Ad

வியாழன், 7 டிசம்பர், 2023

`நாலு நாளா சோறு, தண்ணி இல்ல; ஊரெல்லாம் பெட்ரோல் கலந்த கழிவுநீர்' - பிஸ்கெட்டை வீசி மக்கள் போராட்டம்!

புயல் மழை பெய்து நான்கு நாள்களாகியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் அகற்றப்படவில்லை, சரிவர நிவாரணப் பொருள்கள் சென்றுசேரவில்லை. இந்த நிலையில், தேங்கியிருக்கும் வெள்ளநீரை அகற்றாததாலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்துதராததாலும் ஆத்திரமடைந்த கே.எம்.கார்டன் பகுதி பொதுமக்கள், பெரம்பூர் பேரக்ஸ் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர் பேரக்ஸ் சாலை

திரு.வி.க.நகர் தொகுதிக்குட்பட்ட கே.எம்.கார்டன், கான்ஸ்ரான்ஸ்மித் நகர், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்ட்ரஹான்ஸ் சாலை என ஒட்டுமொத்த பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கி இன்னமும் நீர்வடியாமல் காட்சியளிக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த மக்கள் பேரக்ஸ் சாலை சந்திப்பின் நான்கு சாலைகளிலும் தடுப்பை ஏற்படுத்தி சாலைமறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிஸ்கட், பன் போன்ற உணவுப் பொருள்களை சாலையில் வீசி எறிந்து கடும் ஆவேசத்துடன் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் இறங்கியதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் பேசினோம், ``எங்கள் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். மழை பெய்து ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, அருகிலிருக்கும் அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியேற்றும் கழிவுகள், இந்தியன் ஆயில் பங்க்கிலிருந்து வெளியேறிய பெட்ரோல் கலந்த கழிவுநீர் நான்கு நாள்களாக எங்கள் பகுதியை சூழ்ந்திருக்கிறது. இதனால் இந்தக் கழிவுநீர் பட்ட இடங்களிலெல்லாம் கொப்புளங்கள், சொறி, சிரங்கும் ஏற்பட்டிருக்கின்றன" என தங்கள் குழந்தைகளின் உடல்களைத் திறந்து காட்டினர்.

பெரம்பூர் பேரக்ஸ் சாலையை ஒட்டிய அஷ்டபுஜம் சாலை

மேலும், ``நான்கு நாள்களாக எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை! உணவுப் பொருள்கள்கூட தரவேண்டாம், எங்களுக்கு மின்சாரம், குடிநீர் விட்டாலே போதும். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்வோம். ஆனால் இதை எதையுமே அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை" எனக் குற்றம்சாட்டினர்.

சாலையில் கொட்டப்பட்ட உணவுப் பொருள்கள்

தொடர்ந்து, ``இலவசமாகக் கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு ஒரு பால் பாக்கெட்டுக்கு 200 ரூபாய், தண்ணீர் கேனுக்கு 200 ரூபாய் என இரக்கமே இல்லாமல் பணம் கேட்கின்றனர். இதுதான் அரசாங்கமா... இங்கிருப்பவர்கள் எந்த உதவியும் செய்யாதபோது பெங்களூரிருந்து வந்த சிலர் எங்களுக்கு பிஸ்கெட், பிரெட், பன் போன்ற உணவுப் பொருள்களைக் கொடுத்தனர். ஆனால், அதையும் இங்கிருக்கும் சிலர், `பிஸ்கெட், பன்னுக்காகப் போராடுகிறார்கள்' என கொச்சைப்படுத்தினர். அதனால்தான் ஆத்திரத்தில் இந்த உணவுப் பொருள்களையெல்லாம் ரோட்டில் கொட்டினோம். நாங்கள் ஒன்றும் ரொட்டித்துண்டுகளுக்காகப் போராடவில்லை. நியாயமாக எங்கள் அடிப்படை வசதிகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். நான்கு நாள்களாக மின்சாரம், குடிநீர் இல்லை! அதற்காகப் போராடுகிறோம்!" எனத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் பொதுமக்களோ, `முதலில் எங்கள் இடத்துக்கு வாங்க... நாங்க ஏன் போராடுறோம்னு உங்களுக்குப் புரியும்!' என்று கூறி சமாதானம் பேச வந்த காவல்துறை அதிகாரிகளை கையோடு தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அழைத்துச்சென்றனர்.

புளியந்தோப்பு DC ஈஸ்வரன்

குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கும் பெட்ரோல் கசிவு கலந்த கழிவுநீர், வெள்ளத்தை புளியந்தோப்பு DC ஈஸ்வரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். அதோடு நிச்சயம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததால், பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.



source https://www.vikatan.com/government-and-politics/chennai-flood-petrol-mixed-sewage-people-throw-biscuits-on-the-road-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக