Ad

வியாழன், 18 மே, 2023

போதும் என்கிற மனம் கொண்டரா நீங்கள்? இதைக் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்...! #Personality 2.0

சமீபத்தில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஒரு வித்தியாசமான நிகழ்வு. கர்நாடகச் சட்டமன்றத்தில் மொத்தம் 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. 112 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றாலே போதும், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கலாம். காங்கிரஸ் அதைவிட 20-க்கும் மேற்பட்ட இடங்கள் கூடுதலாக வென்றுவிட்டது.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

எல்லாத் தொகுதி முடிவுகளும் வெளியான அன்று மாலை, கர்நாடகத்தில் திடீர்ப் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம், பெங்களூரில் உள்ள ஜெயநகர் என்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடைந்திருக்கவில்லை. ஏனெனில், அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் பா.ஜ.க வேட்பாளரும் கிட்டத்தட்ட ஒரே அளவு வாக்குகளைப் பெற்றிருந்தார்கள். அதனால், இருவரில் யார் வென்றார்கள் என்பதை அறிவிப்பதில் குழப்பம் உண்டானது.

இதனால், காங்கிரஸ், பாஜக கட்சிகளின் முதன்மைத் தலைவர்கள் பலர் ஜெயநகருக்கு விரைந்தார்கள், பிரச்னை சரியாகும்வரை தாங்கள் அங்குதான் இருக்கப்போவதாகவும், தங்களுடைய வேட்பாளருக்குத் துணை நிற்கப்போவதாகவும் அறிவித்தார்கள்.

இதையடுத்து, எல்லாத் தொலைக்காட்சிச் சானல்கள், இணையத்தளங்களும் ஜெயநகரில் என்ன நடக்கிறது என்று விரிவாக எழுதவும் பேசவும் தொடங்கினார்கள், பொதுமக்களும் இந்த உரையாடலில் இணைந்துகொண்டார்கள்.

அந்த நேரத்தில், ட்விட்டரில் ஒருவர் கேலியாக இப்படி எழுதியிருந்தார்: இது ஒரு தேவையில்லாத நாடகம். காங்கிரஸுக்குத் தேவைக்குமேல் இடங்கள் கிடைத்துவிட்டன; ஜெயநகர் கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன? அவர்கள் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது. இன்னொரு பக்கம், பா.ஜ.க இந்தத் தேர்தலில் தோற்றுவிட்டது. ஜெயநகரை வெல்வதன்மூலம் அவர்கள் என்ன சாதிக்கப்போகிறார்கள்?

மேலோட்டமாகப் பார்க்கும்போது, இந்தக் கருத்து சரி என்று தோன்றலாம். ஆனால், கொஞ்சம் ஆழமாக யோசித்தால், தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலுள்ள முதன்மையான ஒரு வேறுபாடு நமக்குப் புரியும்.

கர்நாடகா தேர்தல் முடிவுகள்

அன்று இரவு, காங்கிரஸுக்குப் போதுமான இடங்கள் கிடைத்திருக்கலாம். பா.ஜ.க ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்திருக்கலாம். என்றாலும், அந்த இரு கட்சிகளின் தலைவர்கள் ஜெயநகரில் போட்டியிட்ட தங்கள் கட்சிக்காரரைக் கைவிடக்கூடாது. இதுபோன்ற கடினமான நேரத்தில் அவர்களுக்குத் துணையாக நிற்பதுதான் தலைவருக்கான முதல் அடையாளம். இதன் மூலம் மற்ற தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் ஊக்கம் பெறுவார்கள்.

அடுத்து, இன்றைக்கு இந்த ஓர் இடம் பெரிய விஷயம் இல்லை என்று தோன்றலாம். ஆனால், மாறிவரும் அரசியலில் நாளைக்கு என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? ஒருவேளை, இந்த ஓர் இடம் பின்னாட்களில் அவர்களுக்குப் பெரிய அளவில் உதவக்கூடும். அந்த வாய்ப்பை ஏன் இழக்கவேண்டும்?

காங்கிரஸ், பாஜகமட்டுமில்லை, அந்த இடத்தில் எந்தக் கட்சி இருந்திருந்தாலும், அந்த இன்னோர் இடமும் எங்களுக்கு வேண்டும் என்றுதான் சொல்லியிருப்பார்கள். அதாவது, ‘வென்றவரை போதும்’ என்று மகிழ்ச்சியோ சோர்வோ அடைந்திருக்க மாட்டார்கள்.

‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பார்கள். ஆனால், அது தனிப்பட்ட மனநிறைவுக்கான பொன்மொழிதான். அரசியல், தொழில், பணி, நிறுவனத்தின் முன்னேற்றம், நம்முடைய துறையில் வளர்ச்சி ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கும்போது, போதும் என்ற மனம் இல்லாதவர்கள்தான் ஏற்கெனவே இருக்கும் எல்லைகளின் விளிம்புகளைச் சற்று விரிவாக்குகிறார்கள், அதன்மூலம் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிகிறார்கள், பெரிய அளவில் வெல்கிறார்கள்.

இலக்கு

எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனம் 2023-ம் ஆண்டில் 50 கோடி ரூபாய்க்குத் தன்னுடைய பொருட்களை விற்கவேண்டும் என்று இலக்கு அமைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த இலக்கு மே மாதத்திலேயே எட்டப்பட்டுவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? மீதி ஏழு மாதமும் நிறுவனத்துக்கு விடுமுறை அறிவித்துவிடுவார்களா?

மாட்டார்கள். ஐந்து மாதத்தில் 50 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது என்றால், 12 மாதத்தில் 120 கோடி ரூபாய்க்கு விற்கவேண்டும் என்று இலக்கை மாற்றி அமைத்து முன்னேறுவார்கள். அதன்பிறகு, அந்த 120-ல் 100 கிடைத்தாலும் நல்லதுதானே?

கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் ஒருவர் சதம் அடிப்பது பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. திடீரென்று ஒருநாள் சச்சின் டெண்டுல்கர் இரட்டைச் சதம் (200 ரன்கள்) அடித்தார். ‘அட’ என்று எல்லாரும் வியந்து பார்த்தார்கள், ‘எப்பேர்ப்பட்ட சாதனை’ என்று கைதட்டினார்கள்.

சச்சின்

அதன்பிறகு என்ன நடந்தது? பல வீரர்களும் இரட்டைச் சதம் அடித்துவிட்டார்கள். அந்தப் பட்டியலில் டெண்டுல்கர்தான் கீழே இருக்கிறார், மற்றவர்கள் அவரைத் தாண்டி எங்கோ சென்றுவிட்டார்கள்.

உண்மையில், டெண்டுல்கருக்குப் பல ஆண்டுகளுக்குமுன் பெலிண்டா கிளார்க் என்ற பெண் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்துள்ளார். 1997-ல் அவர் முதன்முதலாக 200 ரன்கள் என்ற இலக்கைக் கடந்தபோது அவருடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று யோசியுங்கள். சதம் அடித்தபிறகு, ‘இதுவே பெரிய விஷயம், இதற்குமேல் மெனக்கெட வேண்டாம்’ என்று அவர் நினைத்திருந்தால், இரட்டைச் சதம் என்கிற சாதனை நடந்திருக்குமா? இன்னும் பலர் அவரைப் பின்தொடர்ந்து வந்திருப்பார்களா?

1970-களின் பிற்பகுதியில் இளையராஜா தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானபோது, திரைப்படப் பாடல்களின் முன்னிசை, இடையிசை மிகவும் எளிமையாகத்தான் இருந்தது. ராஜாதான் அவற்றைச் செழுமையாக்கித் தன்னுடைய முத்திரையுடன் கொடுக்கத் தொடங்கினார், பல்வேறு அடுக்குகள், ஏராளமான இசைக்கருவிகள், சேர்ந்திசைக் குரல்களின் துணையோடு அவர் வழங்கிய கனமான முன்னிசைகளாலும் இடையிசைகளாலும் மூன்று நிமிடப் பாடல்கள் நான்கு, நான்கரை, ஐந்து நிமிடங்கள் என்று நீண்டன, ரசிகர்கள் அவற்றை விரும்பிக் கொண்டாடினார்கள்.

விடுதலை | இளையராஜா

முக்கியமான விஷயம், இதையெல்லாம் செய்யவேண்டும் என்று யாரும் இளையராஜாவிடம் கேட்டிருக்க மாட்டார்கள். அவர் அன்றைய பாணியில் தொடர்ந்து பாடல்களை வழங்கியிருந்தாலும் வெற்றி பெற்றிருப்பார். அது போதும் என்று இருந்துவிடாமல் இன்னும் என்ன செய்யலாம் என்று சிந்தித்ததால்தான் தமிழ்த் திரையிசையை மாற்றியமைத்தவர் என்று அவர் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

Comfort Zone எனப்படுகிற நமக்கு வசதியான, எல்லாருக்கும் வசதியான இடத்தில் எந்த வளர்ச்சியும் நடக்காது. கிடைப்பதைக் கொண்டு மனநிறைவு அடைந்துவிடாமல், ‘இன்னும் கொஞ்சம் வேண்டும்’ என்று தொடர்ந்து முன்னேறுகிற மனநிலையும், அதற்குத் தோள் கொடுக்கும் நேர்மையான உழைப்பும்தான் நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும், அதுதான் நம் முன்னேற்றத்தையும் சுவையாக்கும்.

(அடுத்த வெள்ளிக்கிழமை வருவேன்)



source https://www.vikatan.com/personal-finance/money/do-you-think-enough-is-enough-must-know-this-personality-20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக