Ad

புதன், 19 அக்டோபர், 2022

Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்டால் சரியாகும் மலச்சிக்கல்... இயற்கையாகக் குணமாக்க வழிகள் உண்டா?

Doctor Vikatan: என் வயது 43. எனக்கும், என் 15 வயது மகளுக்கும் மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. அதற்கான மாத்திரை சாப்பிட்டால் அப்போதைக்கு நிவாரணம் கிடைக்கிறது. மீண்டும் அடுத்தடுத்த நாள்களில் அதே பிரச்னை வருகிறது. இதற்கு என்ன காரணம்? இதிலிருந்து விடுபட என்ன வழி?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

நார்ச்சத்து இல்லாத உணவுப்பழக்கம்தான் மலச்சிக்கலுக்கான பிரதான காரணம். நம்முடைய பார்ம்பர்ய உணவுப் பழக்கத்தில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்தான் சாப்பிடப்பட்டிருக்கின்றன. காலையில் சாப்பிடும் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், மதியம் காய்கறி, கூட்டு, கீரை, இரவு உண்ணும் சப்பாத்திக்கு காய்கறி கிரேவி என ஒவ்வொரு வேளையிலும் நார்ச்சத்துள்ள உணவுகள் சாப்பிடப்பட்டன.

ஆனால், சமீப காலமாக நம்முடைய உணவுப் பழக்கத்தில் நார்ச்சத்தின் அளவு குறைந்துவிட்டது அல்லது அறவே இல்லாமல் போய்விட்டது. அதன் விளைவாகத்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது. காய்கறி, பழங்களுக்குப் பதிலாக சிப்ஸ், அப்பளம் என நொறுக்குத்தீனிகளுக்கு மாறிவிட்டதன் விளைவுதான் இது.

மலச்சிக்கல் பாதிப்பிலிருந்து மீள இரண்டு விஷயங்கள் அவசியம். நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் அத்தியாவசியமாகப் பின்பற்றப்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனம் முதல் நம் சுகாதாரத்துறை வரை நார்ச்சத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன.

வளர்ந்த நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 35 முதல் 45 கிராம் வரை நார்ச்சத்து அவசியம். குழந்தைகளுக்கு குறைந்தது 25 கிராம் அளவுக்காவது நார்ச்சத்து கொடுக்கப்பட வேண்டும். அந்த நார்ச்சத்து காய்கறி உணவுகளில்தான் அதிகம். அவை தவிர பதப்படுத்தப்படாத அரிசி, சிறுதானியங்களில் நார்ச்சத்து இருக்கும்.

ஒருநாளைக்கு இரண்டு போர்ஷன் அளவுக்கு பழங்கள் சாப்பிட வேண்டும். பழங்கள் என்றதும் வாஷிங்டன் ஆப்பிளும் சிம்லா ஆப்பிளும்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களே போதுமானவை. நம்முடைய தட்பவெப்பநிலைக்கு ஏற்ற, நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.

மலச்சிக்கல்

வயதானவர்கள் மென்று சாப்பிட முடியாத காரணத்தால் காய்கறிகளையும் பழங்களையுதம் தவிர்த்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு மலச்சிக்கல் வரும். அப்படிப் பட்டவர்களுக்கு காய்கறிகளைக் கொஞ்சம் கூடுதலாக வேகவைத்துக் கொடுக்கலாம்.

இப்படி நார்ச்சத்துடன் நீர்மோர், சூப், ரசம் என திரவ உணவுகளையும் சாப்பிடப் பழகினால் மலச்சிக்கல் சரியாகும். இவற்றைத் தவிர்த்து சப்ளிமென்ட்டுகளை நோக்கிப் போக வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/food/healthy/doctor-vikatan-constipation-that-can-only-be-cured-by-taking-pills-are-there-ways-to-cure-it-naturally

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக