Ad

புதன், 24 ஆகஸ்ட், 2022

``ஒரு எம்எல்ஏ-வுக்கு ரூ.20 கோடி பேரம்; ஷிண்டேபோல மாற்ற பாஜக முயற்சி!" - குற்றம்சாட்டும் ஆம் ஆத்மி

டெல்லியிலுள்ள ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பா.ஜ.க தீவிர முயற்சி மேற்கொண்டுவருவதாக மாநிலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியிருக்கிறது. அவர் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் ஐந்து பேர் கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

``பா.ஜ.க., மத்திய விசாரணை ஏஜென்சிகளை ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது. பணத்தாலும் மிரட்டலாலும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க முயல்கிறது" என்று தெரிவித்தனர். ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் பேசுகையில், ``ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏ-க்களைப் பிரிக்க முயல்கின்றனர். மணீஷ் சிசோடியாவை ஏக்நாத் ஷிண்டேபோல மாற்ற முயன்ற பா.ஜ.க-வின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க-வினர் மிரட்டுகின்றனர். ஒவ்வொருவருக்கும் ரூ.20 கோடி கொடுப்பதாகக் கூறுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியினர்

அவர்கள் சொல்வதற்கேற்ப செய்யாவிட்டால், `மணீஷ் சிசோடியா போன்று சி.பி.ஐ விசாரணையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்' என்று மிரட்டுகின்றனர். அஜய் தத், சஞ்சீவ் ஷா, சோம்நாத் பாரதி, குல்தீப் குமார் ஆகியோரிடம் பா.ஜ.க தலைவர்கள் தங்களுக்கு இருக்கும் தொடர்பை பயன்படுத்திப் பேசியிருக்கின்றனர். ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ரூ.20 கோடியும், தன்னுடன் வேறு ஒரு எம்.எல்.ஏ-வை அழைத்து வருபவர்களுக்கு ரூ.25 கோடியும் வழங்கப்படும் என்று பா.ஜ.க பேரம் பேசுகிறது" என்று தெரிவித்தார்.

சஞ்சய் சிங்குடன் இருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் நான்கு பேரும் தங்களை பா.ஜ.க-வினர் எப்படி அவர்களுடைய பக்கம் இழுக்க முயன்றனர் என்று தெரிவித்தனர்.

மணீஷ் சிசோடியா

பா.ஜ.க-வின் ஆபரேஷன் லோட்டஸ், ஆபரேஷன் போலியாகிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ``நீங்கள் மிரட்டி பல மாநில அரசுகளைக் கவிழ்த்திருக்கலாம். ஆனால் டெல்லியில் கெஜ்ரிவாலை மக்கள் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர். உங்களால் எதுவும் செய்ய முடியாது" என்று தெரிவித்தனர்.

ஆனால், பா.ஜ.க இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. இது தொடர்பாக அந்தக் கட்சி, ``மதுபானக் கொள்கையில், மணீஷ் சிசோடியா வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தில் சி.பி.ஐ-யின் கேள்விக்கு பதிலளிப்பதிலிருந்து மக்களை திசைதிருப்ப ஆம் ஆத்மி கட்சி இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/aap-alleges-bjp-offered-rs-20-crore-each-to-four-mlas-to-switch-sides

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக