Ad

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

சென்னை: டிராம் வண்டி முதல் மெட்ரோ வரை - ஒரு தடக் தடக் டைம் டிராவல்! #MadrasDay2022

சென்னை தலைநகரம் முன்பு மதராசு, மெட்ராஸ், சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சுமார் 1 கோடி மக்கள் வாழும் இந்நகரம், உலகின் பழைமையான மிகப்பெரிய நகரங்களுள் ஒன்று. இந்தியாவின் டெல்லி, மும்பை, கல்கத்தா எனப் பல பெரும் நகரங்களிலிருந்தும் பல்வேறுபட்ட சிறு நகரங்களில் இருந்தும், தமிழகத்தின் மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கு விரைவு ரயில்களில் தினமும் பல லட்சம் பேர் வந்து செல்கிறார்கள் இப்போது. இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது போக்குவரத்து என்றால் அது மிகையில்லை.

மெட்ராஸ் டே - சென்னை

ஒரு நகரம் வளர்ச்சியடைய முக்கிய காரணமாக இருப்பது போக்குவரத்து. அதிலும் பெரும் பங்கு வகிப்பது ரயில் போக்கு வரத்துதான். ஒவ்வொரு ரயில் வந்து சென்னை ரயில் நிலைய பிளாட்பாரங்களில் நிற்கும்போதும் பல ஊர்களைக் கொண்டு வந்து இறக்கிவிடுவதுபோல் இருக்கும். புறநகர் ரயில் சேவைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. இப்படி சென்னையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய டிராம் வண்டிகள் முதல் மெட்ரோ ரயில்கள் வரை இங்கு பார்ப்போம்.

டிராம் வண்டிகள்

1895-ம் ஆண்டு மே 7-ல் சென்னையில் முதன்முதலாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஊர்ந்தன. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் சென்னையில்தான் முதலில் ஓடியது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களின் லண்டன் நகரில்கூட அப்போது எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடவில்லை. இங்கு அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமெரிக்காவில் ஓடியது என்றால், சென்னை எத்தகைய பெருமை வாய்ந்த நகரம் என்பதை அறியலாம்.

டிராம் வண்டி | சென்னை

மணிக்கு 7 மைல் வேகத்தில் செல்லும் இந்த டிராம் வண்டிகளில் பயணிக்க, ஒரு மைலுக்கு சுமார் 6 பைசா கட்டணம் என வசூலிக்கப்பட்டிருக்கிறது. மாத சீஸன் டிக்கெட்டும் நடைமுறையில் இருந்திருக்கிறது. 24 கிலோ மீட்டர் தூரத்துக்கு போடப்பட்டிருந்த தடங்களில் 97 டிராம்கள் வரை பயணித்தன. ஒரு டிராமில் 150 பேர் வரை பயணிக்க முடியும்.

சென்னையின் பாரீஸ் கார்னர், சென்ட்ரல் ரயில் நிலையம், மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை, லஸ், மயிலாப்பூர், சாந்தோம், புரசைவாக்கம், எனப் பல வழித்தடங்களில் இந்த டிராம் வண்டிகள் இயங்கின. தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் பயணம் செய்தனர். பின்னர், பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் 1953-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதியுடன் சென்னையில் டிராம்கள் ஓடுவது நிறுத்தப்பட்டது.

சென்னை விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில்

சென்னையின் எழும்பூர் ரயில் நிலையத்தில் நுழைந்தாலே பெரும்கூரையின் நிழலும் ஒலிபெருக்கியில் வரும் ரயில்வே அறிவிப்பின் குரலும் டிராலிகளின் கரகர சத்தமும் மக்கள் நடமாட்டமும் ஒருவித உணர்வைக் கொடுக்கும். அதுவும் வெளியூர்களுக்குச் செல்லும் ரயில் முகப்பு நடைமேடையில் ஒருவித உணர்வும், புறநகர் ரயில்கள் இயங்கும் கடைசி பிளாட்பாரத்தில் வேறுவித பரபரப்பான உணர்வும் ஏற்படும்.

இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு மனநிலையை அடையலாம். அதுவும் டெல்லி செல்லும் பிளாட்பாரத்தில் வட மாநிலத்தவர்கள் நிறைந்திருப்பார்கள்.

புறநகர் மின்சார ரயில் | சென்னை

சென்னை, 1931-ம் ஆண்டிலேயே தனக்கென ஓர் புறநகர் இருப்பு வழியை அமைத்துக்கொண்டது. சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை செல்லும் வழித்தடத்தில், மீட்டர் கேஜ் அளவுப்பாதையாகத் தொடங்கப்பட்டது. 1951-ம் ஆண்டு தென்னக ரயில்வே உருவாகிய பிறகு, சென்னையின் முக்கிய மீட்டர் கேஜ் முனையமாக, எழும்பூர் ரயில் நிலையம் மாறியுள்ளது.

எழும்பூரிலிருந்து இலங்கையின் கொழும்புக்கு ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. எழும்பூர் – தனுஷ்கோடி போட் மெயில், தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல இணைப்பு ரயில் என இயங்கியிருக்கிறது. பின்னர், 1985-ம் ஆண்டு, சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் வரை செல்லும் வழித்தடம் அகல இருப்புப் பாதையாகச் செயல்படுத்தப்பட்டது. இதில் 6 வழித்தடங்கள் உள்ளன. இந்த துரித ரயில்களின் அகலப் பாதை மொத்தம் 896 கி.மீ கொண்டவை.

வட்ட இருப்புப் பாதை

சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் - திருவள்ளூர் அம்பத்தூர் - வியாசர்பாடி - வண்ணாரப்பேட்டை - ராயபுரம் - சென்னை கடற்கரை என மொத்தம் 191 கி.மீ சுற்றி இயங்குகிறது.

புறநகர் மின்சார ரயில் | சென்னை

பறக்கும் ரயில்

1980-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே சென்னையின் நகர மையத்தை இணைக்கும் விதமாக ஒரு இருப்பு பாதையை அமைக்க அரசாங்கம் ஆலோசித்தது. 1985-ம் ஆண்டில் முறையான திட்டமிடல் செய்யப்பட்டு, 1991-ல் பறக்கும் ரயில் இயங்க கட்டுமானம் தொடங்கப்பட்டு, 1997-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.

ஒவ்வொரு பறக்கும் ரயில் நிலையமும் வெவ்வேறு கட்டடக்கலை வல்லுநரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் வழித்தடத்தில் 6 மின் இணைப்புப் பெட்டிகள் உடைய ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையிலிருந்து திருமயிலை - வேளைச்சேரி - பரங்கிமலை வரை கிட்டத்தட்ட 25 கி.மீ தூரம் பயணிக்கிறது.

மெட்ரோ ரயில் | சென்னை

மெட்ரோ ரயில்

இன்றைய காலத்துக்கேற்ப பயண நேரத்தைக் குறைக்கவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மெட்ரோ ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த ஒரு விரைவான ரயில் போக்குவரத்து ஆகும்.

இந்த மெட்ரோ ரயில் ஜூன் 29, 2015-ம் தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலை முதன்முதல் ப்ரீத்தி என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து நாள்களிலும் இயங்குகின்றன.

இப்படி, சென்னை காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு வளர்ச்சி அடைந்துகொண்டே சென்னை மக்களையும் வாழ வைக்கிறது.

மெட்ராஸ் குறித்து உங்களுக்கு எந்தளவு தெரியும்? சுவாரஸ்யமான ஒரு க்விஸ் உங்களுக்காக... இங்கே க்ளிக் செய்யவும்!



source https://www.vikatan.com/lifestyle/from-chennai-tram-to-metro-train-sweet-memory

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக