Ad

திங்கள், 4 டிசம்பர், 2023

நமக்குள்ளே... திடீர் மரணங்கள், இளவயது மரணங்கள்... தடுப்பதற்கான சாவி இதுதான்!

இப்போது `திடீர் மரணங்களை’ அடிக்கடி பார்க்கிறோம். குறிப்பாக, இளம் வயது மரணங்கள் மிகுந்த அதிர்ச்சி தருகின்றன. துரித உணவுகள், உடல் இயக்கமின்மை, ஸ்ட்ரெஸ், தீய பழக்கங்கள் என உடல்நலப் பிரச்னைகளுக்கு இதுவரை சொல்லப்பட்டு வந்த காரணங்களுடன், கோவிட் - 19 தன் பெயரை அழுத்தமாகச் சேர்த்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதயம், நுரையீரல் நலன் உள்ளிட்ட பிரச்னைகளை, அந்த வைரஸ் விட்டுச் சென்ற பின்விளைவுகளாகப் பெற்றுள்ளனர். குறிப்பாக, கோவிட் - 19 தொற்று, பாதிப்புக்குள்ளானவர்களின் இதய நாளங்களில் பிரச்னைகளை ஏற்படுத்தியது, மேலும் ஏற்கெனவே இருந்த இதயப் பிரச்னையை தீவிரப்படுத்தியது குறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால், கோவிட் - 19 பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஒன்றிரண்டு வருடங்களுக்கு உடலை வருத்தும் கடினமான வேலைகளைச் செய்ய வேண்டாம் என்று ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு சாட்சியாக, ஜிம்மில் பயிற்சியில் இருந்தவர் மயங்கி விழுந்து மரணம், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர் மரணம், மேடையில் பாடிவிட்டுக் கிளம்பிய பாடகர் மரணம், நவராத்திரியில் நடனமாடியவர்கள் மரணம் என செய்திகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், நாம் நினைப்பது போல இவை ‘திடீர் மரணங்கள்’ இல்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் இதயம், மூளை, நுரையீரல் என ஏற்கெனவே பாதிப்பு இருந்திருக்கிறது. ஆனால், அதை அவர்கள் அறியவில்லை. அதற்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை தகவமைக்கத் தவறி யிருக்கிறார்கள். இந்நிலையில், உடலை சிரமத்துக்கு உள்ளாக்கிய ஒரு சூழலிலோ, வழக்கமான ஒரு தருணத்திலோ அந்த நோய் உடலை மரணம் நோக்கித் தள்ளியிருக்கிறது.

நமக்குள்ளே

இந்தியர்கள் ஆயுட்கால அதிகரிப்பில் கடந்து வந்துள்ள தூரம் அதிகம். 1950களில் சராசரி ஆயுட்காலம் என்பது 35 வயதாக ஆக இருந்தது. 1995-ல் அது 60 வயது வரை அதிகரித்தது. இன்று சாத்தியமாகியுள்ள மருத்துவ தொழில்நுட்பங்களால் அது 70 வயது வரை நீண்டுள்ளது. ஆனால், இப்போது நாம் 30, 40 வயதுகளில் எல்லாம் உயிர்களை மாரடைப்பு உள்ளிட்ட வாழ்வியல் நோய்களுக்கு பலிகொடுத்துக்கொண்டிருக்கிறோம். காரணம், நோயைப் பற்றி அறியாமல் இருப்பது.

காரணத்தை சொல்லும்போதே தீர்வும் தெரிந்திருக்கும். ஆம்... நோயை அறிந்து கொள்வதற்கான உடல்நலப் பரிசோதனைகளும், அதன் அடிப்படையில் தாமதிக்காமல் ஆரம்பிக்கும் சிகிச்சைகளுமே இதற்கான முதன்மை தீர்வு. முதியவர்கள் மட்டுமல்ல, இன்று இளைஞர்கள், நடுத்தர வயதினர் எனப் பலரும் நோய்க்கு அருகிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உடல்நலப் பரிசோதனைகள் அவசியமாகின்றன.

‘வரும் முன் காப்போம்’ என்பது எக்காலத்துக்குமான புதுமொழிதானே தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்



source https://www.vikatan.com/editorial/namakkulle-editorial-page-december-19-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக