Ad

புதன், 17 மே, 2023

Modern Love Chennai: `ஒருமுறைதான் மழை வருமா?' தமிழ் ஆந்தாலஜிகளில் இது ஏன் ஒரு முக்கியமான படைப்பு?

`தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் வாசகர்கள் தங்களின் காதல் அனுபவங்களைக் கட்டுரைகளாக மாற்றி அனுப்ப, 'மாடர்ன் லவ்' என்ற அந்தத் தொடர், பின்னர் புத்தகங்களாகவும் பாட்காஸ்ட்டாகவும் மாறி உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதை அமேசான் பிரைம் வீடியோ ஆங்கிலத்தில் வெப் சீரிஸாக இரண்டு சீசன்கள் தயாரிக்க, அதன் வெற்றி, அதை இந்தியாவுக்கும் அழைத்து வந்தது. இந்தி, தெலுங்கு என 'மாடர்ன் லவ்' கதைகள் பிரதியெடுக்கப்பட, இதோ இப்போது தமிழிலும் ஆறு எபிசோடுகள் கொண்ட முதல் சீசன் `Modern Love Chennai' என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உருவாக்கத் தயாரிப்பாளராகச் செயல்பட்டிருக்கும் இந்த காதல் ஆந்தாலஜி எப்படியிருக்கிறது?

லாலாகுண்டா பொம்மைகள்:

காதல் தோல்வி மனதளவிலும் உடல் அளவிலுமே வலியைக் கொடுக்க, பிஸ்கட் தயாரிக்கும் ஷோபா விரக்தியின் உச்சியில் இருக்கிறாள். சாமியார் ஒருவர், அவள் மீண்டும் காதலைக் கண்டடைவாள் என்றும், ஆனால் அதில் `ஒரு சிக்கல்' இருக்கும் என்பதையும் தெரியப்படுத்துகிறார். மீண்டும் தைரியமாக தன் உள்ளக் கதவுகளைத் திறக்கும் ஷோபாவை அரவணைக்க, அவளிடம் அடைக்கலமாக எத்தகைய ஆண்கள் வருகிறார்கள்? இந்த உலகில் ஆண்கள் அனைவரும் ஒன்றுதானோ? விடை சொல்கிறது இயக்குநர் ராஜுமுருகனின் `லாலாகுண்டா பொம்மைகள்'.
Modern Love Chennai

ராஜு முருகனே 'மாடர்ன் லவ்' கதை ஒன்றைத் தழுவி திரைக்கதை அமைக்க, ஸ்ரீகௌரி பிரியா, வசுந்தரா, வாசுதேவன் முரளி உள்ளிட்டோ முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். துடிப்பான பெண்ணாக, ரவுடிகள், ஊர்க்காரர்கள், அப்பா என யாருக்கும் அஞ்சாத பெண்ணாக ஸ்ரீகௌரி பிரியா நம் மனதில் இடம்பிடிக்கிறார். 'சோஷியலிசமாக' சரக்கடிக்கும் காட்சியிலும், அட்வைஸ் பண்ணும் காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பால் வசீகரிக்கிறார் வசுந்தரா.

வசனங்களில் மேஜிக் செய்திருக்கும் ராஜு முருகன், மற்ற எபிசோடுகளிடமிருந்து தனித்துத் தெரியும்படி இதன் கதைக்களத்தை அமைத்திருக்கிறார். குறிப்பாக, ஷான் ரோல்டனின் இசை இதன் பெரும்பலம். 'ஜிங்கர்ததந்தா', 'ஒருமுறைதான் மழை வருமா?' எனப் பாடல்கள் கதை சொல்லும் கருவிகளாகவும், காட்சிகளின் உணர்வுகளைக் கூட்டும் இசை அருவிகளாகவும் நெஞ்சை நனைக்கின்றன.

இமைகள்:

ஒரு நாளின் பீச் சந்திப்பில் தன் காதலன் நித்தியாவிடம் தன் பார்வை பற்றிய பிரச்னையை விவரிக்கிறாள் தேவி. சில வருடங்களில் பார்வையை இழக்கப்போகும் தேவியைக் காதலுடன் திருமணம் செய்துகொள்கிறான் நித்தியா. குழந்தை, குடும்பம் என்றான பின், அதே காதல், அதே புரிந்துணர்வு, அதே அக்கறை நிலைக்குமா? எல்லா நாளும், எல்லா கணமும் சந்தோஷம் மட்டுமே நிலைத்திடுமா? நித்தியா தன் காதலைப் புதுப்பித்துக் கொண்டானா? பதில்களைத் தருகிறது `இமைகள்'.
Modern Love Chennai

இயக்குநர் பாலாஜி தரணிதரன் 'மாடர்ன் லவ்' கதை ஒன்றைத் தழுவி திரைக்கதை அமைக்க, இயக்குநர் பாலாஜி சக்திவேல் இந்த எபிசோடை இயக்கியிருக்கிறார். நித்தியாவாக அசோக் செல்வன் கனவு காதலனாகவும், சராசரி கணவனாகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். அவருடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து, அதில் சாதித்தும் இருப்பது டி.ஜே.பானுதான். பார்வைக் குறைந்துகொண்டே வருவதை அறிந்து வெளிப்படுத்தும் பதற்றம், காதலர்களாக இருக்கும்போது வெளிப்படும் அந்த முதிர்ச்சி, அழுகையைக் கொண்டு வரும் ஆற்றாமை அனைத்துமே அத்தனை அழகு. நடுரோட்டில் கணவன் மனைவியாகச் சண்டைபோடும்போது இருவருமே நடிப்பு என்னும் தராசில் சமமாக நிற்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை நுண்ணுணர்வுகளுக்கு உயிரூட்டி நம்மையும் கதையோடு ஒன்ற வைக்கிறது. ஜீவா சங்கரின் ஒளிப்பதிவில் பார்வைப் பிரச்னையைப் பிரதிபலிக்கும் காட்சிகள் மாஸ்டர் கிளாஸ். அதிலும் அந்தக் கடைசி ஷாட், அழகான ஹைக்கூ கவிதை!

காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி:

சினிமா பித்துப் பிடித்த மல்லிகாவுக்குத் திகட்டத் திகட்ட `சினிமா காதல்' செய்து திருமணம் செய்யவேண்டும் என்று ஆசை. கல்லூரிக் காதலில் ஏமாற்றம், முதிர்ந்த பருவத்தில் வரும் காதலிலும் ஏமாற்றம் என வாழ்க்கையே வெறுத்து நிற்கும் அவளுக்கு ஏற்றவன் வந்தானா? அவளைப் போலவே ஏமாற்றங்களைச் சந்தித்த ஆண் இல்லாமலா போவான்? கலகலப்பான கதையாக விடைகள் சொல்ல முற்பட்டிருக்கிறது இந்த எபிசோடு.
Modern Love Chennai

ரேஷ்மா கட்டாலா, 'மாடர்ன் லவ்' கதை ஒன்றைத் தழுவி திரைக்கதை அமைக்க, கிருஷ்ணகுமார் ராம்குமார் இதை இயக்கியிருக்கிறார். ரித்து வர்மாவைச் சுற்றி மட்டுமே அனைத்து காட்சிகளும் என்னும்போது அந்தக் கதாபாத்திரத்தோடு நாமும் ஒன்றிப்போகும் அளவுக்கு அதில் யதார்த்தம் இருக்கவேண்டும். ஆனால், மிகை நடிப்பு, அனிமேட்டட் முகபாவனைகள் எனச் சற்றே சோதிக்கிறார் ரிது.

காமெடியாக ஒரு காதல் கதை, கடைசியில் ஒரு குட்டி மெசேஜ் என்ற ஐடியா ஓகே என்றாலும் அதற்கேற்றவாறான பலமான வசனங்களோ, காட்சி அமைப்புகளோ இல்லை. கௌதம் மேனன் படங்களில் வரும் காதல் எபிசோடுகளை நகலெடுத்துக் கோர்த்ததுபோன்ற உணர்வு. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும், நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும் மட்டுமே கவனிக்கவைத்த விஷயங்கள்.

மார்கழி:

பிரியமானவரின் பிரிவைச் சுமந்து, உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் சுற்றும் சைக்கிள் தேவதை ஜாஸ்மினுக்கு இசை வழியே பூக்கிறது முதல் காதல். சோகத்திலிருந்து மீள, இந்தத் தற்காலிக காதல் அவளுக்கு உதவியதா என்பதைச் சொல்கிறது இந்தப் பதின்பருவக் காதல் கதை.
Modern Love Chennai

மீண்டும் இயக்குநர் பாலாஜி தரணிதரன் 'மாடர்ன் லவ்' கதை ஒன்றைத் தழுவித் திரைக்கதை அமைக்க, அக்ஷய் சுந்தர் இதை இயக்கியிருக்கிறார். அதிகம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத நடிப்பை தன் பாத்திரம் அறிந்து கச்சிதமான மீட்டரில் கொடுத்திருக்கிறார் ஜாஸ்மினாக வரும் சஞ்சுலா சாரதி. நிஜமாகவே 'நெஞ்சில் ஒரு மின்னல்'-ஐ தருகிறது இளையராஜாவின் குரலும் இசையும். ஹெட்செட் உதவியுடன் அவரின் இசையை வைத்து ஒலிப்பதிவில் விளையாடிய காட்சிகள், கவிதை!

கண்ணியமான, அதே சமயம் எளிமையான ஒரு காதல் கதையை மார்கழி குளிரில் தேவைப்படும் கதகதப்பைப் போலச் சொல்லியிருக்கிறது இந்த எபிசோடு.

பறவைக் கூட்டில் வாழும் மான்கள்:

விவகாரத்தைச் சாதாரணமாகக் கடந்து செல்ல வேண்டுமா, இல்லை அது நிகழக்கூடாது என்று போராட வேண்டுமா? வாழப் பிடிக்காது போன உறவைச் சுவை இழந்த பப்பிள் கம்மாக மெல்வதில் என்ன பயன் என்று கேட்கிறது இந்த எபிசோடு. இப்படியான முடிவை நிதர்சன வாழ்வில் யாரும் எடுக்கத் தயங்குவார்கள் என்றாலும் இதுவே நிதர்சனம் என்பதைத் துணிச்சலுடன் சொல்கிறது இந்தக் கதை.
Modern Love Chennai

கிஷோர், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி என மூன்று முக்கிய நடிகர்களுமே கதையின் முதிர்ச்சிக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். பிரிவு, விவாகரத்து போன்றவற்றை இவ்வளவு சாதாரணமாக நம் சமுதாயம் கடந்துவிடுமா என்ற கேள்வி மிஞ்சினாலும், அதுவுமே அவசியமான ஒன்றே என்று உரைக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. பிரதீப் குமார்.எஸ் இந்தத் தழுவல் கதைக்கு உயிர்கொடுக்க, இளையராஜா தன் இசையால் உணர்வுப்பூர்வமாகக் காட்சிகளை நிரப்பியிருக்கிறார்.

மெட்ரோ ரயில் பயணங்கள், மின்சாரம் இல்லாத வீட்டில் நடக்கும் இரவு உணவு, சிகரெட் பிடிக்கும் பால்கனி எனப் பல சமயங்களில் ஈர்க்கிறது ஜீவா சங்கரின் ஒளிப்பதிவு. மூன்று கதை மாந்தர்களில் யாரையும் பின்பற்ற முடியவில்லை என்ற சிக்கல் இருந்தாலும், இப்படியும் நடந்துகொள்வார்களா எனக் கேட்க வைத்தாலும், அப்படி நடப்பதே சரியானது என்பதைத் துணிச்சலாகச் சொல்கிறது இந்தக் கதை.

நினைவோ ஒரு பறவை:

நினைவுகள் என்ன செய்யும்? அதுவும் பாதி அழிந்துபோன நினைவுகள்? அதுவும் அழிந்துபோனதாய் நாம் மறைத்து வைத்திருக்கும் நினைவுகள்? காதலர்களான 'சாம்'க்கும் 'கே'வுக்கும் பிரிவு ஏற்படுகிறது. ஆனால் அதற்கடுத்து கே-வுக்கு நடக்கும் ஒரு விபத்து அந்தக் காதல் பிரிவை மறக்கடிக்கச் செய்துவிடுகிறது. இரண்டாவது இன்னிங்ஸ் காதலுடன் இருக்கும் அவனுக்கும் சாமுக்குமான உறவை ஒரு மெட்டா சினிமா பாணியில் திரைக்கதை அமைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.
Modern Love Chennai

சாமாக வமீகா கப்பி தன் ஆத்மார்த்தமான நடிப்பால் நம் மனதில் ஆழமாகப் பதிகிறார். காதலனுக்கு இரண்டாவது முறையாக 'குட் பை' சொல்லும்போது நடுக்கத்துடன் அவர் வெளிப்படுத்தும் நடிப்பில் அத்தனை காதல், அத்தனை துயரம். கே-வாக வரும் பி.பி-யும் சிறப்பானதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். வித்தியாசமான திரைக்கதை அமைப்பால் கவரும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, சிகரெட் பெட்டியில் 'கேன்சர் குச்சி' என்று பிராண்ட் பெயர் போட்டது, டாய்லெட்டுக்கான டிஷ்யூ பேப்பரில் 'ஆ...ஸ்வைப்' என்று பிராண்டின் பெயரைக் காட்டியது என தன் வழக்கமான பாணியில் கதைக்கென ஓர் உலகத்தை உருவாக்கி அதில் இருவரையும் உலாவ விட்டிருக்கிறார்.

"போன வியாழக்கிழமைதான் உலகம் உருவாச்சு" என்பதாகவும் அதற்கு அடுத்து வரும் வசனமும் கதையின் சாராம்சமாக வெளிப்படுவது சுவாரஸ்ய முடிச்சு. 'நினைவோ ஒரு பறவை' என்ற டைட்டிலே இந்தக் கதையின் ஆழத்தைச் சரியாகப் பிரதிபலிப்பது கூடுதல் பலம். இவை எல்லாவற்றையும் தாண்டி இளையராஜாவின் இளமைத் துள்ளும் இசை, இந்த எபிசோடை இன்னும் ஆழமான ஒன்றாக மாற்றுகிறது. பாடல்கள் தாண்டி, இசையாக மட்டுமே ஒலிக்கும் 'காமத்துப் பால்' டிராக்கும் அதற்கான கலவிக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், அதன் பின்னர் வரும் சிறிய பகடியும் சிறப்பான கதை சொல்லல்.

வெறும் உரையாடல்களை வைத்து மட்டுமே ஒரு பேன்-வேர்ல்டு காதல் கதையாக இதை மாற்றியது அட்டகாசம். காதலியின் வீடு, மழைக் காட்சிகள், இரவு எனப் பல விஷயங்களை பேண்டஸி இழையோடு அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் நிரவ் ஷா மற்றும் ஜிவா சங்கர்.

குழப்பமான திரைக்கதை அமைப்பு, சற்றே தலையைச் சுற்றி மூக்கைத்தொகும் கதை என்றாலும் கசங்கிய காகிதத்தில் எழுதப்பட்ட காதல் கதை மட்டும் நன்றாக இல்லாமல் போய்விடுமா என்ன?

Modern Love Chennai

பல்வேறு இயக்குநர்கள் எழுத்து வடிவிலும், இயக்கத்திலும் சிறப்பான பங்காற்றியிருக்கும் இந்த ஆந்தாலஜி, இதுவரை வெளிவந்த தமிழ் ஆந்தாலஜி படைப்புகளிலிருந்து தனித்து நிற்கக் காரணம், கதைகள் எழுதப்பட்ட, அணுகப்பட்ட முதிர்ச்சிதான். குறிப்பாக அனைத்து கதைகளுமே பெண்களை மையப்படுத்தி பெண்களின் பார்வையிலேயே நகர்கின்றன. அதேபோல, பங்கேற்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமிருந்தும் அற்புதமான படைப்புகளை வாங்கி அதை அழகாகக் கதையில் கோர்த்தது இதை மேலும் அழகாக்கி இருக்கிறது. மூன்றாவது கதையைத் தவிர மற்ற அனைத்துமே பாராட்டும்படி இருப்பது இந்தப் படைப்பின் மற்றுமொரு சிறப்பு.

இந்த ஆறு எபிசோடுகளில் உங்களின் ஃபேவரைட் எது, யார் நன்றாக நடித்திருந்தார்கள் என்பதை கமென்ட்டில் சொல்லவும்.


source https://cinema.vikatan.com/kollywood/modern-love-chennai-this-love-anthology-has-its-heart-at-the-right-place-with-some-wonderful-performances

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக