Ad

புதன், 31 மே, 2023

TNEA 2023 Engineering Courses | வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் இன்ஜினீயரிங் பிரிவுகள் எவை?- ஒர் அலசல்

வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் இன்ஜினீயரிங் கோர்ஸ்கள், எந்தத் துறையில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது, வளர்ந்து வரும் துறைகள் குறித்து மனிதவள மேம்பாட்டு நிபுணர் திரு சுஜித்குமாருடன் கல்வியாளர் திரு. ரமேஷ் பிரபா மேற்கொண்ட கலந்துரையாடல் இங்கே.

கடந்த பல ஆண்டுகளாகவே இன்ஜினீயரிங் ஒரு கிண்டல் அடிக்கக்கூடிய ஒரு பொருளாகவே இருந்துவருகிறது. திரைப்படங்களில் கேலி செய்யப்படுவது தாண்டி, கேவலப்படுத்தக்கூடிய வசனங்கள், மீம்ஸ் பலவற்றைப் பார்க்கிறோம். இதுகுறித்து ரமேஷ் பிரபா சுஜித்குமாரிடம் கேட்டபோது, "மருத்துவத் துறையில் உள்ளவரையோ, ஆசிரியரையோ தவறாகப் பேச முடியாது.

நிபுணர் திரு சுஜித்குமார்- கல்வியாளர் திரு. ரமேஷ் பிரபா

வழக்கறிஞர் ஒருவரைத் தவறாகப் பேசவேண்டும் என்று நினைத்தாலே அடிப்பார்கள். ஆனால் இன்ஜினீயரிங் படிப்பவர்களே அதைக் கலாய்த்துக்கொண்டு, கேலி செய்து கொண்டு இருக்கிறார்கள். பொறியியல் தொழில் வல்லுநர்கள் தானாகவே முன்வந்து அதைப் பாதுகாக்கவில்லை என்றால் இவ்வாறு நடந்துகொண்டுதான் இருக்கும். 

மற்றொரு வகையில் கூறினால், எங்கே பார்த்தாலும் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற பிம்பம் உருவாகியுள்ளது. சரி, அவ்வாறு கூறுவது உண்மையென்றால் வேறு எந்தத் துறையில் படித்தால் வேலை கிடைக்கும்? புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தால் பொறியியல் படிப்பில்தான் வேலை வாய்ப்பு விகிதம் அதிகமாக உள்ளது. பொறியியல் என்பது விருப்பமுள்ள துறையாக இருந்துவந்ததைத் தாண்டி, மிகவும் சுலபமாகக் கிடைக்கும் ஒன்றாக மாறிவிட்டதால்தான் இந்த மாதிரியான கேலி, கிண்டலுக்கு உள்ளாகிறது. நல்ல கல்லூரியில் நன்கு படித்தால் இதுபோன்று வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள துறை வேறு எதுவும் இல்லை.

Engineering Courses

எடுத்துக்காட்டாக ஒரு மீமை எடுத்தோம் என்றால், ஒரு பக்கம் பரோட்டா மாஸ்டருக்கு 18,000 சம்பளம், சாப்ட்வேர் இன்ஜினீயருக்கு 7,000 சம்பளம் என்று போட்டிருக்கும். ஒரு நல்ல பரோட்டா மாஸ்டராக இருந்தால் 18,000 என்ன, ஒரு லட்சம் வரைகூட சம்பாதிக்க முடியும். சாதாரண சமையல்காரராக இருந்தால் அது கிடைக்காது. தற்போது பார்த்தோம் என்றால், தொடக்க நிலையில் உள்ள சம்பளத்தையும் இதையும் ஒப்பிடுவார்கள்.

இன்று ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பராமரிப்பு வேலை செய்யும் ஒருவரின் சம்பளம், பதினெட்டாயிரம். தொடக்க நிலையில் உள்ள சாப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பளம் 20,000. ஆனால் ஒரு ஐந்தாறு வருடங்கள் கழித்து இவரது சம்பளம் அறுபதாயிரம், எழுபதாயிரம் என்றாகும். ஆனால் பராமரிப்பு வேலை செய்பவரின் சம்பளம் 20,000 என்ற நிலையிலே இருக்கும். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். திறன்களை வளர்த்துக்கொள்ள பொறியியல் படிப்பு போன்று வேறு எங்கும் முடியாது. 

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்தோம் என்றால் கம்ப்யூட்டர், ஐ.டி., இ.சி.இ., மெக்கானிக்கல், சிவில் போன்ற சிலவற்றை மட்டுமே பார்க்க முடியும். அதன் பிறகு ஏரோநாட்டிக்கல், பெட்ரோ கெமிக்கல் போன்ற துறைகள் வலுப்பெற்று வந்தன. இன்றைய காலகட்டத்தில் பார்த்தோம் என்றால் artificial intelligence and data science எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் போன்ற கணினி அறிவியலுக்குத் தொடர்புள்ள பிரிவுகள் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவை உள்ளன.

work place ( Representational Image)

இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், பொருளாதாரப் பின்னடைவு உள்ள நிலையிலும்கூட ஐ.டி. நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வேலைக்கு எடுக்கின்றன. இந்த மாதிரி ஒரு நிலை உள்ள காரணத்தால் கல்லூரிகளும் அதற்கு ஏற்ப துறைகளைக் கொண்டுவருகின்றன. "படித்து வரும்போது மாணவர்கள் எந்த மாதிரியாக தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்?" என்று கேட்டபோது, "கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் பரவலின் காரணமாக Mooc என்று சொல்லக்கூடிய இணைய வழி கல்வி பெரிதும் வளர்ந்துவிட்டது. சில இடங்களில் கல்லூரிகள் அற்பமாகிவருகின்றன.

Engineering

ஏதோ ஒரு குக்கிராமத்தில் உள்ள கல்லூரியில் ஆசிரியர் சரியில்லை என்று கூற முடியாது. அனைத்துப் படிப்புகளும் ஆன்லைனில், கல்லூரியில் கிடைப்பதைவிடக் குறைந்த செலவில் கிடைக்கின்றன. Coursera, Khan academy, udemy, உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் படிப்புகளை நமக்கு வழங்குகின்றன. ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என்றால் ஆசிரியர் சரியில்லை என்று காரணம் காட்டாமல், இந்த மாதிரி ஆன்லைன் கோர்ஸ்களில் படியுங்கள். எந்தத் துறையில் படிக்கிறோமோ, அதன் ஆழம் வரை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அதையும் தாண்டி, ஒன்றிரண்டு சான்றிதழ்ப் படிப்புகள் படிப்பது அதிக அளவில் உதவியாக இருக்கும். கணினி அறிவியல் படிப்பிற்கு Cloud, AWS போன்றவற்றைப் படிக்கலாம்" என்று சுஜித்குமார் கூறினார்.

"ஐம்பதுக்கும் மேற்பட்ட துறைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் 'CSE (கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்)-ஐத் தாண்டி உலகத்தில் வேறு எதுவும் வேண்டாம், அதற்காக எவ்வளவு செலவு பண்ணவும் தயார்' என்று நிற்கின்றனர். இதுகுறித்து உங்கள் பார்வை என்ன?" என்று ரமேஷ் பிரபா கேட்டபோது, ”கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த எண்ணம் உச்சக்கட்டத்தில் உள்ளது. படித்தால் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்தான் படிப்பேன் என்ற நிலையில் உள்ளனர். கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், துறை என்பது இரண்டாவது. நான் சொல்வது என்னவென்றால், ஐ.டி. துறையில் வேலை வேண்டும் என்று விரும்பி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. என்று படிக்கிறீர்கள்; அதே கல்லூரியில் ECE, EEE கிடைத்தால்கூட கண்ணை மூடிக்கொண்டு எடுத்துவிடுங்கள்.

Students |Representational Image

கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. படித்தவர்களுக்கு அதைத் தாண்டி வெளியே வேறு எந்தத் துறையிலும் வேலை வேண்டும் என்று வர முடியாது. மற்ற துறை படித்தவர்களுக்கு அந்தப் பிரச்னை இல்லை. அந்தந்தத் துறை சார்ந்த வேலைகளுக்கும் போகலாம் ஐ.டி. வேலைக்கும் போகலாம். நிறைய பேர் யோசிப்பது என்னவென்றால், கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்தால் வேலை கிடைத்துவிடும், இந்தக் கல்லூரியில் படித்தால்‌ வேலை கிடைத்து விடும். இரண்டுமே உண்மை இல்லை.‌

கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு இந்தத் துறை இல்லை என்றால் இதற்கு அடுத்தபடியாக உள்ளது எது என்று பார்க்க வேண்டும். சிலர் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் அல்லது சிவில் இன்ஜினீயரிங் என்று விருப்பங்களில் போடுவார்கள். இரண்டும் ஒவ்வொரு மூலையில் உள்ளவை. மாணவர்களிடம் இது சம்பந்தமான புரிதல் மிகவும் குறைவாக உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இல்லை என்றால் ஐ.டி., அது இல்லை என்றால் ECE, EEE என்று வரவேண்டும்.

தற்போது இருக்கக்கூடிய விமர்சனம் என்னவென்றால், ’500-க்கும் நெருக்கமான பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தேவையா?’ என்பது. நாம் தமிழ்நாட்டிற்கான பொறியாளர்களை மட்டும் உருவாக்கவில்லை; இந்தியாவிற்கான, உலகிற்கான பொறியாளர்களை உருவாக்குகிறோம். பொறியாளர்கள் சிக்கலைத் தீர்ப்பவர்கள், அவர்களை வேலைவாய்ப்பு வைத்துக் குறைத்து மதிப்பிடக் கூடாது. Gross enrollment ratio என்று சொல்லக்கூடிய மொத்தப் பதிவு விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகம் (52%). அனைவரும் பொறியியல் படிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று, திரு. சுஜித்குமார் கூறுகிறார்.

Designing | Representational Image

"ஐ.டி. துறையைத் தாண்டி, ஆட்டோமொபைல், உற்பத்தி, பேங்கிங் போன்ற துறைகளும் வளர்ந்துவருகின்றன. தமிழ்நாடு ’ஆட்டோமொபைல் ஹப்’ என்று அழைக்கப்படுகிறது. ஐ.டி. துறை போன்று அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்காவிட்டாலும் மெக்கானிக்கல் படிக்கும் ஒருவர் நான் ஆட்டோமொபைல் துறையில் வேலை வேண்டும் என்று விரும்பினால், அதில் சிறந்து விளங்கினால் நிச்சயமாக வேலை கிடைக்கும்" என்று கூறுகிறார். 

’ஐ.டி., ஐ.டி. சார்ந்த துறைகளை எடுத்துக் கொண்டால் எந்த மாதிரியான கோர்ஸ்களைக் கற்றுக்கொள்ளலாம்’ என்று கேட்டபோது, ”சைபர் செக்யூரிட்டி, CLOUD, SAP, ORACLE, PYTHON போன்ற சர்ட்டிபிகேட்கள் வைத்துக்கொள்வது நல்லது. அதன் மூலம் சிறந்த துறையில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும்” என்றார். எந்தப் பொறியியல் துறையாக இருந்தாலும் கோடிங் படித்து வந்தால் மிகவும் உதவியாக இருக்கும். சிக்கலைத் தீர்க்கும் அறிவு மற்றும் தகுதித் தேர்வுக்கான அறிவு மிகவும் முக்கியமான ஒன்று.

Representational Image

வேலைவாய்ப்பு வேண்டும் என்பதை இரண்டாவதாக வைத்துக் கொள்ள வேண்டும், அதற்கான செயல்முறைதான் மிகவும் முக்கியமான ஒன்று. இதைச் சரியாகச் செய்து வந்தால் சிறந்து விளங்கலாம். உலக விமர்சனங்களுக்காகப் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாமா வேண்டாமா என்று நினைக்காமல், தனக்கு அதில் ஆர்வம், தகுதி உள்ளது என்று நினைத்தால் தேர்ந்தெடுக்கலாம்.

முக்கியமாக யாரிடம் அறிவுரை பெற வேண்டும் என்று தெளிவாக இருக்க வேண்டும். யாரோ சொல்கிறார் என்று தொழில் துறையின் மீதான ஆசையை விடுவது போன்ற கொடுமையான ஒன்று வேறெதுவும் இல்லை. " என்கிறார்.


source https://www.vikatan.com/education/higher-education/tnea-2023-opportunities-in-engineering-courses

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக