Ad

வெள்ளி, 19 மே, 2023

"வீட்டுக்கு வீடு குழாய் மூலம் மது விற்பனை செய்யும் நிலையை திமுக அரசு உருவாக்கும்!"- ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு  நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார்.

ஆர்.பி.உதயகுமார்

நிகழ்ச்சியில் பேசியவர், "இந்திய அரசியலில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் பெற்று கொடுத்தார். 

கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தபோது, அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு தி.மு.க அனுப்பவில்லை.

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்த பெருமை அம்மா அரசுக்குத்தான் உண்டு. ஜல்லிக்கட்டுமீதான தடையை நீக்க ஏகமனதாக சட்ட மசோதாவை நிறைவேற்றி வாக்களிக்கும் உரிமையை உறுப்பினர்களுக்கு எடப்பாடியார் வழங்கினார்.

முதன் முதலாக பச்சை தமிழராக ஒரு முதலமைச்சர் வாடிவாசலுக்கு வந்து கொடி அசைத்து, ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த வரலாறு எடப்பாடியாருக்கு உண்டு. ஆனால், இன்றைக்கு அந்தக் கல்வெட்டை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள்.

ஆர்.பி.உதயகுமார்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசார அடையாளமாக இருக்கிறது என்று கூறி, தடை போட மறுத்துவிட்டனர். தமிழக அரசு சார்பில் சிறப்பான வாதங்களை வைத்ததாக ஓர் இடத்தில்கூட நீதிபதிகள் சொல்லவில்லை. ஏற்கெனவே அம்மா அரசு கொண்டுவந்த மசோதாவின் வாதங்களைத்தான் கூறியிருக்கிறார்கள்.

அலங்காநல்லூர் அருகே கட்டப்பட்ட வரும் ஜல்லிக்கட்டு மைதானத்தைக் காரணம் காட்டி, வாடிவாசலை மூட நினைத்தால் எடப்பாடியாரின் அனுமதியுடன் பெரும் போராட்டத்தை நடத்துவோம்.

அ.தி.மு.க அரசு காப்பற்றி வந்த காவிரி, முல்லைப்பெரியாறு, மேக்கேதாட்டூ உள்ளிட்ட பல்வேறு ஜீவாதார உரிமைகளில் இன்றைய முதலமைச்சர் மௌனமாக இருக்கிறார்.

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும். அடுத்து, வீட்டுக்கு வீடு குழாய் மூலம் டாஸ்மாக் மது விற்பனை செய்யும் நிலை உருவாகும். `மக்களைத் தேடி மது' என்ற நிலையை தி.மு.க அரசு உருவாக்கிவிடும்.

இரண்டு வருட தி.மு.க ஆட்சியில் சாராயம், மதுபான விற்பனை அதிகரித்திருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு நிதி வழங்கியவர்கள், மதுரை சித்திரை திருவிழாவில் சாமி கும்பிடச் சென்ற பலியான நான்கு பேருக்கு நிவாரணம் வழங்கவில்லை.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்காமல், டாஸ்மாக் கடைகளை அதிகரித்திருக்கின்றனர். கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் உயிரை இந்த அரசால் திருப்பித் தர முடியுமா? 

வாடிப்பட்டி நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார்

இடி அமின், முசோலினியின் மறு உருவமாக இருக்கிற ஸ்டாலின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். நடந்ததற்கெல்லாம் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய 30,000 கோடி ரூபாய் ஊழலை, தி.மு.க-வின் நிதியமைச்சரே தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இதற்கு முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. ஊழல் குறித்துப் பேசிய அமைச்சரை தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றியிருக்கின்றனர். இவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால், அடுத்த ஆடியோ ரிலீஸ் ஆகும் என்ற பயத்தில் இருக்கின்றனர். அமைச்சர் தியாகராஜன் வாய் திறந்தால் தி.மு.க ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும்.

இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கிற பணியையும், ஆகஸ்ட் மாதம் மதுரையிலே உலகமே திரும்பிப் பார்க்கிற வகையில் பொன்விழா வெற்றி மாநாட்டை நடத்துகிற வரலாற்று பெருமையும் எடப்பாடியாருக்குக் கிடைத்திருக்கிறது. 

கள்ளச்சாராயம் இந்தியாவிலே இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் இருக்கின்ற அவலம்  ஏற்பட்டிருக்கிறது. இந்த அவலத்தை அகற்றிட எடப்பாடியார் போராடி வருகிறார்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rb-udhayakumar-slams-dmk-govt-over-illicit-liquor-deaths

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக