Ad

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

Doctor Vikatan: கழுத்தில் உருளும் கட்டி- சாதாரண கட்டி, புற்றுநோயாக மாறும் ஆபத்திருக்கிறதா?

Doctor Vikatan: என் வயது 58. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எனக்கு கழுத்தில் கட்டி போன்று வந்தது. பார்ப்பதற்கு அது தைராய்டு கட்டி போலவே இருந்தது. டெஸ்ட் செய்து பார்த்ததில் தைராய்டு அளவுகள் நார்மலாக இருப்பதாகச் சொல்லி, மருந்து மாத்திரைகள் எதுவும் தேவையில்லை என மருத்துவர் சொல்லிவிட்டார். அந்தக் கட்டியை பயாப்சி டெஸ்ட்டுக்கு அனுப்பியதில் அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை என்று வந்துவிட்டது. ஆனாலும் இதை இப்படியே விட முடியாது... பின்னாளில் இது புற்றுநோயாக மாற வாய்ப்புண்டு, ஆபரேஷன் செயய வேண்டும் என்கிறார் மருத்துவர். புற்றுநோய் இல்லை என்று வந்த பிறகு இதை ஏன் ஆபரேஷன் செய்ய வேண்டும்? ஆபரேஷன் செய்யாமலேயே காலந்தள்ள முடியாதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

முதலில் உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள கட்டியின் அளவு தெரிய வேண்டும். மற்றவர்கள் பார்க்கும்போதே அது அவர்களுக்குத் தெரிந்து, கட்டி பற்றி விசாரிக்கிறார்கள் என்றால் அது ஓரளவு பெரியதுதான். அப்படி அடுத்தவர்கள் விசாரிக்கும் அளவுக்கான கட்டி என்றால் அதை ஆபரேஷன் செய்து எடுத்துவிடுவதுதான் சிறந்தது.

தவிர அந்தக் கட்டி இருப்பதால் உங்களுக்கு மூச்சுவிடுவதிலோ, சாப்பிடுவதிலோ பிரச்னைகள் இருக்கின்றனவா என்றும் கவனிக்க வேண்டும். உங்கள் மருத்துவர் குறிப்பிட்டது சரிதான்... இதை அப்படியே விட்டால் நாளடைவில் கட்டி பெரிதாகிக் கொண்டே போகும். மறுபடி அதனால் பிரச்னைகள் வரக்கூடும்.

புற்றுநோய்

புற்றுநோய்தான் இல்லையே... சாதாரண கட்டிதானே... பிறகு எதற்கு ஆபரேஷன் என்கிறீர்கள். அது சாதாரண கட்டியாக இருந்தாலும் அதை ஆபரேஷன் செய்து அகற்றிவிடுவதுதான் சரி. பயாப்சிக்கு கட்டியிலிருந்து சிறு பகுதியை மட்டுமே எடுத்து டெஸ்ட் செய்திருப்பார்கள். முழுக் கட்டியையும் அகற்றிவிட்டு, பிறகு பரிசோதனை செய்யும்போது அதன் தீவிரம் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும். எனவே உங்கள் விஷயத்தில் அந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-rolling-tumor-in-the-neck-is-it-likely-to-turn-into-cancer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக