Ad

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

சர்ச்சைக்குரிய ஆசாத் காஷ்மீர் கருத்து - சி.பி.எம் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் மீது வழக்கு!

கேரள மாநிலத்தை ஆளும் சி.பி.எம் கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கே.டி.ஜலீல். இதற்கு முந்தைய பினராயி விஜயன் ஆட்சியில் கேரள உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். மேலும் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா-வுக்கு உதவியதாகவும், யு.ஏ.இ தூதரக மூலம் புனித நூல் என்ற பெயரில் கடத்தலில் ஈடுபட்டதாகவும் இவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறை எம்.எல்.ஏ ஆகியும் புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்பதால் அமைச்சர் ஆக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டவர் கே.டி.ஜலீல்.

இவர் கேரள சட்டசபையின் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்த குழு கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக கே.டி.ஜலீல் சில வாரங்களுக்கு முன் காஷ்மீர் சென்றிருந்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட கே.டி.ஜலீல் பயணக்கட்டுரை ஒன்றையும் பதிவு செய்திருந்தார். அந்த கட்டுரையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆசாத் காஷ்மீர் என்றும், ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனவும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து கே.டி.ஜலீலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

கே.டி.ஜலீல்

தேச ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதாக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் கே.டி.ஜலீலை கண்டித்தன. சி.பி.எம் கட்சியும் அது அவரின் தனிப்பட்ட கருத்து என ஒதுங்கிக்கொண்டது. இந்த நிலையில், நாட்டின் நன்மைக்காகவும், மக்களின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்க அந்த வரிகளை திரும்பப்பெறுவதாக கே.டி.ஜலீல் கூறியிருந்தார். இந்த நிலையில் எழுமற்றம் பகுதியைச் சேர்ந்த அருண் மோகன் என்பவர் கே.டி.ஜலீல் மீது வழக்கு பதியவேண்டும் என திருவல்லா ஜுடிசியல் ஒன்றாம் கிளாஸ் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த கோர்ட் கே.டி.ஜலீல் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில் கீழ்வாய்ப்பூர் போலீஸார் கே.டி.ஜலீல் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் அரசியல் அமைப்பை அவமானப்படுத்தியதாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் உள்நோக்கத்துடன் கருத்துக்களை வெளியிட்டதாகவும் ஐ.பி.சி 153(பி), தேசிய மரியாதைச் சட்டம் செக்‌ஷன் 2 படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/case-filed-against-kerala-ex-minister

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக