விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் திருக்கோவிலூர் தொகுதியில் மட்டும் பாஜக போட்டியிட்டது. அந்த தொகுதியின் வேட்பாளராக வி.ஏ.டி.கலிவரதன் களமிறக்கப்பட்டார். முகையூர் எனும் தொகுதி இருந்தபோது (தற்போது வேறொரு தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது) முன்னாளில் பா.ம.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர். சில கருத்து வேறுபாட்டின் காரணமாக பா.ம.க கட்சியிலிருந்து பிரிந்து பா.ஜ.க-வில் இணைந்தவர், தற்போது விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவராக உள்ளார். கடந்த வருடம் இவர் மீது பாலியல் புகார் எழுந்ததை தொடர்ந்து, தற்போது கொலை மிரட்டல் புகாரும் காவல்நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ம் தேதி பா.ஜ.க-வை சேர்ந்த காயத்ரி எனும் பெண், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வி.ஏ.டி.கலிவரதன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, காயத்ரி பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறமிருக்க, பா.ஜ.க-வைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மனைவி கலிவரதன் மீது கொலை மிரட்டல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் பா.ஜ.க-வில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த 8-ம் தேதி இரவு, இவரது வீட்டுக்கு, 10 பேருடன் வந்த பா.ஜ.க வேட்பாளர் கலிவரதன் கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபுவின் மனைவி செல்லம்மாள், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
Also Read: விழுப்புரம்: `அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை’ - மாவட்ட பா.ஜ.க தலைவர் மீது மகளிரணிச் செயலாளர் புகார்
8-ம் தேதி அன்று காலை 11 மணி அளவில் பிரபுவுக்கு போன் செய்து பேசிய கலிவரதன், நடந்து முடிந்த தேர்தலில் தொகுதி நிலவரம் குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. பின் 12 மணி அளவில் மீண்டும் பிரபுவை தொடர்பு கொண்டு பேசிய கலிவரதன். `உங்கள் பகுதியிலிருந்து நமக்கு எவ்வளவு வாக்குகள் விழுந்திருக்கும்' என பிரபுவிடம் விசாரிக்க, `குறைவாகவே இருக்கும்' என பிரபு பதில் கூறினாராம். இதனால் கோபமடைந்த கலிவரதன், தகாத வார்த்தைகளால் பிரபுவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு 8.30 மணி அளவில் சுமார் 10 ஆதரவாளர்களுடன், கையில் தடியுடனும் பிரபுவின் வீடடுக்கு கலிவரதன் சென்றதாக கூறப்படுகிறது. பிரபுவை வீட்டில் தேடியதாகவும், அப்போது பிரபு இல்லாததால் அவரது மனைவி செல்லம்மாளை ஆபாச வார்த்தைகளால் திட்டி `கொன்று விடுவோம்' என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து செல்லம்மாள், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வி.ஏ.டி கலிவரதன் மீதும், உடன் வந்திருந்த அடையாளம் தெரியாத பத்து நபர்கள் மீதும் 147, 294 மற்றும் 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர்.
source https://www.vikatan.com/news/politics/police-case-against-thirukovilur-bjp-candidate-vat-kalivaradhan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக