Ad

திங்கள், 31 அக்டோபர், 2022

செண்பகவல்லித் தாயாரும் ஜெகந்நாதப் பெருமாளும் அருளும் நந்திபுர விண்ணகரக் கோயிலில் அஷ்டமித் திருவிழா!

பொன்னியின் செல்வன் புத்தகத்தின் முதல் பாகத்தின் நாற்பது மூன்றாவது அத்தியாயத்தில் பழையாறை நகரத்தின் தோற்றத்தை விவரிப்பார் கல்கி. குந்தவை தேவியைக் காண வரும் வந்தியத்தேவன் பழையாறை நகரத்தை அரிசிலாற்று தென்கரையில் நின்று ரசிப்பதாகக் கதை அமைந்திருக்கும். 

சேக்கிழார் பெருமான் பாடலில், 

"தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்துபாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை” எனக் குறிப்பிட்டு அந்த நூலில் கல்கி அழகாய் வர்ணித்திருப்பார். அதில் வந்தியத்தேவன் குந்தவை பிராட்டியைச் சந்திக்க வந்த நாளன்று கிருஷ்ண ஜயந்தி. திருவிழாக் கோலமாக பழையாறையை காட்சிப்படுத்தியிருப்பார் கல்கி. பழையாறையில் இருக்கும் நந்திபுர விண்ணகர கோயிலைச் சுற்றியே அனைத்து விழாக்களும் நடைபெறும். அந்தக் கோயிலின் வாசலில் நின்றுதான் ஆழ்வார்க்கடியான், "கண்டேன் கண்டேன் கண்டேன் கண்ணுக்கினியானை கண்டேன்" என்று பாடி சலசலப்பை ஏற்படுத்துவார். அதைக் கண்டே செம்பியன் மாதேவியும் குந்தவை தேவியும் வானதி தேவியும் ஆழ்வார்க்கடியானிடம் பேசுவார்கள்.

நந்திநாதர்
அத்தகைய சிறப்பு மிக்க கோயில்தான் பழையாறையில் இன்றும் இருக்கும் நந்திபுர விண்ணகர கோயில். அந்தக் காலத்தில் பெருமாளின் ஒவ்வொரு பண்டிகைகளிலும் அரசர் அரசிகளும் இந்த கோயிலில் வந்து பெருமாளையும் தாயாரையும் வணங்கிச் செல்வது வழக்கம். செண்பகவல்லி தாயாரும் ஜெகந்நாத பெருமாளும் அருளும் இந்த நந்திபுர விண்ணகர கோயிலில், அஷ்டமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். 

திருவிழா கொண்டாடும் காரணம்

ஒருமுறை தாயார் பெருமாளிடம் "என்னை உங்கள் மார்பில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என வேண்டுகிறாள். பெருமாள் அதற்கு "நீ பூலோகத்திற்குச் சென்று எனக்காகக் காத்திரு, நான் அங்கு வந்து உன்னை ஏற்றுக்கொள்கிறேன்" என்கிறார். அதன் படி தாயாரும் இந்த பழையாறை நந்திபுரத்திற்கு தை அமாவாசை நாளன்று வந்து செண்பகவல்லி தாயாராக ரூபம் கொண்டு பெருமாளையே எண்ணிக் காத்திருக்கிறாள். தாயாருக்குக் கொடுத்த வாக்கின் படி பெருமாள் ஜெகந்நாதனாக உருவம் பெற்று ஐப்பசி மாதம் வெள்ளிக்கிழமை (அதாவது ஐப்பசி மாத அஷ்டமி) நாளன்று தாயாரை தன்னோடு சேர்த்துக்கொள்கிறார். இந்தக் கோயிலில் தாயார் கிழக்கு முகமாகவும் பெருமாள் மேற்கு முகமாகவும் காட்சி தருகின்றனர். பெருமாள் தாயாரை ஏற்றுக்கொண்ட நாளான ஐப்பசி மாத அஷ்டமி நாளை ஒவ்வொரு ஆண்டும் அஷ்டமி திருவிழாவாக இந்தக் கோயிலில் கொண்டாடுகின்றனர். 

இந்த வருடம் (31-10-2022) அக்டோபர் 31-ம் தேதி மாலை முதல் இந்த விழா தொடங்கியிருக்கிறது. அன்று மாலை முதலே ஸ்ரீ சுத்த யாகம் தொடங்கப்பட்டு பெருமாளுக்குப் பூஜைகள் நடைபெறும். அடுத்த நாள் பெருமாளுக்குப் பெரிய திருமஞ்சனம் வெகு விமரிசையாக நடைபெறும்.
பெருமாள்

யாரெல்லாம் யாகம் வளர்ப்பர்?

குழந்தை பாக்கியம் வேண்டுவோர், பதவி உயர்வு கிடைக்கவேண்டும் என்று நினைப்போர், கல்யாணம் ஆகாத ஆண் பெண் என அனைவரும் இந்த யாகத்தில் கலந்து கொள்வர். இந்த யாகத்தை மனப்பூர்வமாகப் பெருமாளை வணங்கிச் செய்தால் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த யாகத்திற்கு வேண்டிய பொருள்களை அளித்தும் பலனைப் பெறலாம். தேன், பால், தயிர், மஞ்சள், ஹோம பொருள்கள் ஆகியவற்றைத் தரலாம். இங்கே பிரசாதமாக வெண்பொங்கல், புளியோதரை, சக்கரைப்பொங்கல் ஆகியவை தரப்படுகின்றன. யாகத்தில் பங்கு கொள்வோர் முன்பதிவு செய்து இங்கு வந்து பங்குகொள்வர். இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை மறுநாளும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது இந்த யாகம். யாகத்தில் கலந்து கொள்வது மட்டுமின்றி இந்த நாளில் பெருமாளையும் தாயாரையும் தரிசிப்பதே சிறப்பான ஒன்றாகும்.



source https://www.vikatan.com/spiritual/temples/the-highlights-of-nandhipura-vinnagara-perumal-temple-ashtami-festival

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக