Ad

சனி, 15 அக்டோபர், 2022

ஃபிரிட்ஜில் ரத்தக்கறை, வீட்டு வளாகத்தில் எலும்புத் துண்டு-நரபலி கொடுத்த வீட்டில் சிக்கிய ஆதாரங்கள்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே நடுங்கச் செய்துள்ளது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட முகமது ஷாஃபி, பகவல் சிங், அவர் மனைவி லைலா ஆகியோரை போலீஸார் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே முகமது ஷாஃபி-யை அழைத்துச் சென்று கொச்சியில் உள்ள அவரது வீடு, ஹோட்டல் ஆகியவற்றில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கொலைசெய்யப்பட்ட பத்மா-வின் 39 கிராம் நகைகளை அடகு வைத்ததற்கான ரசீது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் நரபலி நடந்த பகவல் சிங்கின் வீட்டில் மோப்பநாய் உதவியுடன் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. பகவல் சிங் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் வேறு உடல்கள் புதைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக மோப்பநாய் மூலம் அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான பகுதிகளில் தோண்டி பார்க்கப்பட்டது.

நரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் மோப்பநாய் உதவியுடன் விசாரணை

அதில் பகவல் சிங் வீட்டில் சில இடங்களிலில் ரத்தகறைகள் கண்டுபிடிக்கப்படுள்ளன. வீட்டில் உள்ள பிரிட்ஜிக்கு உள்ளும் ரத்தக்கரை இருப்பது கண்டறியப்பட்டது. அவை பழைய ரத்தக்கறை மற்றும் புதிய ரத்தகறைகள் எனத் தெரியவந்துள்ளது. ரத்தக்கறைகள் நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லி மற்றும் பத்மா ஆகியோருடையதாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும்... இருப்பினும் அதை ஆய்வு மூலம் முடிவுசெய்யவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். நரபலி கொடுத்தபின் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்களை அடக்கம் செய்வதற்கு குழி தோண்ட ஆள் கிடைக்காமல் காலதாமதம் ஆனதால் உடலை பிரிட்ஜில் வைத்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

பத்மாவின் உடலை புதைக்க காலதாமதம் ஆனதற்கான சாட்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன. கொலை நடந்த நாளுக்கு பிறகு தொழிலாளி ஒருவரை அழைத்து வீட்டு வளாகத்தில் குப்பைகளை கொட்ட வேண்டும் என பகவல் சிங் ஒரு குழி எடுக்கச் சொல்லியதாக தொழிலாளி ஒருவர் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார். எனவே அந்த குழி வெட்டப்படுவது வரை உடல் பாகங்கள் அழுகிப்போகாமல் இருக்க பிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும்... அதன் பின்னர் உடல் துண்டுகளை அவர்கள் புதைத்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. பகவல் சிங் வீட்டின் அருலில் உள்ள ஆயுர்வேத மசாஜ் சென்டரிலிருந்து, நரபலிக்கு பயன்படுத்திய கத்தி, உடலை கூறுபோட பயன்படுத்திய வெட்டரிவாள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

நரபலி கொடுத்த உடல் பாகங்கள்

பகவல் சிங் வீட்டு வளாகத்தில் எலும்புத்துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லி அல்லது பத்மா-வின் உடல் பாகத்தில் உள்ளதா எனவும்... இல்லையென்றால் வேறு யாருடைய உடல் பாகமாக இருக்குமா என கண்டறியவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நரபலி கொடுத்து பூஜை செய்யப்பட்டதாக வீட்டின் ஓரிடத்தையும், அங்கு பூஜைக்கு பயன்படுத்திய சில உபகரணங்களையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். பகவல் சிங் வீட்டில் இரண்டு இடங்களில் முகமது ஷாஃபியின் கைரேகை பதிந்திருப்பதை ஃபாரன்சிக் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் கொலை நடந்த சமயத்தில் ஷாஃபி அங்கு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/crime/kerala-human-sacrifice-case-police-tightening-investigation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக