தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் அரசியல் கட்சியினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு வேட்டையாடி வருகின்றனர். உள்ளூர் தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய தலைவர்களும் தங்களுடைய கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Also Read: ``கங்கனாவுடன் மூணு மாத டிராவல்... 25 கிலோ எடை கூடிய ரகசியம்!" - `தலைவி' குறித்து காயத்ரி ரகுராம்
தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிகயின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்துக்கு வந்து வாக்கு சேகரித்தார்.
விருதுநகர் மாவட்டத்துக்கு வந்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், ``வட இந்தியாவில் உள்ள வாரணாசி, இந்துக்களின் புனித பூமியாகத் திகழ்கிறது.
அதே போல, தென்னிந்தியாவின் ராமேஸ்வரமும் புனிதமான தலமாக விளங்குகிறது. இந்த இரு புனித இடங்களுக்கும் பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக மதுரை - வாரணாசி இடையே விமான சேவை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தென்னிந்திய மற்றும் வட இந்தியப் பக்தர்கள் பயனடைவார்கள். வாரத்துக்கு ஒரு விமான சேவையையாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாரணாசியில் தமிழக அரசுக்கு ஒரு நிலத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். அங்கு தமிழக அரசு சார்பில் கட்டடம் கட்டப்பட்டு தமிழகத்தில் இருந்து வாரணாசி செல்லும் பக்தர்கள் தங்கிக் கொள்ள வசதியாக அமையும்.
காமராஜர், இதர பிற்பட்ட வகுப்பினருக்காக (ஓ.பி.சி) முதன்முதலாக சட்ட திருத்தம் கொண்டுவந்தார். நாடு சோதனையான காலகட்டத்தில் இருந்தபோது நாட்டு நலனுக்காக கிங் மேக்கராகவும் செயல்பட்டவர். குடும்ப ஆட்சி, ஊழலுக்கு எதிராகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைத்தவர்.
பனையேறும் தொழிலைக் கொண்டவர்களான நாடார், பண்டாரி, ஜெய்ஷ்வால், அலுவாலியா ஆகியோர் நாடு முழுவதும் இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் நடவடிக்கையால் அவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களாக உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மேயர்கள் ஜெய்ஷ்வால் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவின் பின்தங்கிய சமூகத்தின் தலைவராக காமராஜர் விளங்குகிறார். அதனால் காமராஜருக்கு வாரணாசியில் ஒரு சிலை அமைத்துக் கொடுக்க வேண்டும்” என அந்த மனுவில் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/gayathri-raguram-asks-yogi-aadityanath-a-statue-for-kamaraj-at-varanasi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக