Ad

புதன், 26 அக்டோபர், 2022

கோவை கார் வெடிப்பு: ஈரோட்டில் கைதானவருக்குத் தொடர்பா? - உளவுப்பிரிவினர் தீவிர விசாரணை!

கோவை உக்கடம், கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. அதில் காரில் இருந்த நபர் உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் உருக்குலைந்து போனதாக வெடித்துச் சிதறிய காரை சோதனையிட்ட தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர். காரில் ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டன. தொடர் விசாரணையில் காரில் உடல் கருகி பலியான நபர் கோட்டைமேடு, என்.எம்.பி.ஆர் தெருவைச் சேர்ந்த ஜமேஷா முபின் (29) என்பது தெரியவந்தது.
ஜமேஷா முபினின் வீட்டை சோதனையிட்டபோது பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். வீட்டின் அருகிலுள்ள  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, ஜமேஷா முபின் உட்பட 5 பேர் ஒரு மூட்டையை சுமந்து வீட்டைவிட்டு வெளியே வரும் காட்சி பதிவாகியிருந்தது.


இதையடுத்து ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்கள் என உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் அடையாளம் காணப்பட்டு இரு தினங்களுக்கு முன்பு போலீஸார் கைதுசெய்தனர். அவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைதுசெய்யப்பட்ட 5 பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகளும், உளவுப்பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் 2 மாதங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்ட ஆசிஃப் முசாஃபுதீன்.

இதனிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கம்பாளையம், முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்த மகபூப் மகன் ஆசிஃப் முசாஃபுதீன் (28) என்பவரையும், ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  நஞ்சப்பன் நகரைச் சேர்ந்த யாசின் (31) ஆகியோருக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமும் என்.ஐ.ஏ அதிகாரிகளும், ஈரோடு போலீஸாரும் தொடர் விசாரணை நடத்தினர்.
இதில் ஆசிப் முசாஃபுதீனுக்கு,  ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது, சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்பு உள்ளிட்ட ஏழு சட்டப் பிரிவுகளின் கீழ் ஈரோடு வடக்கு போலீஸார் வழக்கு பதிவுசெய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். யாசின் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால், அவர் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கோவையில் கைதுசெய்யப்பட்ட 5 பேருக்கும், ஈரோட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையிலுள்ள ஆசிஃப் முசாஃபுதீனுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் தற்போது உளவுப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உளவுப்பிரிவு வட்டாரங்கள், ``2 மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிஃப் முசாஃபுதீனுக்கும், கோவையில் கைதான 5 பேருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகளும், மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிஃப் முசாஃபுதினுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அது தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதுவரை நடத்திய விசாரணையில் கோவையில் பிடிபட்ட 5 பேருக்கும், ஆசிஃப் முசாஃபுதீனுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. கோவையில் கைதுசெய்யப்பட்ட நபர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தேவைப்பட்டால் ஆசிஃப் முசாஃபுதீனை கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம்" எனத் தெரிவிக்கின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/crime/intelligence-department-tightened-investigation-at-erode-relating-coimbatore-car-blast-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக