Ad

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

``5 மாவட்டங்களில் தகவல் இல்லை; ஆனாலும் 1,272 சாதிய வன்கொடுமைகள்” - எவிடென்ஸ் அமைப்பு சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் நடந்த சாதிய வன்கொடுமைகள் குறித்து எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிரிடம் கேட்டபோது, "கடந்த 2021-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து எஸ்.சி, எஸ்.டியினர் மீது நடத்தப்பட்ட சாதிய வன்கொடுமைகள் குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல்களை திரட்டினோம். இதில் திண்டுக்கல், திருவள்ளூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரிகள் தகவல் அளிக்கவில்லை. ஒருசில மாவட்டங்கள் முழுமையான தகவல்களை அளிக்கவில்லை. 32 மாவட்டங்களில் கிடைக்கப்பெற்ற தகவல் மூலம் 1,272 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது தெரிய வந்தது.

தீண்டாமை கொடூரம்

வன்கொடுமை சம்பவங்களில் முதல் 9 இடங்களில் 4 தென் மாவட்டங்களும், 3 கிழக்கு மாவட்டங்களும் 2 வடக்கு மாவட்டங்கள், மேற்கில் 1 மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. 1,272 சம்பவங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடி சாதியினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான சம்பவங்கள் 609-ம், கொடூர ஆயுதங்கள் மூலம் தாக்கப்பட்ட சம்பவங்கள் 293-ம், 33 கொலைகள், 43 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 52 கொலை முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளன.

எவிடென்ஸ் கதிர்

பெண்கள் மீது 70 சாதி ரீதியான வன்கொடுமை சம்பவங்கள், சிறுமிகள் 91 பேர் மீது பாலியல் வன்முறை சம்பவங்கள், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீது 53 பாலியல் டார்ச்சர் சம்பவங்கள் நடந்துள்ளன. பட்டியலின மக்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட 7 சம்பவங்கள் நடந்துள்ளன. 'தமிழ்நாடு அரசு பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்' கீழ் 88 பட்டியல் சாதிப் பெண்கள் பாதிக்கப்படிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் தகவல் வாங்கவில்லை. மீதியுள்ள திண்டுக்கல், திருவள்ளூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்கள் இதுவரை தகவல் தரவில்லை. கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை வந்துள்ளது. எங்கள் கணிப்பின்படி 1,400 சம்பவங்களுக்கு மேல் நடந்திருக்கலாம்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தண்டனை 5 முதல் 7 சதவிகிதமே கிடைக்கிறது. பல வழக்குகளில் விடுவிக்கப்படுகின்றனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 2015-ல் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டபோது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 2 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்குகளை விரைவாக நடத்த அனைத்து மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். மாநில அளவிலான கண்கானிப்புக்குழு கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறைமுறை கூடி ஆய்வு செய்ய வேண்டும். ஆட்சி மாறியபின்பு அதற்கான குழு அமைத்தும், ஆய்வு நடத்துவதில் ஆர்வம் இல்லை. தேக்க நிலையே உள்ளது.

சாதிய வன்கொடுமை

கடந்த 2019-ல் 1,144, 2020-ல் 1,274 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது. 2021-ல் 5 மாவட்டங்கள் பற்றிய தகவல் இல்லாமலயே 1,272 சாதிய வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

வன்கொடும சம்பவங்கள் குறைய வழக்குகள் விரைவாக நடைபெற வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்காமல் தண்டனை பெற தேசிய அளவில் உள்ளதுபோல் மாநில அளவில் இலவச உதவி எண் அறிவிக்கப்பட வேண்டும்.

வன்கொடுமை வழக்குகள் விவரம்

அனைத்து மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டனை பெற அனைத்து துறைகள் ஆலோசிக்க வேண்டும். தீண்டாமைக்கு எதிராக அரசு விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/scst-atrocities-case-increased-in-tamilnadu-last-year

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக