Ad

புதன், 24 மே, 2023

அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆவினுக்கு ‘பால்’ ஊற்றிவிடுவார்கள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானமேறி வைகுண்டம் போக ஆசைப்பட்டானாம்’ என்று சொல்வது போலதான் இருக்கின்றன ஆவின் நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கைகள்.

‘2 லட்சம் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்’ என்று அறிவித்திருக்கிறார் தமிழக பால்வளத்துறை புதிய அமைச்சர் மனோ தங்கராஜ். ஆவினுக்கு நாள் ஒன்று 38 லட்சம் லிட்டர் பால் தேவை. ஆனால், 29 லட்சம் லிட்டர்தான் கொள்முதல் ஆகிறது. மகாராஷ்டிராவின் பால் பவுடரை, பாலாக மாற்றி பற்றாக்குறையைச் சமாளிக்கிறார்கள்.

‘ஏன் பற்றாக்குறை?’ என்பதுதான் இங்கே முக்கியமாகக் கேட்கப்பட வேண்டிய கேள்வி. பாலுக்கு உரிய விலை கொடுப்பதில்லை; கொடுக்கும் பணத்தையும் உரிய நேரத்தில் கொடுப்பதில்லை; நிலுவைத் தொகை ஏறிக்கொண்டே போகிறது. இதனால், தனியார் நிறுவனங்களுக்கு விவசாயிகள் பால் கொடுப்பதுதான் பற்றாக்குறைக்குக் காரணம்.

விவசாயிகளின் நலனை பிரதானமாகக் கொண்டு செயல்படும் குஜராத் கூட்டுறவு நிறுவனமான அமுல்... ஆந்திரா, கர்நாடகாவை அடுத்து தமிழகத்திலும் நுழைந்துவிட்டது. ‘ஊர்தோறும் கூட்டுறவு பால் சேகரிப்பு நிலையம் அமைக்க விரும்புபவர்கள் வரலாம்’ என்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது அமுல். ஆவினைவிடக் கூடுதல் விலையில் பால் கொள்முதல் செய்யவும் தீர்மானித்துள்ளது.

ஆனால், ஆவின் நிறுவனமோ கடந்த ஆட்சியிலிருந்தே ஊழலின் ஒட்டுமொத்த உறைவிடமாக மாறி நிற்கிறது. அதிகாரிகள், அமைச்சர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டாலும், ஊழல் என்னவோ கம்பீரமாக சிம்மாசனத்தில் அமர்ந்துதானிருக்கிறது. ‘ஆவினின் புதிய அறிமுகம் பசும்பால்’, ‘ஆவின் தண்ணீர் அறிமுகம்’ என்று பிரச்னையைத் திசைதிருப்பும் வேலைகளைத்தான் செய்து வருகிறது ஆவின் நிர்வாகம்.

விவசாயிகளுக்குத் தேவை உரிய விலை. அதை யார் கொடுத்தாலும் அங்கேதான் பால் ஊற்றுவார்கள். நிலைமையை சரி செய்யாவிட்டால், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆவினுக்கு ‘பால்’ ஊற்றிவிடுவார்கள்’ என்பதே யதார்த்தம்!

- ஆசிரியர்

கார்ட்டூன்


source https://www.vikatan.com/agriculture/officers-and-politicians-they-will-pour-milk-to-the-aavin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக