Ad

வியாழன், 27 அக்டோபர், 2022

`இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கு, ஆனா இதுதான் ஃபர்ஸ்ட் டைம்' - பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே!

கிட்டத்தட்ட ஒரு த்ரில்லான ரோலர் கோஸ்டர் ரைடர் போல நடந்து முடிந்திருக்கிறது சூப்பர் 12-ல் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே ஆட்டம். இந்தியாவுடனான தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் ஒரு நல்ல ரன்ரேட்டில் வெற்றிபெற்றுவிடும் என்று நினைத்தால், ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் அதன் அரையிறுதி வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அதே சமயம், ஜிம்பாப்வே அடுத்தடுத்த போட்டிகளில் நம்பிக்கையுடன் சற்று போராடினால் இதுவரை நிகழாத அதிசயங்கள் நிச்சயம் நிகழலாம்.

Pakistan v Zimbabwe

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அதுவும் பாகிஸ்தான் வேகத்தை ஜிம்பாப்வே பேட்டர்கள் எப்படி பெர்த்தில் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழ, முதல் ஓவரிலேயே 14 ரன்கள் அடித்து அதற்குப் பதிலளித்தது மாதவேர் - எர்வின் இணை. 4 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்த போது அந்த பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓவரில் மாதவேர் அவுட்டானவுடன் வந்த ஷூம்பா, ஷதாபிடம் அவுட்டாக, சீன் வில்லியம்ஸ் மட்டும் சற்று தாக்குப்பிடித்து ஆடி ஸ்கோரை மெதுவாக நகர்த்தினார். தனது கடைசி ஓவரில் அவரையும், சக்பவாவையும் ஷதாப் அவுட்டாக்கி கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தினார். 95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது ஜிம்பாப்வே. அடுத்து பர்ல் - எவான்ஸ் இணை கொஞ்சம் ரன்களைச் சேர்த்ததால் 130 ரன்களை எட்டியது. பாகிஸ்தான் சார்பில் ஷதாப் 3 விக்கெட்டும், வசீம் மூன்று விக்கெட்டும் வீழ்த்தினர்.

Pakistan v Zimbabwe

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் - ரிஸ்வான் இருவரும் சேர்ந்தே ஆட்டத்தை முடித்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், ஜிம்பாப்வே பௌலர்கள், 'அந்த சீன்லாம் இன்னைக்கு இல்ல' என்பதுபோல மிரட்டலாகப் பந்து வீசினர். பாபர் அசாமையும் ரிஸ்வானையும் பவர்ப்ளேவுக்கு உள்ளாகவே பெவிலியன் அனுப்பினர். அடுத்து வந்த ஷான் மசூத் நின்று ஆட, இஃப்திகார் அகமது ஆட்டமிழந்தார். ஷதாப் கான் - மசூத் இணை சற்று நேரம் பார்ட்னர்ஷிப் அமைக்க பாகிஸ்தான் ஆட்டத்தை வென்று விடும் என்பதே பலரின் கணிப்பாக இருந்தது. அங்கேதான் மிரட்டல் ட்விஸ்ட்!

இருவரையும் அடுத்தடுத்து ராசா ஆட்டமிழக்கச் செய்தார். ஆனால், பாகிஸ்தானின் நம்பிக்கை ஃபினிஷரான நவாஸ் நம்பிக்கை இழக்காமல் கடைசிவரை ஆட்டத்தை எடுத்துச் சென்றார். நகர்வா வீசிய 19 ஓவரில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்பி மேலும் பரபரப்பாக்கினார். இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது வசீம் ஒரு பவுண்டரி வேறு அடித்து, ஆட்டத்தை ஒரு பெரும் த்ரில்லர் சினிமாவாக மாற்றினார். ஆனால், எதிர்பாரா விதமாக 5-வது பந்தில் மிட் ஆஃப் திசையில் அடிக்க முயன்று அவுட்டானார் நவாஸ். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டாலும் 1 ரன் மட்டுமே எடுத்ததால் ஜிம்பாப்வே ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்தப் பந்திலும் பரபரப்பாக இரண்டாவது ரன்னுக்கு பாகிஸ்தான் பேட்டர்கள் முயல, பவுண்டரி லைனிலிருந்து ராசா வீசிய த்ரோவை கீப்பர் பம்மி பதுங்கி எடுத்து ஸ்டம்ப்பைத் தகர்த்தார். மூன்று விக்கெட்டுகள் எடுத்த ராசா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Pakistan v Zimbabwe

ஜிம்பாப்வே வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்களும், ஃபீல்டிங்கும்தான். அதே சமயம், இன்று பாகிஸ்தான் அணி மிக மோசமாகவே ஃபீல்டிங் செய்திருந்தது. அது கேட்ச் மட்டுமில்லாமல் த்ரோ வீசுவதிலும் வெளிப்பட்டது. பாபர் அசாம் பிடித்த கேட்ச்சைத் தவிர வேறெதுவும் சொல்லிக்கொள்ளும் படி அவர்களுக்கு அமையவில்லை. ஆனால், இறுதிக்கட்ட பதட்டத்தில் செய்த வெகு சில சொதப்பல்களைத் தவிர்த்து பார்த்தால், ஜிம்பாப்வே வீரர்கள் பாபரின் கேட்ச்சில் ஆரம்பித்து கடைசி பந்தில் நடந்த ரன் அவுட் வரை சிறப்பாக ஃபீல்டிங் செய்தனர்.

இரண்டு இன்னிங்ஸிலும் வேகப்பந்து வீச்சாளர்களின் லென்த் பௌலிங், ஸ்பின்னர்கள் கொடுத்த பிரேக், மிடில் ஆர்டர் தடுமாற்றம் எனப் பல ஒற்றுமைகள் இருந்தாலும் வலுவான பாகிஸ்தானை ஜிம்பாப்வே வீழ்த்தியது பவர்ப்ளேக்களில்தான்! முதல் 6 ஓவர்களில் ரன்கள் சேர்த்தது முதல் பாகிஸ்தானின் பலமான ஓப்பனர்களை பெவிலியன் அனுப்பியது வரை இரண்டு இன்னிங்க்ஸ்களின் பவர்ப்ளேயிலும் ஜிம்பாப்வேவின் கையே ஓங்கியிருந்தது. நடுவில் ஜிம்பாப்வேவின் பிடி தளர்ந்த போது அவர்களின் ஹீரோவான ராசா மீண்டும் கைகொடுத்துக் காப்பாற்றினார். பின்னர் அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் கச்சிதமாக ஆட்டத்தை முடித்து வைத்தனர்.

Pakistan v Zimbabwe

உலகக்கோப்பைக்கு முன்னரே பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பற்றிய பேச்சு அனைவரிடமும் எழுந்தது. இன்று ஒரு பௌலரை அதிகமாக ஆட வைத்தது கைகொடுத்தாலும், பேட்டிங் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

ஓராண்டாக கசப்பான அனுபவங்களைக் கடந்து வந்த ஜிம்பாப்வே அணிக்கு இந்த வெற்றி நிச்சயம் பெரிய கொண்டாட்டமே! அவர்களின் போராட்டக் குணமும் இதில் வெளிப்பட்டது கூடுதல் சிறப்பு!


source https://sports.vikatan.com/cricket/zimbabwe-wins-close-encounter-with-pakistan-sikandar-raza-shines

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக