகத்துக்கு வருகிறது. இதைவிட விரைவாக எந்த ஒரு மத்திய அரசும் செயல்பட்டது கிடையாது. அவ்வளவு ஏன், காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருக்கும்போதுகூட இந்த அளவுக்கு வேகம் கிடையாது. ஒரு பக்கம் பேரிடர் பாதிப்பு குறித்து முதல்வர் கடிதம் எழுதுகிறார் என்றால், இன்னொரு பக்கம் ஒரு மாநிலத் தலைவராக அண்ணாமலை மத்தியில் அனைவரிடமும் நிலைமையை விரிவாக எடுத்துச் சொல்கிறார். அதனால்தான், உடனடியாகப் பேரிடர் நிதியில் 450 கோடி ரூபாய் உட்பட நிவாரணத்துக்கு 1,016 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்திருக்கிறது. அதேசமயம், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருப்பது வேடிக்கையானது. அண்ணாமலையா இந்த மாநிலத்தின் முதல்வர்... எங்கள் தலைவர் முதல்வராக இல்லையென்றாலும், இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் கூடுதல் நிதியை மத்திய அரசிடம் பேசி, கண்டிப்பாக வாங்கித் தருவார். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க., மக்கள் பணி செய்துவரும் எங்களைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகையை உயர்த்தித் தர வேண்டும்!”



source https://www.vikatan.com/government-and-politics/discussion-about-annamalai-talks-about-chennai-flood

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக