Ad

திங்கள், 12 ஏப்ரல், 2021

வாணியம்பாடி: `பெண் போலீஸுக்கு கொலை மிரட்டல்!’ - தி.மு.க பிரமுகரை தேடும் காவல்துறை

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் மே 2-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் அந்த கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறை நான்கு மாடி கட்டடத்துக்குள் இருப்பதால் மூன்று அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மின்னணு வாக்கு இயந்திரங்கள்

இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி கண்காணிப்புப் பணியிலிருந்த வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ராணி என்பவரை ஜோலார்பேட்டை தொகுதி தி.மு.க வேட்பாளர் தேவராஜின் உறவினரும் அக்கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளருமான அசோகன் மற்றும் சிம்மனபுதூரைச் சேர்ந்த தண்டபாணி ஆகியோர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அரசியல் கட்சியினர் பார்வையிட அனுமதியுள்ளது.

அப்படிச் செல்லும்போது பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், தி.மு.க பிரமுகர் அசோகனும், தண்டபாணியும் வருகை பதிவேட்டில் பதிவிடாமல் மையத்துக்குள் அடிக்கடி சென்று வந்தனர். அவர்களை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் ராணி, ‘மையத்துக்குள் நீங்கள் செல்லும் ஒவ்வொரு முறையும் பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த தி.மு.க பிரமுகர் அசோகனும், தண்டபாணியும் சப்-இன்ஸ்பெக்டர் ராணியை ஒருமையில் பேசி திட்டியதாகக் கூறப்படுகிறது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் அறைக்கான பாதுகாப்பு

மேலும் பெண் சப்-இன்ஸ்பெக்டரை இருவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சப்-இன்ஸ்பெக்டர் ராணி வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில், தி.மு.க பிரமுகர் அசோகன் மற்றும் தண்டபாணி ஆகிய இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் என மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் கைது செய்வதற்காக போலீஸார் அவர்களது வீட்டுக்குச் சென்றபோது, தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது. அவர்கள் எங்கு பதுங்கியிருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/threat-to-female-police-sub-inspector-case-against-dmk-executive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக