Ad

திங்கள், 12 ஏப்ரல், 2021

கோவை: உணவகத்தில் தாக்குதல்; தொடர் புகார்கள்! - சர்ச்சை உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

கோவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு சிலர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இரவு 11 மணிவரை 50 சதவிகித இருக்கைகளுடன் உணவகம், தேநீர் கடைகள் இயங்கிக் கொள்ளலாம் என்பது தமிழக அரசின் உத்தரவு.

கோவை உணவகம்

Also Read: கோவை: உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களைத் தாக்கிய போலீஸ்... நடந்தது என்ன?!

இதனிடையே, இரவு 10.20 மணிக்கு அந்த உணவகத்துக்குள் நுழைந்த காட்டூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்து, தனது லத்தியால் உணவக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கடுமையான தாக்கினார். இதில், பெண் உள்ளிட்ட சிலர் பலத்த காயமடைந்திருந்தனர்.

இதுதொடர்பான சி.சி.டி.வி வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், உணவக உரிமையாளர் தரப்பில் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, முத்துவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது. “இது உச்சகட்ட அராஜகம்.

காயம்

காவல்துறையை கவனித்தால்தான் கடையை நடத்த முடியும் என்கிற சூழ்நிலை இங்கு நிலவுகிறது. இதற்கு பணியிடை மாற்றம் என்பது தீர்வாகாது. உதவி ஆய்வாளர் முத்து மீது வழக்குப்பதிவு செய்யப்படவேண்டும்” என்று உரிமையாளர் மோகன்ராஜ் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், காவல்துறை ஆணையரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் விட்டிருந்தது. முத்து மீது மேலும் பல புகார்கள் உள்ளன. பேருந்து நிலையத்தில் படுத்துக் கொண்டிருக்கும் யாசகர்கள் மீது தடியடி நடத்துவது, இரவு நேரத்தில் டீ குடிப்பவர்கள் மீது தண்ணீர் எடுத்து ஊற்றுவது, கடைகளில் வசூல் வேட்டை நடத்துவது என்று வியாபாரிகள் புகார்களை அடுக்குகின்றனர்.

பெண் காயம்

இந்நிலையில், முத்துவை சஸ்பெண்ட் செய்து கோவை காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-controversy-si-muthu-suspended

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக