Ad

வெள்ளி, 28 அக்டோபர், 2022

ஒன் பை டூ

வி.பி.துரைசாமி, பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர்.

“வைகோ சொல்வது ஏற்புடையதல்ல. காரணம், `இந்தியைத் தமிழகத்தில் திணிக்கக் கூடாது’ என்று தலைவர் அண்ணாமலை பல காலகட்டங்களில் சொல்லிவருகிறார். அதுமட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ் மொழியின் பெருமையை, அதன் மகத்துவத்தைப் பல இடங்களில் பேசிவருகிறார். குறிப்பாக ஐ.நா சபையிலும், தொடர்ச்சியாக வாக்குகள் சேகரிக்கும் வடபுலத்திலும்கூட தைரியமாக சம்ஸ்கிருதத்தைவிட மூத்த மொழி தமிழ் என்றும், திருக்குறளையும், கம்பராமாயணத்தையும், மகாகவி பாரதியார் பாடல்களையும் மேற்கோள் காட்டுகிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை மறைக்க திடீரென்று சட்டசபையில் இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திய இவர்களது மெகா சீரியல் திரைக்கதை ஓடவில்லை. அதேவேளையில் 60 ஆண்டுக்காலம் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க-வுக்கு நாடகம் நடத்தித்தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இது வைகோவுக்கும் நன்றாகவே தெரியும். ஏதோ கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, வைகோ அவருடைய நிறத்தை மாற்றிக்கொண்டது வருத்தமாக இருக்கிறது.”

வி.பி.துரைசாமி
ஆ.வந்தியத்தேவன்,

ஆ.வந்தியத்தேவன், கொள்கை விளக்க அணிச் செயலாளர், ம.தி.மு.க.

“தலைவர் வைகோ கூறியது சரிதான். பா.ஜ.க அரசு சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவிட்டிருக்கிறது. ஆனால், தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு வெறும் 23 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை எட்டு ஆண்டுகளாக மோடி அரசு நிறைவேற்றவில்லை. அதற்கு ஒரு சின்ன முயற்சியாவது எடுத்திருக்கிறதா... ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு இடம் உண்டா... ஒன்றிய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் இருக்கிறதா... டெல்லி ஜே.என்.யு-வில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கான காலி இடங்கள் எட்டு ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்... திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசும் பிரதமர், உலகப் பொதுமறையான திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிப்பாரா... தங்களின் மதவாத அரசியலை மறைக்க, தமிழ்ப் போர்வையைப் போத்திக்கொண்டு வாக்குவங்கி அரசியல் நடத்த நினைக்கும் பா.ஜ.க-வின் நாடகம், தமிழ்நாட்டில் எடுபடாது!”



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-vaiko-comments-on-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக