Ad

வியாழன், 25 மே, 2023

விழுப்புரம்: "சமாதானமாகிவிட்டார்கள்; கோயில் உள்ளே செல்வார்கள்!" - மேல்பாதி விவகாரத்தில் ஆட்சியர்

விழுப்புரம் அருகேயுள்ள கிராமம் மேல்பாதி. அங்கு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள திரௌபதி அம்மன் கோயிலில், பட்டியல் சமூக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு, மாற்றுச் சமூகத்தினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி இரவு, அந்தக் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றிருக்கிறது. அப்போது, சாமி தரிசனம் செய்வதற்காக  கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞர் கதிரவன், அங்கிருந்த மாற்றுச் சமூகத்தினரால் திட்டி, தாக்கப்பட்டிருக்கிறார். உடன், அந்த இளைஞரை மீட்கச் சென்ற அவருடைய பெற்றோரும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே, அன்று இரவே சாலைமறியலில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட தரப்பினர், போலீஸாரிடம் புகாரும் அளித்தனர். 

எதிர்ப்பு தெரிவித்த மாற்றுச் சமூகத்தினர் - மேல்பாதி

இரு தரப்பிலும் போலீஸில் வழக்கு பதிவுசெய்த நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஊர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து, விழுப்புரம் ஆர்.டி.ஓ, எஸ்.பி தலைமையில் இருதரப்பு சமாதான பேச்சுவார்த்தை மூன்று முறை நடைபெற்றும், சமரச தீர்வு எட்டப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி மக்கள் பிரதிநிகள் முன்னிலையில் இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி. அப்போது, ஊர் மக்களிடம் கலந்தாலோசித்து சுமுக முடிவுக்கு வருவதற்காக 3 நாள்கள் காலஅவகாசம் சிலர் கேட்ட நிலையில், அதற்கு அனுமதி அளித்து அனுப்பிவைத்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று (24.05.2023) மாலை மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த இருதரப்பினரிடமும் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார் மாவட்ட ஆட்சியர் பழனி. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மேல்பாதி கிராமத்தில், இரு சமூகங்கள் இடையே கோயில் உள்ளே செல்வதற்காக... பொதுவான கோயிலா, தனியார் கோயிலா என்ற பிரச்னை இருந்து வந்தது. எனவே, இரு தரப்பிலும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இந்த நிலையில், இன்றைய தினம் (24.05.2023) இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது, இரு தரப்பும் சமாதானமாகப் போவதாக ஒப்புக்கொண்டார்கள்.

இறுதி சமரச பேச்சுவார்த்தை

இரு தரப்பும், நாங்களே கோயில் உள்ளே செல்கிறோம் என உடன்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அதற்கான தேதியை தங்களுக்குள்ளாக பேசி முடிவு செய்துவிட்டுச் சொல்வதாக தெரிவித்திருக்கின்றனர். அதன்படி, தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துவிடலாம். இது இந்து சமய அறநிலையத்துறையில் வரும் கோயிலா, இல்லை தனியார் கோயிலா என்பது தொடர்பாக நீதிமன்றம் ஒரு வழிமுறை கொடுத்திருக்கிறது. அதைப் பற்றி பின்னர் பரிசீலனை செய்யப்படும். தற்போது கோயிலுக்குள் சென்று வழிபடுவது தொடர்பாக மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கான முயற்சி எடுத்து வந்தோம். இரு தரப்பும் சமாதானம் ஆகிவிட்டனர். அவர்கள் தேதி முடிவுசெய்து சொன்னதும் கோயிலுக்குள் ஒன்றாகச் செல்வார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/crime/caste/villupuram-district-collector-palani-gave-an-pressmeet-regarding-the-melpathi-village-temple-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக