Ad

புதன், 20 டிசம்பர், 2023

மாஞ்சோலை: `அந்த ஒரு கொலை!' இன்றுவரை புரியாத உயிரிழப்பு|1349/2 எனும் நான்| பகுதி 40

எஸ்டேட்டில் சுகபோக வாழ்வு என்பதெல்லாம் இல்லை என்றாலும், ஒரு நிலையான பணி தரும் பாதுகாப்பு இருந்தது.

சிறிதெனினும் தமக்கென்றொரு வீடு, எதையும் எதிர்பாராமல், எதற்கும் உறுதுணையாய் சக தொழிலாளர்கள். இவற்றை இழந்து வேலைநிறுத்த காலத்தில், வேற்று ஊர்களுக்கு வேலைக்குச்சென்ற மக்கள், பல புதிய போராட்டங்களைச் சந்தித்தனர்.

இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்ட மறுநாளாம் 05.09.1998 அன்று மதுரையில் தொழிலாளர் இணை ஆணையர் தலைமையில் எஸ்டேட்டில் நடக்கும் கூலி உயர்வு போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட அப்போதைய ஆளுங்கட்சியான திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கங்களும், எஸ்டேட் நிர்வாக பிரதிநிதிகளும் வேலைநிறுத்தத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என அறிவித்தார்கள். ஆயினும் யாரும் வேலைக்குச் செல்லவில்லை. அதனால் 08.10.1998 அன்று சென்னையில் தொழிலாளர் ஆணையர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதற்கிடையில் எஸ்டேட்டில் கைதுசெய்யப்பட்ட 127 தொழிலாளர்களும் 16.10.1998 அன்று திருச்சி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்து, கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் போராட்டம் தொடங்கி 50 நாட்களுக்குப் பிறகு 22.10.1998 அன்று கதவடைப்பினை விலக்கிக் கொள்வதாகவும், 23.10.1998 முதல் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்தது கம்பெனி. தாங்கள் எழுப்பிய கோரிக்கைகள் எல்லாம் அப்படியே இருக்க, எந்த உத்தரவாதத்தில் போராட்டத்தினை விலக்கிக்கொள்வது என்று சொல்லி, போராட்டம் தொடரும் என்று அறிவித்தது புதிய தமிழகம்.

மாஞ்சோலை எஸ்டேட்

இருப்பினும் 23.10.1998 அன்று எஸ்டேட்டில் தொழிலாளிகள் சிலர் வேலைக்குத் திரும்பினார்கள். அந்த செய்தி அறிந்ததும், கிராமப்புறங்களில் இருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக எஸ்டேட்டுக்கு வரத்தயாராகினர். அன்று வேலைக்குச் சென்றவர்களில் பலரையும், அன்றும் அதற்கு மறுநாளும் போராட்டக் குழுவினர் சிலர் சந்தித்து, “நாமல்லாம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கோம். அதுல முடிவு தெரியுத வரைக்கும் யாரும் வேலைக்கு போவேண்டாம் என முடிவெடுத்திருக்கோமே. இப்போ நீங்க கொஞ்சபேரு மட்டும் போனா நாம எல்லோரும் இவ்ளோ நாளா பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்னுமில்லாம போயிரும். நீங்களும் வேலைக்கு போவேண்டாம்” என்று “அன்பாக” கேட்டுக்கொண்டனர். “வேற வேலை எதுவும் எங்களுக்குத் தெரியாது, நாங்க போய் இருக்க வேற எடமும் கெடயாது. அதுனால எஸ்டேட்ல வேலைக்கு போரத தவிர, வேற மார்க்கம் இல்ல” என்றே பலரும் சொல்லிவிட்டனர்

அந்தோணி முத்து

எல்லா எஸ்டேட்டுகளிலும் சேர்த்து அன்று காவல்துறை பாதுகாப்புடன் வேலைக்குப்போன சுமார் 50 நபர்களில், மாஞ்சோலை அந்தோணிமுத்துவும், அவரின் மனைவி அந்தோணி அம்மாளும், மகள் டோரா மேரியும் அடக்கம். அந்தோணிமுத்து 1972ஆம் ஆண்டில் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்து 1997 டிசம்பர் முதல் கங்காணியாக வேலைபார்த்து வந்தார். வேலைக்குச்செல்ல ஆரம்பித்த இரண்டு நாட்கள் கழித்து 25.10.1998 காலையில் எஸ்டேட் மருத்துவமனைக்குச் சென்ற அந்தோணிமுத்து வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. தேடிப்பார்த்தபோது, வீட்டருகே இருக்கும் காய்கறித் தோட்டத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பின்னர் அவரது உடலில் 16 வெட்டு காயங்கள் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் பதிவானது.

பாதிக்கப்பட்ட அந்தோணிமுத்து குடும்பத்திற்கு மட்டுமின்றி, போராட்டம் காரணமாக அப்போது எங்கெங்கோ வெளியூர்களில் வசித்துவந்த ஒட்டுமொத்த எஸ்டேட் மக்களுக்குள்ளும் பேரச்சத்தினை உண்டுசெய்தது அந்த அதிகாலைப் படுகொலை. அங்கிருந்துதான் அந்த கூலி உயர்வு போராட்டத்தின் திசைவழி மாறிப்போனது.

அதற்கு முன்னர் எஸ்டேட்டில் கொலை நிகழ்வு என்பது 1957ஆம் ஆண்டு மாஞ்சோலையில் கங்காணிகளாக வேலைபார்த்து வந்த ஜோசப் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் தொழிற்சங்க பிரச்சனையில், தொழிலாளி முத்தையா ஒரே நாளில் வெட்டிக் கொலைசெய்தது தான். அதுபோல 1987 வாக்கில் மாஞ்சோலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஊத்து எஸ்டேட்டைச் சேர்ந்த சாக்ரடீஸ் எனும் மாணவர் சந்தேகத்திற்கு இடமான முறையில், மரத்தில் தூக்கில் தொங்கி இறந்துபோனார். அது கொலையா? தற்கொலையா? என சந்தேகம் எழுந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அவை இரண்டும், அப்போது அங்கிருந்த இளம் தலைமுறையினருக்கு பரவலாகத் தெரியாதவைகள் என்பதோடு, செவிவழிச் செய்திகளாக மட்டுமே தங்கியிருந்தன.

மாஞ்சோலை எஸ்டேட்

நிகழ்காலத்தில் நடந்த அந்தோணிமுத்து கொலையால், வாழ்நாளுக்கும் உடனிருப்பர் என்று கருதியிருந்த, இரத்த சொந்தங்களைக் காட்டிலும் அன்யோன்யமாகப் பழகி வந்த சக தொழிலாளிகளை, முதன்முறையாக அச்சத்தோடு பார்க்க ஆரம்பித்தனர் அங்கிருந்தோர். கொலை விழுந்ததால் எஸ்டேட்டில் அப்போது வேலைக்குப் போய்க்கொண்டிருந்த வெகுசிலரும், பயத்தில் வேலைக்குச் செல்லவில்லை என்பதோடு, அங்கிருந்த பலரும் எஸ்டேட்டை விட்டு மீண்டும் வெளியேற ஆரம்பித்தனர்.

அந்தோணிமுத்து கொலையைத் தொடர்ந்து, மாஞ்சோலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 33/1998 என்ற குற்றவழக்கில், மாஞ்சோலை தொழிலாளர்கள் ஜோசப் என்ற ஜோஸ், சிங்கராயன் என்ற மரிய சிங்கராஜ், ஜெயபால், சாமுவேல், மணிவண்ணன், வேலுச்சாமி, சின்னசாமி மற்றும் இராபர்ட் ஆகியோருடன் எஸ்டேட்டில் அப்போது புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ பாதிரியாராகப் பணிபுரிந்த பால்ரத்தினசாமி, புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி, செயலாளர் கிருஷ்ணகாந்தன் யாதவ் ஆகிய மூவரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு எதிரிகளாகச் சேர்க்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து அந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் வேலைநீக்கம் செய்தது கம்பெனி.

அந்தக் கொலை வழக்கு திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அமர்வு வழக்கு எண் 41/2002ஆக விசாரணைக்கு வந்தது. 36 சாட்சிகளும், 45 ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் விசாரணைக்குப் பின், டாக்டர் கிருஷ்ணசாமி, கிருஷ்ணகாந்த் யாதவ் மற்றும் பாதிரியார் பால்ரத்தினசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் மூவரையும் விடுதலை செய்வதாகவும், எஸ்டேட் தொழிலாளர்கள் எட்டு பேரும் குற்றவாளிகள் என நிரூபணமானதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன், தலா ரூ. 2,000/- அபராதமும் விதித்து 01. 09. 2004 அன்று தீர்ப்பளித்தார் நீதிபதி ரஹ்மத்துல்லா.

மாஞ்சோலை எஸ்டேட்

அந்தத் தீர்ப்புக்கு எதிராக, எஸ்டேட் தொழிலாளி சிங்கராயன் தனியாகவும் மற்ற தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்தும் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். விடுதலை செய்யப்பட்ட மூவருக்கும் எதிராக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்தது. அந்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதியரசர்கள் எம். சொக்கலிங்கம், பி.ஆர். சிவகுமார் ஆகியோர் அடங்கிய ஆயம் 23.4.2007 அன்று தள்ளுபடி செய்தது. விளைவாக அதுவரையிலும் பிணையில் வெளியே இருந்தவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதிசெய்தது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக சிறைவாசம் அனுபவித்து வரும் குற்றவாளிகளை, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது. அதன் காரணமாக அந்தோணிமுத்து கொலை வழக்கில் 15 – 16 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்துவந்த எட்டு தொழிலாளர்களும் 2019ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட அந்தோணிமுத்து குடும்பம் மட்டுமல்ல, அந்த கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எட்டு தொழிலாளர்களின் குடும்பங்களும் சின்னாபின்னமாகிப் போனது. அக்கொலையின் தாக்கத்தினை வேறுவேறு வடிவங்களில் 25 ஆண்டுகள் கடந்து இன்னமும் அனுபவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த எஸ்டேட்டையும் உலுக்கிப்போட்ட இந்த படுகொலையால் வேலைநிறுத்த காலத்தில், காலாண்டுத் தேர்வு, தசரா, தீபாவளி போன்ற விடுமுறைகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் படித்துவந்த குழந்தைகளால் வழக்கம்போல எஸ்டேட்டுக்குத் திரும்ப முடியவில்லை. தாங்கள் தங்கியிருந்த விடுதியிலும், அதற்கு வழி இல்லாதவர்கள் ஆங்காங்கே இருக்கும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்து அந்த விடுமுறைகளைக் கழித்தார்கள். விடுமுறைக்கால எஸ்டேட் வாசத்தின் மகிமையும், கொண்டாட்டமும் அப்போதுதான் உறைத்தது மாணவர்களான எங்களுக்கு.

14.12.1998 அன்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில், எஸ்டேட் போராட்டம் தொடர்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனையின் முடிவில், # தொழிலாளர்கள் எல்லோரும் உடனடியாக வேலைக்குத் திரும்பவேண்டும், # தொழிலாளர்கள் வேலைத்தளத்தில் அமைதி காக்கவேண்டும், # எஸ்டேட் நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது, # நான்கு மாதங்களாக வேலையில்லாமல் இருப்பதால், தொழிலாளர்களுக்குத் தலா ரூபாய் 2,000/- முன்பணமாக கம்பெனி கொடுக்கவேண்டும், # அந்த தொகையினை மாதந்தோறும் ரூபாய். 400/- வீதம் பிடித்துக்கொள்ளலாம் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. 16.12.1998 முதல் வேலைக்குத்திரும்ப எல்லா தொழிற்சங்கங்களும் ஒப்புக்கொண்டன.

அந்த முடிவினைத் தொடர்ந்து, சுமார் 5 மாத வெளியூர் வாசத்திற்குப் பிறகு, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு, எனது பெற்றோர் அப்போது வேலைபார்த்து வந்த ஊரில், நாங்கள் குடும்பமாக தங்கமுடியாத சூழல் இருந்ததால், வேறு வழியேதுமின்றி நாங்கள் எஸ்டேட்டுக்குத் திரும்பினோம். ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த போனஸ் தொகையை, அந்த ஆண்டில் 8 மாதங்கள் வேலை பார்த்திருந்தபோதிலும் யாருக்கும் கொடுக்கவில்லை கம்பெனி. இருப்பினும் முந்தைய ஆண்டுகளைப் போலவே அந்த ஆண்டும் எங்கள் நால்வருக்கும், அவர்களால் முடிந்த விலைக்கு எங்களுக்கு புதிய ஆடை எடுத்திருந்தனர் பெற்றோர்.

மாஞ்சோலை எஸ்டேட்

இதர தொழிற்சங்கங்களும், நிர்வாகமும், அரசும் அறிவித்தபடி 31.12.1998 முதல் மீண்டும் வேலைக்குத் திரும்ப புதிய தமிழகம் உடன்பட மறுத்ததால், பெரும்பாலான தொழிலாளர்கள் அன்று வேலைக்குத் திரும்பவில்லை. ஆயினும் ஏற்கெனவே இதர தொழிற்சங்கங்கள் ஒத்துக்கொண்டபடி, வேலைக்குப்போகத் தயாராக இருந்த தொழிலாளர்கள் 31.12.1998 அன்று எஸ்டேட்டில் வேலைக்குப் போனார்கள். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் கார்த்திகேயனுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புதிய தமிழகம் அறிவித்த பின்னர் 06.01.1999 முதல் வேலைக்குத் திரும்பினர் பெருவாரியான தொழிலாளர்கள்.

சுமார் ஐந்து மாதங்களாக எஸ்டேட்டில் வேலைக்குப் போகாமல், போராட்டத்தில் ஒற்றுமையாகப் பங்கெடுத்த போதிலும், இதர தொழிலாளர்களைவிட ஆறே ஆறு நாட்களுக்கு முன்னதாக வேலைக்குச் சென்றதால், ஒவ்வொரு எஸ்டேட்டிலும் அவ்வாறு வேலைக்குப்போன தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும் அதன் பிறகு, துரோகிகளாகப் பாவிக்கப்பட்டு, பல விதங்களில் ஒதுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். கால் நூற்றாண்டு கடந்து, இன்றளவும் ஆறாத வடுக்களாக அவை நீடிக்கவே செய்கின்றன.

- தொடரும்



source https://www.vikatan.com/features/human-stories/13492-ennum-naan-part-40

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக