Ad

செவ்வாய், 30 மே, 2023

Dhoni: "எங்க ஊரே தோனி ஃபேன்!"- 12 அடி நீள அலகு குத்தி தோனிக்குக் காவடி எடுத்த மன்னார்குடி இளைஞர்!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது. முன்னதாக, சென்னை அணி இறுதிப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேர்த்திக் கடன் வேண்டிக்கொண்டு அலகு குத்தி காவடி எடுத்த ருசிகர சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
தோனி, ஜடேஜா

ஐபிஎல் தொடரில் 16வது சீசனுக்கான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டி மழையால் தடைப்பட, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வுபெறுவார் எனத் தகவல் பரவிய நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என தோனியின் ரசிகர்கள் பெரிதும் விரும்பினர்.

இதனால் இறுதிப்போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியது. பலரும் கேப்டன் தோனி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் பலவிதமான செயல்களில் ஈடுபட்டனர். இதையடுத்து ரிசர்வே டேயான நேற்று நடைபெற்ற போட்டியில் பரபரப்பான சேஸிங் மூலம் தோனி தலைமையிலான மஞ்சள் படை குஜராத் டைடன்ஸை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் ரசிகர்கள் விரும்பியது நிறைவேறியிருக்கிறது.

தோனி படத்துடன் அல்ங்கரிக்கப்பட்ட காவடி

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள தோனி ரசிகர்கள் இதனைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். "என் மீது பேரன்பைச் செலுத்தும் ரசிகர்களுக்கு நான் எதாவது செய்ய வேண்டும். இன்னொரு சீசன் ஆட முயற்சி செய்யவேண்டும்" என தோனி பதிலுக்கு உருகியிருக்கிறார்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த இளந்தமிழன் என்ற இளைஞர் தோனி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் வேண்டி விரதம் இருந்து 12 அடி நீள அலகு குத்தி காவடி எடுத்திருப்பது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

இது குறித்து இளந்தமிழனிடம் பேசினோம். "மன்னார்குடி அருகே உள்ள முதல்சேத்தி என்னோட சொந்த ஊர். பி.பி.ஏ படித்திருக்கும் நான் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறேன். 2011ல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றதிலிருந்தே எனக்கு தோனி மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் அவருடைய மேனரிஸம் என்னைக் கவர்ந்தது. தல தோனிக்காக ஒரு போட்டியைக் கூட மிஸ் பண்ணாம டி.வியில் பார்ப்பேன்.

ஜடேஜா, தோனி, ராயுடு | MI vs CSK

தோனி பெயரில் எங்க பகுதியில் போட்டிகள் நடத்துவோம். நான் மட்டுமல்ல எங்க ஊரே தோனி ஃபேன்தான். தற்போதைய ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு பெற இருப்பதாகப் பேசப்பட்டது எனக்குள் வருத்தத்தை உண்டாக்கியது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அவர் ஓய்வு பெற்றுச் செல்லும் போதும் கையில் வெற்றிக் கோப்பை இருக்க வேண்டும் என விரும்பினேன். தோனி திறமை மீது அபாரமான நம்பிக்கை இருந்தாலும் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.

எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அலகு குத்தி காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டேன். இதற்காகக் காப்புக் கட்டிக்கொண்டு ஒரு வாரம் வரை விரதம் இருந்தேன். இறுதிப்போட்டி நாளான ஞாயிறன்று காவடியின் பின் பகுதியில் மெகா சைஸ் தோனி படத்தை வைத்து அலங்கரித்தேன். 'உன்னைச் சாய்க்கப் பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம்தான்' என்ற பாடல் வரி அடங்கிய பிளக்ஸை கையில் பிடித்துக்கொண்டேன்.

மன்னார்குடியில் தோனி படத்துடன் காவடி எடுத்த இளந்தமிழன்

தல தோனியை வணங்கி, வாயில் 12 அடி நீள அலகு குத்தி காவடி எடுத்து கோயிலுக்குச் சென்றேன். என்னுடன் பென்சோபின், ரட்சகன் என்ற இருவரும் அலகு குத்தாமல் காவடி மட்டும் எடுத்தனர். 'இதுக்கெல்லாம் அலகு குத்தி காவடி எடுப்பியா' எனச் சிலர் கமென்ட் செய்ய, 'என் கடவுள் தோனிக்கு இந்த பக்தனின் சிறிய காணிக்கை' என்று அவர்களை வாயடைத்தேன். எல்லாம் முடிந்து டி.வி முன் உட்கார்ந்தால் மழையில் ஆட்டம் தடைப்பட ஏமாற்றமாகி விட்டது.

இதனையடுத்து திங்கள் அன்று நடந்த ஆட்டத்தை எங்கள் ஊர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், மாரியம்மன் கோயிலில் அமர்ந்துதான் பார்த்தோம். சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கின் போதும் மழை வந்தது. என்ன தடை வந்தாலும் 'கப்பு முக்கியம் தோனி' என மனசுக்குள்ள சொல்லியபடி வேண்டிக்கொண்டே இருந்தோம்.

இளந்தமிழன்

தோனி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டான போதும் மனம் தளரவில்லை. கடைசி இரண்டு பாலின் போதும் 'மாரியம்மா ஜெயிக்க வச்சிடு' என கோரஸாகக் கத்தினோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. வேண்டுதல் பலித்தது. ஜெயிச்சதுமே விண்ணைப் பிளக்க 'தோனி, தோனி...' என கோரஸாகக் கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்" என்றார்.



source https://www.vikatan.com/lifestyle/culture/this-hardcore-fan-from-mannarkudi-performed-rituals-for-his-idol-dhoni

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக