Ad

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

பாஜக வேட்பாளரை திரும்ப பெற கோரிக்கை... மும்பை இடைத்தேர்தலில் உத்தவ் தரப்பு போட்டியின்றி தேர்வா?!

மும்பை அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக மறைந்த எம்.எல்.ஏ.ரமேஷ் மனைவி ருதுஜா லட்கா போட்டியிடுகிறார். பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் முர்ஜி பட்டேல் போட்டியிடுகிறார். ஆரம்பத்தில் ருதுஜாவை தங்கள் அணி சார்பாக போட்டியிட வைக்க பாஜகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் முயற்சி மேற்கொண்டதாக சொல்லப்பட்டது. இதற்காக ருதுஜாவின் மாநகராட்சி ஊழியர் வேலைக்கான ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளாமல் இழுத்தடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே ருதுஜாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. தற்போது ருதுஜாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடித்ததில், ``ருதுஜா போட்டியிடும் அந்தேரி கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடக்கூடாது. அதுவே மறைந்த மக்கள் பிரதிநிதிக்கு அஞ்சலி செலுத்துவதாக இருக்கும். அதோடு வேட்பாளரை நிறுத்தாமல் இருப்பதுதான் நமது மகாராஷ்டிரா கலாசாரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். ரமேஷ் லட்கே ஒரு சிறந்த தொண்டர். ரமேஷ்(மறைந்த எம்.எல்.ஏ) தனது அரசியல் பயணத்தை கட்சி கிளை தலைவர் பதவியில் இருந்து ஆரம்பித்தார். அவரது அரசியல் பயணத்தை நான் நேரில் பார்த்தவன்.

ராஜ் தாக்கரே

அவரின் மனைவி எம்.எல்.ஏ.வாக மாறினால் ரமேஷ் ஆத்மா சாந்தியடையும்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இக்கோரிக்கை தொடர்பாக ராஜ் தாக்கரே முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். ராஜ் தாக்கரே இக்கோரிக்கையை விடுத்த சில மணி நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், ருதுஜா இத்தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சரத்பவார் விடுத்துள்ள கோரிக்கையில், ``மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், மும்பை மாநகராட்சி மற்றும் சட்டமன்றத்தில் ஆற்றிய சேவையை கவனத்தில் கொள்ளவேண்டும். அதோடு எம்.எல்.ஏ.பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது. எனவே ருதுஜாவை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது மகாராஷ்டிரா மட்டுமல்லாது நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும். பாஜக தலைவர் கோபிநாத் முண்டே இறந்த போது அவரின் தொகுதியில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை” என்பதையும் சரத்பவார் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரத் பவார்

அந்தேரி கிழக்கு தொகுதியில் 3-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெற இன்று கடைசி நாளாகும். இது குறித்து பாஜக வேட்பாளர் முர்ஜி பட்டேல் கூறுகையில், `கட்சி தலைமை கேட்டுக்கொண்டால் போட்டியில் இருந்து விலக தயாராக இருப்பதாக’ தெரிவித்துள்ளார். ராஜ் தாக்கரேயிடமிருந்து கடிதம் வந்திருப்பதை தேவேந்திர பட்நவிஸ் உறுதிபடுத்தி இருக்கிறார். ``இக்கோரிக்கை குறித்து கட்சி தலைவர்களுடனும், முதல்வர் ஷிண்டேயுடனும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ராஜ் தாக்கரேயின் கோரிக்கை நல்லெண்ணத்தில்தான் இருக்கிறது. ஆனால் இதில் நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது” என்று குறிப்பிட்டார். உத்தவ் தாக்கரேயும் இதற்காக சரத்பவாரை பாராட்டி இருக்கிறார்.

இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே புதிய சின்னம் மூலம் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அது மக்கள் மனதில் பதிந்துவிடும். அதனை தடுக்கவேண்டுமானால் ருதுஜா தேர்தலில் போட்டியிடாமல் வெற்றி பெறவேண்டும். அதனை கருத்தில் கொண்டே ராஜ் தாக்கரே மூலம் கோரிக்கை விடுக்க வைத்து, வேட்பாளரை திரும்ப பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு நடந்த எந்த ஒரு இடைத்தேர்தலுக்கும் ராஜ்தாக்கரே இது போன்ற கோரிக்கையை முன் வைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/will-uddhav-thackerays-party-candidate-contesting-the-mumbai-by-election-be-elected-unopposed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக