Ad

வியாழன், 27 அக்டோபர், 2022

`பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வராததன் காரணம் என்ன?’ - விளக்கும் ஆர்.பி.உதயகுமார்

மருது பாண்டியரின் 221-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையிலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு முதன் முதலில் அரசின் சார்பில் விழா நடத்தியவர் புரட்சித்தலைவி. அதனைத் தொடர்ந்து திருப்பத்தூரில் மணி மண்டபம் அமைத்தார். அதுபோல் சிவரக்கோட்டை மக்களின் கோரிக்கையை ஏற்று இங்கே மருதுபாண்டியர் சிலை அமைக்க அரசாணை தந்தவர் எடப்பாடியார்.

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

பதின்மூன்றரை கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை பசும்பொன்னாருக்கு அம்மா வழங்கினார், ஒவ்வொரு குரு பூஜைக்கும் அந்த தங்க கவசத்தை வங்கியிலிருந்து பெற்று அ.தி.மு.க சார்பில் அனுப்பி வைப்பது கடந்த 2014 முதல் நடந்து வருகிறது. 

 ஆனால், இந்த ஆண்டு துரோகத்தின் விளைவாக தங்க கவசத்தை சாத்த தடை ஏற்படுமோ என்று மக்கள் அஞ்சினார்கள். இதற்கு தடை ஏற்படுத்திடவும், அந்தப் பழியை நம்மீது சுமத்தவும் துரோகிகள் சூழ்ச்சி செய்கிறார்கள், வங்கி கணக்கை முடக்க பார்கிறார்கள் என்று தெரிந்த பின்புதான் நீதிமன்றத்துக்கு சென்று, தங்க கவசத்தை பெற்று தெய்வீக திருமகனாருக்கு அணிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் தங்க கவசத்தைக் கொண்டு போய் சேர்க்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன் மூலம் தேவர் திருமகனாருக்கு தங்க கவசம் சாத்தியிருக்கின்ற காட்சி தென் மாவட்ட மக்களின் மனதை குளிர செய்துள்ளது. இதை தடுக்க நினைத்தவர்கள், குழப்பத்தை விளைவிக்க நினைத்தவர்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் எடப்பாடியார் எடுத்த முயற்சி காரணமாகியுள்ளது.

மருது பாண்டியர் விழாவில் ஆர்.பி.உதயகுமார்

அம்மாவின் சொத்தான தங்க கவசத்தை கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க வங்கி தயாராக இருந்தபோது அங்கே தடை ஏற்படுத்தினார்கள், பிறகு நீதிமன்றத்திலும் தடை ஏற்படுத்தினார்கள், தேவர் நினைவாலய காப்பாளர்களிடம் முறையிட்டபோது, அங்கேயும் வந்து தடை ஏற்படுத்தினார்கள்.

நீங்கள் எத்தனை தடை ஏற்படுத்தினாலும் தேவரின் ஆசி இல்லாத காரணத்தினால் உங்களால் தங்க கவசத்தை எடுக்க முடியவில்லை. எடப்பாடியாருக்கு தேவரின் ஆசி இருப்பதினால் தேவர் திருமேனியிலே இன்று தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது.

டி.ஆர்.ஓ மூலம் கொண்டு சொல்லப்பட்ட தங்க கவசம்

அருளாசி இருந்ததால்தான் தமிழக முதலமைச்சராக நான்கரை ஆண்டு காலம் எடப்பாடியார் இருந்தார். உங்களுக்கு பதவி இல்லை என்ற காரணத்தினால் நீங்கள் செய்கின்ற சூதுகளையும், சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு போராடி வருகிறோம். அவர்களின் சூழ்ச்சிகளும், சூதுகளும் அப்பாவி மக்களுக்கு தெரியாது... எங்களுக்குத்தான் தெரியும்,

பசும்பொன்னுக்கு எடப்பாடியார் ஏன் வரவில்லை என்று விவாதம் செய்கிறார்கள். நிச்சயமாக எடப்பாடியார் பசும்பொன்னுக்கு வருவார், காளையார்கோயிலுக்கும் உசிலம்பட்டிக்கும் நிச்சயம் வருவார். அந்த நாள் தென் தமிழ்நாட்டில் பொன்னாளாக அமையும். வருகின்ற 30 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் புரட்சித்தலைவியால் அமைக்கப்பட்ட தெய்வத் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் எடப்பாடியார்" என்று பேசினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/r-b-udhayakumar-says-why-edappadi-not-visiting-pasumpon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக