Ad

திங்கள், 22 மே, 2023

பி.டி.ஆரின் தீவிர ஆதரவாளர் மிசா பாண்டியன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்! - காரணம் என்ன?!

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த மிசா பாண்டியன் 20 வருடங்களுக்கு முன் மதுரை மாநகராட்சியில் துணை மேயராக இருந்தவர். அதன் பின்பு பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு சர்ச்சைக்குரிய நபராகவே வலம் வந்தார்.

அமைச்சர் பி.டி.ஆர்

இந்நிலையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2016-ல் மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்றவுடன் அவரின் ஆதரவாளராக மாறினார். பி.டி.ஆர் அமைச்சரானவுடன் அவர் அலுவலகத்தில் இருப்பது, அவர் எங்கு சென்றாலும் உடன் செல்வது என பி.டி.ஆரின் நிழலாக மாறிப்போனார்.

கடந்த ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் பி.டி.ஆரின் சிபாரிசில் மிசா பாண்டியனின் மனைவி பாண்டிச்செல்விக்கு சீட் வழங்கப்பட்டு வெற்றி பெற்றார். மதுரை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தன் மனைவிக்கு வாய்ப்பு கிடைக்கும் என மிசா பாண்டியன் நினைத்திருந்தார். ஆனால், அது யாரும் எதிர்பார்க்காத நிலையில் பி.டி.ஆரின் இன்னொரு விசுவாசியான பொன் வசந்தின் மனைவி இந்திராணிக்கு கிடைத்தது. ஆனாலும், மிசா பாண்டியனை திருப்திப்படுத்த மத்திய மண்டலத் தலைவர் பதவியை அவர் மனைவிக்கு பெற்று கொடுத்தார் பி.டி.ஆர்.

பாண்டிச்செல்வி- மிசா பாண்டியன்

20 வருடங்களுக்கு முன் துணை மேயராக பொறுப்பு வகித்தபோது புதிதாக வீடு கட்டுபவர், மராமத்து செய்பவர், வணிக வளாகம் கட்டுபவர், ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்குவதாக புகார் எழுந்தது. தற்போது அவர் மனைவி மண்டலத் தலைவியானதும் மிசா பாண்டியன் மீண்டும் தன் அட்ராசிட்டியை தொடங்கிவிட்டார் என்று புகார் எழுந்தது. கட்சியினர் உட்பட யாரையும் மரியாதைக்குறைவாக பேசுவது, மாநகராட்சியின் அனைத்து அனுமதிகளுக்கும் கமிஷன் எதிர்பார்ப்பது, இதை கலெக்சன் செய்ய தனியாக ஆட்களை அமர்த்தியிருப்பதாகவும், மதுரையில் நடைபெறும் அரசுத் திட்டப்பணிகளில் பி.டி.ஆர் பெயரைச்சொல்லி ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்பதாகவும் புகார்களை தி.மு.க-வினரே தெரிவித்தனர்.

இப்புகார்கள் தொடர்ந்து தலைமைக்கு சென்றாலும் பி.டி.ஆரின் செல்வாக்கால் நடவடிக்கையிலிருந்து தப்பி வந்ததாக சொல்லப்பட்டது.

கடந்த மாதம் மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் நடந்த கூட்டத்தில் 54-வது வார்டு கவுன்சிரும் மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவருமான நூர்ஜஹான் தன் வார்டு பிரச்னை குறித்து மண்டலத் தலைவி பாண்டிச்செல்வியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அங்கிருந்த பாண்டிச்செல்வியின் கணவர் மிசா பாண்டியன், ''இந்த மாதிரி கூட்டத்தில் நன்றி மட்டும்தான் சொல்லணும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது" என்று அதட்டலாக சொல்லி இருக்கிறார்.

நூர்ஜஹான்

அதற்கு நூர்ஜஹான், "என் வார்டு பிரச்னைகளை இங்கு பேசாமல் எங்கு பேசுவது, என் வார்டு புறக்கணிக்கப்படுகிறது" என்று பதிலுக்குப் பேச உடனே கோபமான மிசா பாண்டியன், தன் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகளாலும் இழிவுபடுத்தியும் பேசியவர், கையை ஓங்கி தாக்க முயற்சித்துள்ளார். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவானதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

நூர்ஜஹான், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முதல் முதலமைச்சர் வரைக்கும் புகார் அனுப்பினார். ஊடகங்களில் பேசினார். அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று நாளிதழில் விளம்பரம் செய்து தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டுவந்தார் மிசா பாண்டியன்.

நாள்கள் பல கடந்தும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கவுன்சிலர் நூர்ஜஹான் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்தான் மிசா பாண்டியன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

மிசா பாண்டியன்

தொடர் புகாருக்குள்ளாகி வந்த மிசா பாண்டியனை கண்டுகொள்ளாமல் இருந்த தலைமை, இப்போது நடவடிக்கை எடுக்க என்ன காரணம்? என்று கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, `இவ்வளவு நாட்களாக தன் ஆதரவாளர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் பி.டி.ஆர் பார்த்துக்கொண்டார். அதனால்தான் மிசா பாண்டியன் உள்ளிட்ட பலர் தப்பித்து வந்தனர். தற்போது தி.மு.க தலைமையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பி.டி.ஆர் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். அவருடைய துறை மாற்றப்பட்டு அதிகாரமும் குறைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மிசா பாண்டியன் மீதான புகாரில் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்." என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/misa-pandiyan-suspended-from-dmk-party

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக