Ad

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

`இளைய'ராஜாக்களும் இளவரசியும்..! #AppExclusive

ழை தூறிக் கொண்டிருந்த மதிய நேரம்... அழகான வெள்ளைநிற பங்களா. உச்சியில் ஒரு விநாயகர். கழுத்தில் கதம்ப மாலை. உள்ளே நுழைந்தால் எதிரே இன்னொரு விநாயகர். மல்லிகைப் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. சிவப்புக் கம்பளம் விரித்த ஹால். ஓரமாக பியானோ.

Yuvan Shankaraja, Bhavatharani, Karthick Raja

இந்த நூற்றாண்டின் இசையமைப்பாளர் இளைய ராஜாவின் வீடு.

``அப்பா ரிக்கார்டிங் போயிருக்காங்க..." மொட்டைத்தலையுடன் கார்த்திக் ராஜாவைப் பார்க்கிறபோது `அன்னக்கிளி' இளையராஜா மாதிரியிருக்கிறார். பேசத் தொடங்கினால் மானரிஸம், அது இதுவென்று அப்படியே அப்பா.``பியானோதான் என்னோட மாஸ்டர் இன்ஸ்ட்ரூமெண்ட்" - எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கற்றுக் கொள்ளத் துவங்கினாராம். அப்பாவோடு ஸ்டூடியோவுக்குப் போகும்போதெல்லாம் கீபோர்டில் விளையாட ஆரம்பித்தது...

``பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா" தான் நான் மியூஸிக் பண்ண முதல் பாடல். அது செம ஹிட். அதற்கப்புறம் அப்பாவுக்காக நிறையப் பாடல்கள், ரீ ரிக்கார்டிங் எல்லாம் கம்போஸ் பண்ணியிருக்கேன். பியானோவில்தான் ட்யூன்ஸ் ரெடி பண்ணுவேன். அப்பாவோட ஸ்டைல் இல்லாத புதுசா வரணும்கிறதுல கவனமா இருப்பேன். நான் மியூஸிக் பண்ணதை அப்பா ஃப்ரீயா இருக்கறப்போ போட்டுக் காமிச்சு கரெக்‌ஷன்ஸ் இருந்தா கேட்டுக்குவேன். `அலெக்ஸாண்டர் தி கிரேட்', 'மாணிக்கம்', 'ஆகஸ்ட்-15'...

மூணு படங்களுக்கும் இப்போ மியூஸிக் பண்றேன்..."

அப்பாவுடைய தீவிர ரசிகர் இந்த இளைஞர். ``சிச்சுவேஷனுக்கு ஏற்ப பாடல்கள் அமைப்பதில் அப்பாதான் எப்பவும் ராஜா. இப்போ மெலோடியஸ் பாட்டுக்கெல்லாம் இருந்த கிரேஸ் குறைஞ்சு ராப் பாடல்களை ரசிக்கிறாங்க. ரசிகர்களோட டேஸ்ட்டுக்கு வொர்க் பண்ணனும்ங்கிற கமிட்மெண்ட் இருக்கு..." - நிதானமாகத் தெளிவாகப் பேசுகிறார் - கார்த்திக் ராஜா.

"பவா"- இவரா? என்று கொஞ்சம் ஆச்சரியத்தோடு பார்க்க வைக்கிற ராஜா வீட்டு இளவரசி பவதாரிணி. `ராசய்யா'வின் `மஸ்தானா... மஸ்தானா...' பாடல் பாடியவர். இரண்டு வார்த்தைகளுக்கிடையே கிடைக்கிற இடைவெளிகளில் கூடப் புன்னகை பூக்கிற முகம். அண்ணன் மாதிரி ப்ளஸ் டூவோடு டாட்டா சொல்லி விடாமல் அதற்கப்புறம் கரஸ்பாண்டென்ஸில் படிக்கிறார். "அண்ணன் கார்த்திக், தம்பி யுவன், பெரியப்பா பையன் பாலகிருஷ்ணன் எல்லோரும் உட்கார்ந்து ட்யூன் போட்டு, பாட்டு எழுதி, பாடி ரிக்கார்ட் பண்றதை ஆறேழு வருஷமா சின்ஸியரா பண்ணிட்டிருக்கோம். அப்பா எப்போவாவது `நல்லாயிருக்கு'ன்னு சொல்லிட்டா போதும்... `ஹே'ன்னு ஜாலியாயிடும்."- அப்பாவுக்கு ரொம்ப செல்லம் பவதாரிணி. ``என்னை `பவதா'னு கூப்பிடுவாங்க. `ஏதாவது பாடேன்'னு கர்னாடிக் ஸாங்ஸைப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. அப்பா மியூஸிக்ல முதல் ஸாங் பாடுனப்போ பயமா இருந்தது. இப்போ கார்த்திக் அண்ணா படத்திலயும் யுவன் மியூஸிக் பண்ற `அரவிந்தன்'லயும் பாடியிருக்கேன்..." என்ற பவதாரிணி, "நான் பெயிண்ட்டிங் பண்ணுவேன்..." - தயக்கத்தோடு சில படங்களைக் காட்டினார். சாம்பிளுக்கு ஒன்று இங்கே...

Yuvan Shankaraja

குட்டிப்புயல் மாதிரி யுவன்சங்கர். வீட்டில் கடைக்குட்டி. வெஸ்டர்ன் டேஸ்ட் உள்ள யுவன் ரொம்ப வெளிப்படையாகப் பேசுகிறார்.``படிப்பு வரலே சார்... அதான் ஸ்கூலுக்குப் போவலை. ஆறு வயசு இருக்கறப்பவே `நாம ஒரு மியூஸிக் டைரக்டராவணும்'னு ரொம்ப தீவிரமா இருந்தேன். கீ போர்டுதான் என்னோட ஃபேவரிட். நாள்கணக்கா அதோடயே உட்கார்ந்துக்கிட்டிருப்பேன். ரிக்கார்டிங்குக் கூட ஸ்டூடியோவுக்கு அப்பாவோட அதிகமா நான் போனதில்லை.பாப், ராப்னு வெஸ்டர்ன் மியூஸிக் இவ்ளோ பிடிக்கும். ஸ்பீட் இருக்கணும். `அரவிந்தன்' படத்துக்கு மியூஸிக் பண்ண ஆஃபர் வந்தப்போ யெஸ் சொன்னேன். `ஆல் தி பெஸ்ட்’னு ஒரு ஸாங். அப்புறம் `பொன்னம்மா... பொன்னம்மா'ன்னு ஒரு ஸாங் நானே பாடியிருக்கிறேன். எனக்கு முதல்லயே ஒரு சாலன்ஜ் வந்தது. படம் பண்றதுக்கு முன்னால டிரெய்லர் பண்ணிட்டாங்க. அதுக்கு ரீ ரிக்கார்டிங் பண்ணது எனக்குப் பிடிச்சிருந்தது.ஏ.ஆர். ரஹ்மான் மியூஸிக்ல என்னோட ஃபேவரிட் `காதல் ரோஜாவே' " - படபடவெனப் பேசிவிட்டு பபிள்கம்மில் தீவிரமானார். மூவருக்குமே அப்பாவோடு ரிலாக்ஸ்ட் ஆக அரட்டைக்கச்சேரி நடத்துவதில்தான் குஷி. அந்த நேரங்களில் அப்பா பாடுவாராம். பழைய கதைகளெல்லாம் சொல்வாராம். மற்றபடி திருவண்ணாமலைக்கு பெளர்ணமி நாட்களில் ராஜா செல்லும்போது கார்த்திக், யுவன் மட்டும் கூடவே தொற்றிக் கொள்வதுண்டு.

- நமது நிருபர்

படங்கள்: பொன்ஸீ

(19.11.1995 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)



source https://cinema.vikatan.com/tamil-cinema/bhavatharini-karthick-raja-and-yuvan-shankar-rajas-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக