Ad

வெள்ளி, 19 மே, 2023

Doctor Vikatan: பயணத்தின்போது படுத்தும் வாந்தி... காரணமும், தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: பஸ் அல்லது கார், வேனில் பயணம் செய்யும்போது எனக்கு வாந்தி வரும். குடும்பத்துடன் பயணம் செய்யும்போது இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதனாலேயே நான் பெரும்பாலும் பயணங்களைத் தவிர்த்துவிடுகிறேன். இதற்கு என்ன காரணம்.... சரி செய்ய வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய்

குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர்

டிராவல் சிக்னெஸ் அல்லது மோஷன் சிக்னெஸ் எனப்படும் இந்தப் பிரச்னை, நிறைய பேருக்கு இருக்கிறது. குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து பயணம் செய்யும்போது, ஒருவர் மட்டும் இப்படி வாந்தி எடுத்துக்கொண்டிருந்தால் மொத்த டூர் அனுபவமும் பாதிக்கப்படும்.

சிலருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும்? பயணம் செய்யும்போது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகர்வதாக கண்கள் சொல்கின்றன. 'நீ எங்கும் நகரவில்லை...' என்பதை உணர்த்துகின்றன கை, கால்கள். காதுக்குள் சுரக்கும் எண்டோலிஃம்ப் ( Endolymph ) எனப்படும் திரவம் ஆடுவதால், அது மூளைக்குத் தகவல் அனுப்பி, பயணம் செய்வதை உணர்த்துகிறது. ஆனால் மூளையோ 'உட்கார்' என்று சொல்கிறது. இந்தக் குழப்ப உணர்வு, சிலருக்கு வாந்தியாக வெளிப்படுகிறது.

வெறும் வாந்தி மட்டுமன்றி, வியர்த்துக்கொட்டுவது, என்ன செய்வதென தெரியாதது என சிலருக்கு அந்த அனுபவமே மோசமாக மாறும். இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? கார், பஸ், விமானம் என எதில் பயணம் செய்தாலும் ஜன்னல் அருகில் வெளியே பார்த்தபடி உட்கார வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, டீ, கோலா, ஏரியேட்டடு பானங்கள் குடிக்கக்கூடாது. சிகரெட் பிடிக்கக்கூடாது. பிடிப்பவர்களின் அருகிலும் உட்காரக்கூடாது.

கார், வேனில் பயணம் செய்பவர் என்றால் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி, வெளியே இறங்கி, ஆழமாக மூச்சை இழுத்து சுவாசிக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. இஞ்சி மிட்டாயை வாயில் சுவைத்தபடி பயணம் செய்யலாம். பயணத்தின் போதான இந்தப் பிரச்னைக்கு மாத்திரைகளும் உதவும்.

வாந்தி

மருத்துவரின் ஆலோசனையோடு அவர் பரிந்துரைக்கும் மாத்திரையை பயணத்துக்கு குறிப்பிட்ட மணி நேரத்துக்கு முன் எடுத்துக்கொள்ளலாம். இந்த மாத்திரைகள் தூக்கத்தை வரவழைக்கலாம் என்பதால் கவனமாக இருக்கவும். சரியான டோசேஜ் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அளவு கூடினால் பக்க விளைவுகள் வரலாம்.

கடைகளில் மோஷன் சிக்னெஸ் பேண்டு (Motion Sickness Band) என்றே ஒன்று கிடைக்கும். அதை வாங்கி பயணத்தின் போது பயன்படுத்தினாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம். கர்ப்பிணிகளுக்குக்கூட இது உதவியாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-vomiting-while-traveling-what-are-the-solutions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக