Ad

வெள்ளி, 21 அக்டோபர், 2022

புரியும்படி பேசுங்கள் நிதி அமைச்சரே..!

பொருளாதாரம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்தது. ஆனால், அதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது. இதற்கு நல்லதோர் உதாரணம்தான், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பேசிய பேச்சு.

‘‘ரூபாய் மதிப்பு குறையவில்லை; டாலர் மதிப்பு உயர்கிறது’’ என்று அவர் பேசிய பேச்சு, பலரையும் பலமாக யோசிக்க வைத்துவிட்டது. ‘‘டாலர் மதிப்பு உயர்ந்தால், ரூபாய் மதிப்பு குறையத்தானே செய்யும், நிதி அமைச்சர் விநோதமான விளக்கத்தைத் தருகிறாரே!’’ என்று அவர் பேச்சைக் கேலி செய்து பலரும் மீம்ஸ் வெளியிட, அது வாட்ஸ்அப்பில் வைரலாக வலம் வந்தது.

உள்ளபடி பார்த்தால், மத்திய நிதியமைச்சர் சொல்லவந்த கருத்தில் தவறு எதுவும் இல்லை. உலகப் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக உலகின் பல்வேறு நாட்டு நாணயங்களின் மதிப்பு, டாலருக்கு எதிராகக் குறைந்திருக்கிறது. உதாரணமாக, இந்த ஆண்டில் டாலருக்கு நிகராக ஜப்பானின் யென்னின் மதிப்பு சுமார் 29%, பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு சுமார் 22%, தென் கொரியாவின் ஒன்னின் மதிப்பு சுமார் 19%, ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு சுமார் 19%, தாய் பத்தின் (Baht) மதிப்பு சுமார் 14% குறைந்துள்ளது.

ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக சுமார் 10% குறைந்துள்ளது. உலகின் பிற நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில், இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவுக்கே குறைந்துள்ளது என்பதே நிதி அமைச்சர் சொல்ல வந்த விஷயம். அதை அவர் சரியாக எடுத்துச் சொல்லியிருந்தால், அவர் கருத்து விமர்சனத்துக்குரிய தாக மாறியிருக்காது.

நாணய மாற்று (Currency Exchange) என்பது சிக்கலான விஷயம். அதை எல்லோரும் சரியாகப் புரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்க, இது மாதிரியான சிக்கலான விஷயங்களைப் பொதுவெளியில் பேசும்போது, அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருவேறு கருத்துக்கு வழி இல்லாத வகையில் பேச வேண்டும்.

சரி, இதெல்லாம் இருக்கட்டும். உலக நாணயங்களை ஒப்பிடும்போது இந்தியா பரவாயில்லை என்றுதான் சொல்ல முடிகிறதே தவிர, ‘இந்தியப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கிறது’ என்று உரக்கச் சொல்ல முடியவில்லையே! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 83 ரூபாய் என்று வந்து நிற்பது மட்டுமல்ல, கூடிய விரைவில் 84, 85 என்றுகூட வீழவே செய்யும் என்கிறார்கள். ரூபாய் மதிப்பு குறைவதைத் தடுக்க பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல், ‘சந்தையே அதன் மதிப்பை நிர்ணயிக்கட்டும்’ என ரிசர்வ் வங்கி வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்த நிலையில், நம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் உறுதியானதாக மாற்ற நடவடிக்கை எடுப்பதன்மூலமே ரூபாயின் மதிப்பை அதிகரிக்க முடியும். இதற்கு மத்திய அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் விஷயம் தெரிந்தவர்கள் கேட்க விரும்பும் முக்கியமான கேள்வி.

- ஆசிரியர்



source https://www.vikatan.com/news/editorial/rupee-vs-dollar-talk-to-nirmala-sitharaman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக