Ad

வெள்ளி, 21 அக்டோபர், 2022

``ரூ.4.70 லட்சம் சோஃபா இரண்டே மாசத்துல கிழிஞ்சு போச்சு..!" - சாலை மறியலில் ஈடுபட்ட வாடிக்கையாளர்

ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவர் பெருந்துறை ரோடு, பழையபாளையம் பகுதியில் உள்ள ஃபர்னிச்சர் ஷோரூம் ஒன்றில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ரூ.4.70 லட்சம் மதிப்பிலான சோஃபாவும், ரூ.1.46 லட்சம் மதிப்பிலான கட்டிலும் தள்ளுபடி போக மொத்தம் ரூ.5.30 லட்சத்துக்கு வாங்கிச் சென்றார். இந்தப் பொருள்களை அந்த நிறுவனமே வீட்டில் டெலிவரி செய்திருக்கிறது. இந்த நிலையில், அந்த ஷோரூமிலிருந்து வாங்கிச் சென்ற சோஃபா கடந்த ஆகஸ்ட் மாதம் கிழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனவே சோஃபாவை மட்டும் மாற்றித் தருமாறு செந்தில்குமார் கேட்டுள்ளார். சோஃபாவை மாற்றித் தர முடியாது, அதற்கு பதிலாக சர்வீஸ் மட்டுமே செய்து தர முடியும் என்று கூறியிருக்கின்றனர். அதற்கு ஒப்புக்கொண்டு சோஃபாவை கடையிலேயே கொடுத்து செந்தில்குமார் தரப்பினர் சென்றிருக்கின்றனர்.
பேசியபடி அதையும் செய்து தராமல் 3 மாதங்களாக ஷோரூம் தரப்பினர் செந்தில்குமாரை அலைக்கழித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

சாலை மறியலில் ஈடுபட்டோர்

இந்த நிலையில் 2 நாள்களுக்கு முன்பு தனக்கு தெரிந்த முக்கியஸ்தர்களை அழைத்து வந்து கடையில் பஞ்சாயத்து பேசி பார்த்தார். ஆனால் அதற்கும் கடை நிர்வாகத்தினர் மசிவதாக இல்லை. இதனால் கொதிப்படைந்த செந்தில்குமார் நேற்று இரவு தனது உறவினர்கள், நண்பர்களுடன் பர்னிச்சர் ஷோரூமிற்கு வந்தார். ஷோரூமிற்கு முன் சோஃபாவை மாற்றித்தரக் கோரி கோஷமிட்டவாறு, தன்னுடன் வந்தவர்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் செந்தில்குமார் ஈடுபட்டார்.
பீக் ஹவராக இருந்ததால் வாகனங்கள் நகர முடியாமல் நகர்ப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு புறமும் 1 கி.மீ-க்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அரைமணி நேரம் இந்த சாலை மறியல் நீடித்தது.  
தகவல் அறிந்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்தகிருஷ்ணன், வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.    

சாலை மறியலால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

பின்னர் ஷோரூம் நிர்வாகத்திடம் விசாரணை நடத்துவதற்காக டி.எஸ்.பி ஆனந்தகிருஷ்ணன் உள்ளே சென்றார். அப்போது அவர் ஷோரூம் நிர்வாகத்தினரிடம், ``உங்கள் கடையிலிருந்து வாங்கிச் சென்ற பொருளுக்கு நீங்கள்தான் உத்தரவாதம் அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை அளிக்காதது உங்கள் தவறு" என்று கூறினார். இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து செந்தில்குமார் கூறுகையில், ``பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய  சோஃபா இரண்டு மாதங்கள்கூட தாங்கல. கிழிந்து போனதால் அதை மாற்றித் தருமாறு கேட்டு 3 மாதங்களாக அலைகிறேன். இன்னிக்கு வா, நாளைக்கு வான்னு சொல்லி அலைக்கழிக்கிறாங்க. வேற வழியில்லாமதான் சாலைமறியல் போராட்டத்துல இறங்க வேண்டியதாச்சு" என்றார்.

ஷோரூம் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தும் டிஎஸ்பி ஆனந்தகிருஷ்ணன்.

பர்னிச்சர் ஷோரூமின் நிர்வாக இயக்குநர் மார்க் அமல்ராஜ் நம்மிடம் கூறுகையில், ``இருபது ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருக்கிறோம். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வாங்கிச் சென்ற சோஃபா மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தரமான லெதர் சோஃபா. அதில் எந்த டேமேஜும் இல்லை. எங்களிடம் அந்த சோஃபாவின் கலர் மாறி இருப்பதாகவும், அதற்காகத்தான் அதை மாற்றித் தர வேண்டும் என்றும் கூறியே ரிட்டர்ன் கொடுத்தார்கள். சோஃபாவில் எந்த கிழிசலும் இல்லை.உள்நோக்கத்துடன் இந்த குற்றச்சாட்டை அவர்கள் கூறுகிறார்கள். இதே தொழிலைச் சேர்ந்த சிலர் அவர்களைத் தூண்டி விட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் உள்ளது.

இதற்குக் தொழில் போட்டி கூட காரணமாக இருக்கலாம். பொதுமக்களிடம் எங்களுக்கு இருக்கும் நற்பெயரை சீரழிக்கும் நோக்கத்துடன் இது போன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது” என்றார்.



source https://www.vikatan.com/news/controversy/customer-hold-road-block-protest-at-erode-against-the-furniture-showroom

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக