Ad

வெள்ளி, 1 டிசம்பர், 2023

ஆன்லைன் பணப் பரிமாற்றம்... பிரதமரின் வேண்டுகோளை வரவேற்போம்!

‘‘ஒரு மாத காலம் பணப் பரிவர்த்தனையை முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளும்படி’’ வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பணப் பரிவர்த்தனையை முறைப்படுத்தவும், அரசின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரவும் இந்த நடவடிக்கை மிக மிக அவசியம் என்பதால், பிரதமர் விடுத்திருக்கும் இந்த வேண்டுகோள் மிகச் சரியானதே!

இன்றைக்குப் பலரும் குறைவான வருமானத்தைக் கணக்கில் காட்டி, குறைந்த அளவு வரியை செலுத்துகின்றனர். இதனால் நலத் திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு நிதித் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ரொக்கப் பணப் பரிமாற்றம், கறுப்புப் பணத்தை அதிகரிக்கச் செய்வதுடன் அரசின் வரி வருவாயைக் குறைக்கிறது.

இந்தப் பிரச்னைக்கு முக்கியமானதொரு தீர்வாக இருக்கிறது ஆன்லைன் முறையிலான பணப் பரிமாற்றம். இது சிறப்பாக நடக்கத் தேவையான தொழில் நுட்பம் நன்கு வளர்ந்துவிட்ட நிலையிலும், அவற்றைப் பயன்படுத்த சிலர் தவிர்க்கின்றனர். தனிநபர்கள் மட்டுமல்ல, மொத்த விலையில் வர்த்தகம் செய்யும் பல வர்த்தக நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரியைத் தவிர்க்க ரொக்கமாகவே பணம் வாங்குகின்றன. அவ்வளவு ஏன், அரசு அலுவலகங்களில்கூட ரொக்கமாகவே பணம் கட்ட வேண்டிய நிலை இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டுமெனில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டும் எனக் கட்டாயமாக்க வேண்டும். எங்கெல்லாம் ரொக்கமாகப் பணம் வாங்கப்படுவதாகத் தகவல் வருகிறதோ, அங்கெல்லாம் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும். ஒருவர் ஆண்டு முழுக்கப் பெறும் வருமானத்தில் 10% ஆன்லைன் மூலமே பெற வேண்டும்; இந்த அளவை ஆண்டுதோறும் 10% என்கிற அளவில் உயர்த்த வேண்டும். முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே பரிமாற்றம் செய்யப்படும் டிஜிட்டல் கரன்சியின் அளவை ஆண்டுதோறும் 1% அல்லது 2% அளவில் அதிகரிக்கத் தொடங்கி, பிறகு அதன் அளவை வேகமாக உயர்த்த வேண்டும்!

அதே சமயம், சிறுதொழில்முனைவோர்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இருக்கும் அசெளகரியங்கள் என்ன என்று கண்டறிந்து, அவற்றைத் தீர்த்துத் தர வேண்டும். பணப் பரிமாற்றமானது கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிகிற மாதிரியான தொழில்நுட்ப வளர்ச்சியை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டு வர மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறையைப் பயன்படுத்தும் சிறுதொழில்முனைவோர்களை ஊக்குவிக்கப் பலவிதமான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். முக்கியமாக, ஆன்லைன் பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்தும்போது மோசடியில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஆக, வரி வருமானத்தைப் பெருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்தால், வேறு வழியில்லாமல் மக்கள் அதைப் பின்பற்றவே செய்வார்கள். இந்த நடவடிக்கைகளை எடுக்கும் துணிச்சல் மத்திய அரசுக்கு இருக்கிறதா?

- ஆசிரியர்



source https://www.vikatan.com/personal-finance/money/online-money-transaction-request-prime-minister

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக