Ad

புதன், 24 ஆகஸ்ட், 2022

சென்னை: லேடீஸ் கோச்சில் ஏற முயன்ற நபருடன் தகராறு - மின்சார ரயிலில் பெண் காவலருக்குக் கத்திக் குத்து

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு 23.8.2022-ம் தேதி இரவு மின்சார ரயில் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தது. அந்த ரயிலில் பாதுகாப்புப் பணியில் ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் காவலர் ஆசீர்வா என்பவர் இருந்தார். அப்போது பெண்களுக்கான ரயில் பெட்டியில் ஆண் ஒருவர் ஏற முயன்றார். அதை கவனித்த பெண் காவலர் ஆசீர்வா `இது, லேடீஸ் கோச், நீங்கள் பொது கோச்சில் ஏறுங்க’ என்று கூறியிருக்கிறார். அதைக் கண்டுகொள்ளாத அந்த நபர், பெண்களுக்கான ரயில் பெட்டியில் ஏறியிருக்கிறார். அதனால் அந்த நபருக்கும், பெண் காவலர் ஆசீர்வாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கத்திக் குத்து

அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து பெண் காவலர் ஆசீர்வாவைக் குத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். அதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாகப் பெண் காவலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த போலீஸார், பெண் காவலர் ஆசீர்வாவிடம் விசாரித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்து போலீஸார் பெண் காவலரைக் கத்தியால் குத்தியவரை தேடிவருகின்றனர். ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது.



source https://www.vikatan.com/news/crime/railway-woman-police-stabbing-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக