Ad

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

ஆலங்குளம்: காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஆய்வாளர் - பணிச்சுமை காரணமா?!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் சாந்தகுமாரி. அவர் தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு மதுரை மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு வந்த அவருக்கு ஏற்கனவே ஏற்பட்ட விபத்து காரணமாக உடல்நிலையில் பாதிப்பு இருந்துள்ளது.

இந்த நிலையில், மதுரையில் இருந்து மாறுதலாகி ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு வந்த பின்னரும் உடல் நலம் சரியில்லாமல் போயிருக்கிறது. அதனால் பொறுப்பேற்ற நாள்களிலேயே மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். விடுப்பு முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிக்கு வந்த அவருக்கு உயரதிகாரிகள் பணி தொடர்பாக டார்ச்சர் கொடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுப்பில் சென்றது தொடர்பாக உயரதிகாரிகள் அவரிடம் கடுமையாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்.

ஆலங்குளம் காவல்நிலையம்

இந்த நிலையில், அவர் ரோந்துப் பணிக்குச் செல்வதற்குத் தயாராக இருந்த நிலையில், கழிப்பறைக்குச் சென்று திரும்பியபோது தள்ளாட்டத்துடன் வந்துள்ளார். பின்னர் காவல் நிலையத்தின் உள்ளேயே தரையில் மயங்கிச் சரிந்திருக்கிறார். அவர் மீது மருந்து வாடை வந்ததால் அங்கிருந்த சக காவலர்கள் அதிர்ச்சியைந்துள்ளனர். அவர் மீது கொசு மருந்துக்கான வாடை வந்ததால் அவர் அதைக் குடித்தது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் இருந்த ஜீப் ஒட்டுநர் மற்றும் பெண் காவலர்கள் அதிர்ச்சியுடன் கீழே விழுந்துகிடந்த ஆய்வாளரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நெல்லையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு முயன்ற இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் பேசியபோது, ``ஆய்வாளர் சாந்தகுமாரி, பணியில் கொஞ்சம் மெதுவாக செயல்படுவார். அதனால் அவரை அதிகாரிகள் அடிக்கடி கடிந்துகொள்வார்கள். ஏற்கெனவே அவர் பணியாற்றிய இடங்களில் அதிகாரிகள் திட்டியதால் மன உளைச்சல் அடைந்த அவர் கொசுமருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்திருக்கிறது. அது போல ஆலங்குளம் காவல் நிலையத்திலும் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அவருக்கு மனநல ஆலோசனை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தனர்.

பெண் ஆய்வாளர் சாந்தகுமாரி பணிச்சுமை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சி செய்தாரா அல்லது உடல்நிலை சரியில்லாததால் விஷம் அருந்தினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



source https://www.vikatan.com/news/crime/a-lady-inspector-tries-to-commit-suicide-in-police-station

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக