Ad

புதன், 19 அக்டோபர், 2022

'வெற்றி பெற்றார் மல்லிகார்ஜுன கார்கே' - காங்கிரஸில் புதிய மாற்றங்கள் வருமா?!

காங்கிரஸ் கட்சியானது கடந்த சில ஆண்டுகளாகவே நாடாளுமன்ற, மாநில தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வந்தது. குறிப்பாக 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த தோல்விக்கு அப்போதைய அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியே காரணம் என அக்கட்சியைச் சேர்த்த முக்கிய நிர்வாகிகள் பலர் குற்றச்சாட்டினார். இதையடுத்து அக்கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த ராகுல் காந்தி அப்பதவியிலிருந்து விலகினார்.  

பிறகு சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். சுமார் மூன்று ஆண்டுகள் அப்பதவியில் அவர் தொடர்ந்தார். தொடர் தோல்வி மற்றும் காந்தி குடும்பத்தைச் சேர்த்தவர்களே தலைவர்களாக இருக்கிறார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் காரணமாக, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிடப்பட்டது. இதன்படி முதலில் சசி தரூர் மற்றும் அசோக் கெலாட் இடையேதான் போட்டி நிலவியது. அப்போது, ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட்-க்கு காந்தி குடும்பத்தில் ஆதரவு இருந்ததால் காங்கிரஸ் தலைவராக வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளதாக முதலில் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

சோனியா காந்தி

இதற்கிடையில் எதிர்பாராத விதமாக இதில் மாற்றம் ஏற்பட்டது.  அதாவது ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து அசோக் கெலாட் விலக மறுத்துவிட்டார். பின்னர் அவர் போட்டியிலிருந்தும் விலகினார். இதன் பின்னர் மல்லிகார்ஜுன கார்கே களம் கண்டார். இதையடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கட்சிக்குள் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்தலில் 9,915 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 9,500க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருந்தது.

குறிப்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உட்படப் பலரும் வாக்களித்தனர். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவரும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள பாரத் ஜோடோ யாத்ரா முகாமில் வாக்களித்தார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் மகள் பிரியங்கா காந்தியுடன், சோனியா காந்தி வாக்களித்தார். இதுபோல் நாடுமுழுவதும் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர். 

ராகுல் காந்தி

இதையடுத்து வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீலிடப்பட்டு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்குப் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.  இதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசிதரூர் 1,000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. முன்னதாகவே இத்தேர்தலில் கார்கே தான் வெற்றி பெறுவார் என்று பலரும் கூறி வந்தனர். அதன்படி தேர்தல் முடிவும் அமைத்துள்ளது.

இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் கார்கேவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மற்றொருபுறம் இனி காங்கிரஸ் கட்சி சார்ந்த விவகாரங்களில் முக்கிய முடிவுகளை கார்கே எடுப்பார் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் நாடு முழுவதும் அக்கட்சிக்குள் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிதரூர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், "உலகில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக கட்சிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒன்று என்பதை இந்த தேர்தல் மூலம் மற்றொருமுறை நிரூபித்துள்ளனர். இதுபோல் ஒரு தேர்தல் நடந்து 22 ஆண்டுகள் ஆகிறது. கார்கே முழுக்க, முழுக்க சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வேட்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் சசிதரூர் தேர்தலில் களம் கண்டதின் மூலம் ஜனநாயகம் வெளிப்பட்டது. 

இவர் பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். குறிப்பாக கார்கேவுக்கு முன்பு 4 மாநில தேர்தல்கள் உள்ளன. இந்த தேர்தல்களை எவ்வாறு இவர் கையாள்கிறார் என்பதை வைத்தே நாம் தென்நாட்டில் இருந்து ஒரு வலுவான தலைவர் வந்துள்ளார் என்று நாம் வெளிக்காட்ட முடியும். ஓடிப்போகக்கூடிய எம்.எல்.ஏ., க்களுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது. எம்.பி., -  எம்.எல்.ஏ., க்கள் ஓடுவது போல் தொண்டர்களும் ஓடிவிடக்கூடாது. 

காங்கிரஸ்

அதைத் தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். இதேபோல் ஒருசில மாநிலங்களில் சோனியா, ராகுல் ஆகியோரால் நடவடிக்கை எடுக்க முடியாத சிலர் உள்ளனர். அவர்களால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. மீறி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அது காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தான் கார்கே தலைவராகக் கொண்டுவரப்பட்டுள்ளார். வரும் காலங்களில் அவர்களைத் தனது 'பார்முலா'வில் சரி செய்வர் என்று நினைக்கிறோம். இதன் ஒரு பகுதியாகத் தமிழக காங்கிரஸ் காட்சியிலும் பெரிய மாற்றம் இருக்கும் விரைவில் இருக்கும்" என்றார். 



source https://www.vikatan.com/news/politics/mallikarjuna-kharge-won-congress-president-election-what-next

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக